* கோடையில் வெளியூர் பயணம் செல்லும்போது, பக்கத்து வீட்டாரிடம் எந்த ஊருக்கு செல்கிறோம் என்று சொல்லி விட்டு ஊருக்கு செல்வோம். அத்துடன் நிற்காமல், ஒரு காகிதத்தில், நாம் பயணிக்கும் வண்டி எண், பெயர், தங்கும் லாட்ஜ் அல்லது உறவினர் விலாசம் மற்றும் அவர்களுடைய தொலைபேசி எண் போன்ற விவரங்களை எழுதிக் கொடுத்து விட்டு செல்லுங்கள். நீங்கள் இல்லாத நேரத்தில் ஏதேனும் அவசர காரணமாக உங்களை தொடர்பு கொள்ள அது உதவும்.
*சுற்றுலா பயணத்தின் போது, இரண்டு சிறிய அல்லது மீடியம் சைஸ் சூட்கேசில் பொருட்களை பிரித்து எடுத்து செல்லுங்கள். அப்போதுதான் சூட்கேசுகளை தூக்கும் போது கைகளும், தோள்களும் அவ்வளவு சீக்கிரம் வலிக்காது.
* பயணத்தின் போது, பெண்கள் தங்க நகைகள் அணிவதை, தவிர்ப்பது அவசியம்.
* இரவு நேரப் பயணங்களில், ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பாதையில், குடும்பத்துடன் நடந்து செல்வதை தவிர்க்கவும்.
* இரவில், சரியான வெளிச்சம் இல்லாத
ஏ.டி.எம்.,களில் இருந்து பணம் எடுப்பதை தவிர்க்கவும். பணப் பரிமாற்றம் தவறாகி, பணம் எடுத்தது போல், ஏ.டி.எம்., காட்டி விடலாம்.
* பயணத்தின் போது, உடன் சின்ன குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால், தரமான ஓட்டலில் சாப்பிடுங்கள்; இதன்மூலம், வயிற்று உபாதைகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.
* சுற்றுலா சென்று, வண்டியிலிருந்து இறங்கும்போது, பெட்டி படுக்கைகளை, எண்ணி சரிபார்ப்போம். அதேபோன்று, நாம் அணிந்து செல்லும் கைக்கடிகாரம், மூக்குக் கண்ணாடி, பர்ஸ், மோதிரம், தோடு, மூக்குத்தி போன்ற பொருட்களும் சரியாக இருக்கின்றனவா என்று பார்ப்பது நல்லது. ஏதாவது, நழுவி விழுந்திருந்தாலும், இறங்குவதற்கு முன், கண்டுபிடித்து விடலாம்.
* வெளியில் எடுத்து செல்லும் தயிர் சாதம், புளிக்காமல் இருக்க, அரிசியை வேக வைக்கும்போது, ஒரு கப் அரிசிக்கு, மூன்று கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் சேர்த்து வேக வைத்து, நன்றாக கலந்து ஆறியவுடன், ஒரு டீஸ்பூன் தயிர் சேர்த்து கலந்தால், நீண்ட நேரம் புளிக்காமல் இருக்கும்.
* நீண்ட தூரம் ரயிலில் பயணிக்கும் போது, இரண்டு, மூன்று வேளைக்கான சப்பாத்திகளை எடுத்து செல்லலாம். அவை உலர்ந்து அட்டை போல் ஆகிவிடாமல் இருக்க, சப்பாத்தி வைத்த டிபன் பாக்ஸ் அல்லது பாத்திரத்தின் அடியில் ஒரு வெள்ளை துணியை விரித்து, சில இஞ்சி துண்டுகளை போட்டு வைத்தால், சப்பாத்தி சாப்ட்டாக இருக்கும்.
* பயணத்தின் போது தங்கும் ஓட்டல் அறையின் சாவிக் கொத்தில் உங்கள் மொபைல்போன் எண்ணை டோக்கனில், இணைத்து வைக்கலாம். சாவி தொலைந்து போனாலும், திரும்பக் கிடைக்க வாய்ப்புண்டு.
* சுற்றுலா செல்லுமுன், பிரீசிரை துடைத்து, திறந்து வைக்கவும். பிரிட்ஜின் ஒவ்வொரு தட்டிலும், சிறு பிளாஸ்டிக் ஷீட் வைத்து, அதில் அடுப்புக்கரி போட்டு வைக்கவும். இந்த கரியை, பிரீசர் உள்ளேயும், வைக்கலாம். கரித்துண்டு ஈரத்தை உறிஞ் சிவிடும்.
* சுற்றுலாவின் போது, முன்பின் தெரியாத தங்கும் விடுதிகளில், தங்க நேர்ந்தால், ஒன்றிரண்டு வாளியில் தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். நள்ளிரவில் குழாயில் தண்ணீர் வருவது நின்று விட்டால், கைவசம் இருக்கும் தண்ணீர், கைக்கொடுக்கும்.