Friday, February 6, 2015

ரேஷன் நியாய விலைக்கடை முறைகேடு - இணையதளம்

மதுரை நெல்பேட்டையைச் சேர்ந்த கே.ஹக்கீம் 'தி இந்து' உங்கள் குரல் மூலம் தொடர்பு கொண்டு ஒரு தகவலை பதிவு செய்துள்ளார். நியாய விலைக்கடைகளில் பொருட்களின் இருப்பு விவரத்தை, தினசரி கடை வாசலில் எழுதிப் போட வேண்டும். ஆனால், எந்தக் கடையிலும் அவ் வாறு செய்வதில்லை. சேவைக் குறைபாடு தொடர்பாக பு0கார் தெரிவிக்க வேண்டிய அதிகாரிகளின் தொடர்பு எண்களையும் மறைத்து விடுகிறார்கள்.

எங்கள் பகுதியான சுங்கம் பள்ளிவாசல் தெருவில் உள்ள ரேஷன் கடையிலும் இவ்வாறு சரக்கு இருப்பு விவரத்தை மறைப்பது, பொருட்களை வழங்காமலேயே விநியோகித்ததாக கணக்கு காட்டுவது தொடர்ந்தது. ஒவ்வொரு கடையின் சரக்கு இருப்பு விவரமும் தினந்தோறும் மாலையில், தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை இணைய தளத்தில் பதிவு செய்யப்படும் விவரத்தை அறிந்தேன்.

அதைத் தொடர்ந்து ஒருமாதமாக கவனித்து வந்தேன். அந்தக் கடை யில் 12.1.15 முதல் 20.1.15 வரை 8 நாட் களும் 2970 கிலோ புழுங்கல் அரிசி இருப்பு இருப்பதாக இணையத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. 21-ம் தேதி திடீரென 121 கிலோ புழுங்கல் அரிசி மட்டுமே இருப்பதாக பதிவு செய்யப்பட்டது.

அக்கடையில் சரக்கு வாங்குபவர் களில் பாதிப்பேர் என் உறவினர்கள், நண்பர்கள்தான். அவர்கள் மொத்த மாக சென்று அரிசி வாங்கவில்லை என்பது உறுதியாகத் தெரியும். எனவே, 21.1.15 அன்று ஒரே நாளில் 2800 கிலோ அரிசி யாருக்கெல்லாம் வழங்கப்பட் டது என்ற விவரத்தை தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்டேன்.

அதோடு மக்களுக்கு விழிப் புணர்வை ஏற்படுத்தும் வகையில் மறுநாள் முதல் (22-ம் தேதி) எங்கள் பகுதியில் உள்ள 3 ரேஷன் கடை களிலும் சரக்கு இருப்பு குறித்த விவரங்களை நானே, எங்கள் வீட்டு முன்பு எழுதிப் போடத் தொடங்கி னேன். நான் போர்டு வைத்த ஒரு மணி நேரத்தில் கூட்டுறவு சார்பதிவாளர் முருகன் என்னைத் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட விற்பனை யாளரை உடனே இடமாற்றம் செய்கிறோம் என்றார்.

சொன்னபடியே, இப்போது வேறு விற்பனையாளர் வந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.கூடுதல் விவரங்களை அறிவதற்காக ஹக்கீமை நேரில் சந்தித்தோம்.

"நடுத்தர மக்களுக்கும், ரேஷன் கடைகளுக்குமான தொடர்பு முற்றிலும் அறுந்துவிட்டது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் ரேஷன் கார்டை பயன்படுத்துவதே இல்லை. மக்கள் வாங்காததால் விலையில்லா அரிசி உள்ளிட்ட பொருட்கள் எல்லாம் வெளியிடங்களுக்கு கடத்தப்படுகின்றன.

இதைத் தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இணைய தளத்தில், உங்கள் கடைக்கு எவ்வளவு நுகர்பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இன்றைய தினம் பொருள் இருப்பு எவ்வளவு? போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன.

http://www.consumer.tn.gov.in/fairprice.htm என்ற வலைத்தள முகவரிக்குச் சென்று பக்கத்தில் நோ யுவர் ஷாப் அலாட்மெண்ட் (Know your shop allotment), நோ த கரண்ட் ஸ்டாக் இன் யுவர் ஷாப் (Know the current stock in your shop) போன்றவற்றில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

முறைகேடு நடந்திருப்பதாக சந்தேகம் எழுந்தால், அதே இணையதளத்தில் இருந்தே புகார் செய்யும் வசதியும் உள்ளது. அல்லது அந்த பகுதிக்குரிய உயர் அதிகாரிகளின் தொடர்பு எண்ணை இணையம் வழியாகத் தெரிந்து கொண்டு புகார் செய்யலாம்.

பேஸ்புக் உள்ளிட்ட விஷயங்களுக்காக இன்டர்நெட்டை தாராளமாகப் பயன்படுத்தும் நாம், அத்தியாவசிய உணவுப்பொருட்கள் ஏழைகளுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் விஷயத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் இருந்து ஒரு இளைஞன் கிளம்பினால் போதும், ரேஷன் கடை முறைகேடுகளை முற்றிலும் தடுத்து விடலாம் என்றார்..