Monday, October 27, 2014

எதிரி எனக்குள்ளே இருக்கிறானா?

​ஒருவர் தனது குணநலன்களை வளர்த்துக்கொள்வது முடிவற்ற ஒரு செயல்முறை. உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்திலும், இந்த நொடியில்கூட உங்கள் குணநலன் பரிணமிக்கிறது. தற்போதும், இந்தச் செயல்முறையை நிறுத்துவது சாத்தியம் அல்ல. நீங்கள் பார்ப்பது, முகர்வது, கேட்பது, ருசிப்பது அல்லது தொடுவது எல்லாமே உங்கள் குணநலன்களை, உங்கள் ஆதாரமான இயல்பை மாற்றிக்கொண்டிருக்கின்றன. அன்றாட அனுபவங்கள் உங்கள் குணநலனை உருவாக்குகின்றன. உங்களால் இந்த மாற்றத்தை நிறுத்த முடியாவிட்டாலும் அதைக் கட்டுப்படுத்த முடியும். நீங்கள் பார்க்கும் அனைத்து விஷயமும், நீங்கள் பழகும் மனிதர்களும், நீங்கள் செல்லும் இடங்களும் உங்களது குணநலனை உருவாக்குகின்றன.

உண்மையான குணம்

நீங்கள் அனைவராலும் விரும்பப்படுபவராக இருக்கலாம். அருமையான பண்புடையவர் என்று உங்களைப் பற்றி மக்கள் கூறலாம். அவர்கள் பார்வையில் படுவதை வைத்து அப்படிச் சொல்கிறார்கள். அது நல்லதுதான். ஆனால் ஒருவரின் உண்மையான குணம் அல்லது இயல்பு என்பது யாரும் இல்லாதபோது அவர் எப்படி இருக்கிறார் என்பதைப் பொறுத்ததே. நீங்கள் வீட்டில் தனியாக இருக்கும்போது, உங்களை எடைபோட யாருமே இல்லாதபோது நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்? தெருவில் தனிமையில் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போகும் போது, நீங்கள் என்ன யோசிக்கிறீர்கள்? என்ன பதில் சொல்கிறீர்களோ, அதுதான் உண்மையிலேயே நீங்கள். உங்கள் பதில் உங்களுக்குத் திருப்தி தருகிறதா? அப்படியானால் நீங்கள் அருமையானவர். அப்படி இல்லையென்றால் அது தொடர்பாக என்ன செய்ய விரும்புகிறீர்கள்?

நீங்கள் எதை உள்வாங்குகிறீர்களோ, உங்களை எது உள்வாங்குகிறதோ அதைப் பொறுத்ததே உங்கள் இயல்பு அமையும்.

சுய பரிசோதனை

நீங்கள் தொலைக்காட்சியில் எதைப் பார்க்கிறீர்கள்? என்ன இசை கேட்கிறீர்கள்? யாரைக் கேட்கிறீர்கள்? உங்களுக்கு ஆரோக்கியமான சமூகப் பழக்க வழக்கங்கள் இருக்கின்றனவா? இந்தக் கேள்விகளை எல்லாம் நீங்கள் உங்களிடமே கேட்டுக்கொள்ள வேண்டும். (அதற்குப் பதிலளிக்கவும் வேண்டும்) இது ஒரு சுய கணக்கெடுப்பு. சுய பரிசோதனை.

உங்களை எந்த விஷயங்கள் மகிழ்விக்கின்றனவோ, எந்த விஷயங்களை நீங்கள் அதிகம் வெறுக்கிறீர்களோ, அவைதான் நீங்கள். நான் ஒரு உதாரணம் தருகிறேன்.

எதிர்மறையான எண்ணம் கொண்டவர்கள் அல்லது எதற்கெடுத் தாலும் புகார் சொல்பவர்களுடன் இருப்பதை நான் வெறுக்கிறேன். எப்போதும் குறைபட்டுக்கொள்பவர்கள்

பேசுவதைக் கேட்கும்போது எனது தசை சுருங்குகிறது. ஏன் தெரியுமா?

நான் என்னவாக இருக்கிறேன்

என்பதே இதற்கான காரணம். நான் நேர்மறையான எண்ணம் கொண்டவன். நேர்மறையான நபர்கள் சூழ இருப்பதை விரும்புபவன். நான் ஊக்கப்படுத்துபவன். என்னைச் சுற்றியுள்ளவர்களை ஊக்கப்படுத்த விரும்புபவன். ஆனால் எதிர்மறையான எண்ணமும் புகார் சொல்வதில் நாட்டமும் உள்ளவர்கள் தங்கள் துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறார்கள். எதிர்மறையான நபர்கள் எனக்கு ஆயாசமூட்டுகிறார்கள்.

சமரசம் வேண்டாம்

என்னைப் பற்றி நான் புரிந்துகொண்ட பிறகும் நான் எதிர்மறையான நபர்களை ஊக்குவிக்கிறேன் என்றால் எதிரி என்னிடம் இருக்கிறான் என்று பொருள்.

நான் வளருவதற்கு உதவும் விஷயங்களுக்கும், என்னைப் பிய்த்துப் போடும் விஷயங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நான் புரிந்துகொள்வது என் பொறுப்பு. இந்த உண்மையைப் புரிந்துகொள்வது, நான் ஊக்குவிக்கும் நபர்கள், இடங்கள் குறித்து என்னைப் பொறுப்பாக நடக்கவைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் உள்ள எதிரியைப் போன்ற அம்சங்களை நீங்கள் அடையாளம் கண்டுவிட்டால், அவற்றைத் துண்டிக்கும் முடிவையும் சமரசமின்றி உடனடியாக எடுத்துவிடுங்கள். யாராக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் பயப்பட மாட்டேன் என்று விரட்டுங்கள். இந்த முடிவில் சமரசம் செய்துகொண்டுவிட்டீர்கள் என்றால் அந்தக் கணமே உங்களுக்கு நீங்களே எதிரியாகிவிடுகிறீர்கள்.

யார் எதிரி?

நீங்கள் கேட்கலாம். "நான் மிகவும் பிரியம் வைத்துள்ளவர் அல்லது குடும்ப உறுப்பினர் அப்படிப்பட்டவராக இருந்தால் என்ன செய்வது?" நான் அப்படிச் சொல்லவில்லை. நீங்கள் அவர்களைத் தூரத்தில் வைத்து நேசிக்கலாம் என்பதுதான் என் பதில். (இது உங்களது வாழ்க்கைத் துணைக்குப் பொருந்தாது. அவர்தான் உங்கள் எதிரி என்றால், அது இன்னொரு புத்தகத்திற்கான விஷயம் .)

இது உங்களுக்கான பருவம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்களை மேலும் சிறந்தவராக்குவதற்கான நேசத்தை வளர்த்துக்கொள்ள இதுதான் சிறந்த தருணம். உங்களது நல்வாய்ப்புக்கு இதைப் பயன்படுத்திக்கொள்ள நீங்கள் இந்தப் பருவம் முழுவதையும் கடக்க வேண்டும். உங்களுக்கானவர் யார் உங்களுக்கு எதிரி யார் என்பதை உண்மையிலேயே மதிப்பிடுவதற்கான சமயம் இது.

அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான் வெளியிட்டுள்ள From the HOOD to doing GOOD எனும் நூலிலிருந்து தொகுப்பு