கடவுள் நம்பிக்கை பத்தி ஒரு நாள் வீட்டுல பேச்சு வந்தது. 'கடவுள் இருக்கார். அவர் பார்த்துப்பார்னு நாம எந்த முயற்சியுமே செய்யாம இருக்கிறது சரியா?'ன்னு கேட்டான் காலேஜ் படிக்கிற பையன்.
'கடவுள் நேரே வந்து நமக்கு உதவ மாட்டார். தன் பிரதிநிதியா யாரையாவது அனுப்பி வைப்பார். நாம் ஆஸ்பத்திரிக்குப் போறோம். அங்கே டாக்டர் மூலமா நமக்கு உதவுவார் கடவுள். ஆஸ்பத்திரிக்குப் போறது நம்ம முயற்சி. அதுக்கான பலனை டாக்டர் மூலமா கொடுக்குறது கடவுளோட அருள்!'னு விளக்கினார் அப்பா.
அப்பா! 'கடவுள் நம்பிக்கைக்கும் டாக்டர் கொடுக்கும் மருந்து, மாத்திரைகளுக்கும் என்ன சம்பந்தம்? மருந்துகளுக்கு அதுக்குண்டான பவர் இருக்கத்தானே செய்யும்? அது நோயைக் குணப்படுத்தாதா?' என்று கேட்டான் பையன்.
'அப்படி இல்லேப்பா! இந்த மருந்தை எடுத்துக்கிட்டா குணமாயிடும்னு நம்ம மனசு நம்பணும். அதுக்கு முதல்ல நாம தைரியமா இருக்கணும். கடவுள் நம்பிக்கை உள்ளவன் தைரியத்தைக் கைவிட மாட்டான்'னு சொன்ன அப்பா, ஒரு குட்டிக் கதை சொன்னார்.
ஒரு படகில் கணவனும் மனைவியும் ஜாலி ரைடு போனாங்க. ஒரு ஆர்வத்துல கரையை விட்டு விலகி, ரொம்ப தூரம் கடலுக்குள்ளே போயிட்டாங்க. அப்போ கடுமையா புயல் வீச, படகு தள்ளாடிச்சு.
மனைவி பயந்துபோய் 'படகை கரைக்குத் திருப்புங்க'ன்னு பதறினா. 'முடிஞ்சா திருப்பமாட்டேனா? அது என் கன்ட்ரோலை மீறிப் போயிட்டிருக்கு'ன்னு சொன்னான் கணவன். அது அவள் பயத்தை இன்னும் அதிகமாக்கிடுச்சு. ஆனா, அவன் குரல்ல கொஞ்சம்கூட பயத்துக்கான அறிகுறியே இல்லே.
'என்னங்க, நமக்கு நீச்சல் கூடத் தெரியாது. என்ன ஆகுமோன்னு, நான் பதறிக்கிட்டிருக்கேன். நீங்க கொஞ்சம்கூட பதற்றமே இல்லாம உட்கார்ந்திருக்கீங்க!' என ஆச்சரியமா கேட்டா மனைவி.
கணவன் சட்டுனு எழுந்தான். ஆப்பிள் நறுக்க வெச்சிருந்த கத்தியை எடுத்து, மனைவியின் கழுத்துல கூர் முனையை வெச்சான். அவ கொஞ்சம்கூட பயப்படலே! 'என்ன இது விளையாட்டு? உக்காருங்க. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க'ன்னா.
'கத்தியால குத்த வந்துமா உனக்கு பயம் வரலே?'ன்னு கேட்டான் கணவன். 'எதுக்கு பயப்படணும்? நீங்க என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்கீங்கன்னு எனக்குத் தெரியாதா? நீங்க சும்மா தமாஷ் பண்றீங்கன்னு கூடவா என்னால புரிஞ்சுக்க முடியாது?' என்றாள் மனைவி.
'அதேதான்! கடவுள் என் மேல நிறைய அன்பு வெச்சிருக்கார்னு எனக்குத் தெரியும். இந்தப் புயல், கடல் சீற்றம் எல்லாம் அவரோட விளையாட்டு. மத்தபடி, எனக்கு எந்த ஆபத்தும் அவர் ஏற்படுத்த மாட்டார்னு நான் மனப்பூர்வமா நம்பறேன்! என்றான் கணவன்.
கொஞ்ச நேரத்துல பாதுகாப்புப் படகு வந்து அவங்களை மீட்டுக்கிட்டுப் போச்சு!
நமது முயற்சிகளுக்கு அப்பாற்பட்ட விஷயங்கள் நடக்கும்போது தைரியத்தை இழக்காமலிருக்க, கடவுள் நம்பிக்கை ஒண்ணுதான் கைகண்ட மருந்துன்னு இப்போ பையனுக்கும் புரிஞ்சுது.