மூவகை மாணவர்
ஆசிரியர்களைப்பற்றிக் கருத்துத் தெரிவிக்கிற நன்னூல் மாணவர்களை மறந்துவிடவில்லை. இவர்களை மூவகையாகப் பிரித்து வழக்கம்போல் தக்க உவமைகள் கூறி விளக்குகிறது.
பாடல் 38.
அன்னம் ஆவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடம்ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்.
1.அன்னம், ஆ (தலை மாணவர்)
2.மண், கிளி (இடை மாணவர்)
3.இல்லிக்குடம், ஆடு, எருமை, சல்லடை (கடை மாணவர்)
1. இலக்கியங்களில் இடம் பெற்றுள்ள கற்பனைப் பறவையாகிய அன்னத்திடம் நீர் கலந்த பாலை வைத்தால் அது நீரை விலக்கிப் பாலை மட்டும் பருகுமாம்."நீரொழியப் பாலுண் குருகு"என்றார் நாலடியார். அன்னத்தைப் போன்ற மணவர், ஆசிரியர் கற்பித்தவற்றுள் தேவையற்றதைத் தவிர்த்து முக்கிய பகுதியை நினைவில் இருத்துவர்.
புல் கண்ட இடத்தில் ஆ வயிறார மேய்ந்து, நிழல் கண்ட நிலத்தில் படுத்து அசை போடும். முதல் வகை மாணவரும் ஆசிரியர் சொன்ன யாவையும் உள்வாங்கி ஓய்வுநேரத்தில் நினைவுக்குக் கொண்டுவந்து அலசி ஆய்ந்து மூளையில் பதித்துக் கொள்வார்.
2. மண் என்பது இங்கு நிலத்தைக் குறிக்கிறது. உழைப்புக்கேற்ற பலனை வயல் வழங்குவதுபோல் ஆசிரியர் எந்த அளவு சிரமப்பட்டுப் போதிக்கிறாரோ அந்த அளவு மாத்திரம் இடை மாணவரிடம் பயன் (ரிசல்ட்) காண்பார்.
கிளியானது சொல்லித் தந்ததைத் திருப்பிச் சொல்லுமே ஒழியப் புதியவற்றைச் சொல்லாது. இடை மாணவரும் ஆசிரியர் கற்பித்ததை மட்டும் அறிவர், தாமாகச் சிந்தித்து மேம்பாடு அடையார்.
3. இல்லிக்குடம் – ஓட்டைக்குடம். இதையொத்த மாணவர் தம் நினைவாற்றல் குறைபாடு காரணமாக எல்லாம் மறப்பர். மூளையில் எதுவுந்தங்காது.
ஓரு செடியின் இலைகளுள் சிலவற்றை மட்டும் தின்றுவிட்டு அடுத்த செடியை அணுகும் ஆடு போன்றார் எந்த ஆசிரியரிடமும் நிலையாகக் கல்லார்.
குட்டையைக் கலக்கி நீர் குடிக்கும் எருமை, ஆசிரியரை வருத்திப் பாடங்கற்கும் மாணவர்க்கு உவமை.
உணவுப்பொருளைக் கீழே விட்டுவிட்டு மண்கட்டி, கல், குச்சி முதலியவற்றைப் பிடித்து வைத்துக்கொள்ளும் சல்லடை போல் சில மாணவர் பாடத்தின் முக்கிய பகுதியைக் கவனத்தில் கொள்ளாமல் ஆசிரியர் சொன்ன குட்டிக்கதை,நகைச்சுவைத் துணுக்கு முதலியவற்றை நினைவிற்கொள்வர்.
மற்றபடி சோம்பல், கெட்டபழக்கம் முதலிய குறைகளை நன்னூல் கண்டுகொள்ளவில்லையோ என்ற கேள்வி எழலாம். அவற்றை உடையவர் மாணவரே அல்லர் என்று நன்னூல் ஒதுக்கிவிடுகிறது.