உன்னைப் பயமுறுத்தும் இன்னல் இதுவே. மேல் நாட்டாரைப் பின்பற்றி நடிக்கும் மயக்கத்தில் நீ மூழ்கியிருக்கிறாய். ஆதலால் எது நல்லது, எது தீது என்பதை இனிமேல் நீ ஆராய்ச்சியாலோ, பகுத்தறிவாலோ, விவேகத்தாலோ அல்லது சாஸ்திரங்களின் அபிப்ராயத்தைக் கொண்டோ தீர்மானிக்கப் போவதில்லை.
வெள்ளையர் புகழ்கிற, விரும்புகிற எந்த ஒரு கருத்தும் அல்லது பழக்கவழக்க முறையும் நல்லனவாகின்றன. அவர்கள் வெறுக்கிற இகழ்கிற விஷயங்கள் எவையானாலும் அவை தீயனவாகின்றன. இதைக் காட்டிலும், அறிவீனத்தை நிரூபிக்கக்கூடிய மிகத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்?
நமது இயல்புக்குத் தக்கபடி நாம் வளர்ந்து முன்னேற வேண்டும். அந்நிய நாட்டுச் சமூகங்கள் நம்மீது ஒட்டவைத்திருக்கும் முறைகளின் வழியில் நாம் செயல்பட முயலுவது வீண் ஆகும். அது நடவாது. நம்மைத் திரித்து, மாற்றிச் சித்திரவதை செய்து பிற தேசங்களின் உருவில் ஆக்க முடியாது.
இங்ஙனம் அருளிய ஈசனை நாம் போற்றுவோமாக. இதனால் பிற இனத்தவரின் சமூக ஏற்பாடுகளை நான் கண்டிக்கவில்லை. அவை அவர்களுக்கு நல்லது. நமக்கல்ல. அவர்களுக்கு அமுதம் ஆவது நமக்கு நஞ்சாக ஆகலாம். நாம் கற்க வேண்டிய முதற்பாடம் இது. அவர்களின் சாஸ்திர ஆராய்ச்சிகளுக்கும், சமூக ஏற்பாடுகளுக்கும், அவர்களது பரம்பரையான கொள்கைகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் தற்கால நிலையை அடைந்திருக்கின்றனர்.