உணவு வணிகர்கள், சந்தையைக் கைப்பற்ற எந்தவிதமான கீழான வழிமுறைகளையும் கடைபிடிக்கத் தயங்குவதே இல்லை. ஒவ்வொரு தேர்தலின்போதும் இந்த உணவுப் பொருள் வணிகர்கள் கட்சிபேதமின்றிப் பலருக்கும் நிதியை வாரி வழங்குகிறார்கள். அதன் பிரதிபலனாக அவர்களுக்கு சந்தை திறந்துவிடப்படுகிறது, அவர்கள் கொள்ளை லாபம் அடைய எந்த எதிர்ப்புமற்றுப் போகிறது.
இந்தியாவில் 11-16 வயது நிரம்பியவர்களின் உடல் எடை ஆண்டுக்கு ஆண்டு அதிகமாகி வருவதாக மருத்துவ அறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு அந்த அறிக்கைக் கூறும் முக்கியக் காரணம், ''ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம். குறிப்பாகக் குழந்தைகளின் சரிவிகித உணவு குறித்துப் பெற்றோர்களிடம் எந்தவிதமான அக்கறையும் காணப்படவில்லை என்கிறது இந்த அறிக்கை.
அத்துடன் தனிமையில் ஒற்றைக் குழந்தையாக வளரும் பிள்ளைகளே அதிக எடை போட்டுவிடுகிறார்கள். காரணம், தனது பாதுகாப்பற்ற உணர்வை போக்கிக்கொள்ள அவர்கள் உணவில் அதிக நாட்டம் கொள்கிறார்கள் என்கிறார்கள். உணவுப் பண்பாடு மிக வேகமாக உருமாறுவதற்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவை புதிதாக அறிமுகமான சமையற்கருவிகளும் கெட்டுப்போகாமல் உணவைப் பாதுகாக்கும் குளிர்சாதனப்பெட்டியும். இவை அடுப்படிக்குள் மூச்சுமுட்ட வேலை செய்த பெண்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கபட்டவை எனப் பாராட்ட வேண்டிய அதே சூழலில் இந்தக் கருவிகளின் வருகை உணவை சந்தைப்படுத்துவதிலும், விற்பனைப் பொருளாக மட்டுமே மாற்றியதிலும் முக்கியப் பங்கை வகித்திருக்கின்றன.
குறிப்பாக, அந்தக் காலங்களில் பெண்கள் விடிய விடிய ஆட்டு உரல்களில் இடுப்பு ஒடிய இட்லிக்கு மாவு அரைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குமாற்றாகக் கிரைண்டர்களின் வருகை இருந்தது. அம்மியில் இழுத்து அரைத்து மசாலா அரைக்க வேண்டிய வேலையையும் உலக்கையில் இடித்துப் பொடிக்க வேண்டிய மசாலாப் பொருட்களையும் மிக்ஸி எளிதாக மாற்றியது. கூடவே, குளிர்சாதனப்பெட்டி வந்துவிடவே தோசை மாவு ஒரு வாரத்துக்குக் கெட்டுப்போகாமல் பாதுகாக்கப்பட நேர்ந்தது.
இதுபோலவே குக்கரின் வருகை, சாதத்தை வடித்துச் சமைக்க வேண்டிய முறையை மாற்றியது. இதனால் வடிகஞ்சி என்ற ஒன்றே இல்லாமல் போனது. அதன் ருசி இன்றைய தலைமுறை அறியாதது.
நான்ஸ்டிக் ஓவன், எலக்ட்ரிக் குக்கர், மைக்ரோ ஓவன், காபி மேக்கர், சாண்ட்விட்ச் மேக்கர்.. எனப் புதிது புதிதாக அறிமுகமான சமையல் கருவிகள் சமைப்பதற்கு உறுதுணை செய்வதற்காகவே உருவாக்கப்பட்டன. ஆனால், இது சமைப்பதை எளிதாக்கியதோடு துரித உணவு வகைகளின் பரவலுக்குக் காரணமாகவும் உருமாறின.
'தமிழர் நாகரிகம்' என்ற நடனகாசிநாதன் தொகுத்த நூலில் தமிழர்களின் மரபான அடுகலன்களும் பரிகலன்களும் பற்றி ஓர் அற்புதமான கட்டுரை வெளியாகியுள்ளது. முனைவர் வேதாசலமும் நாக.கணேசனும் கருணானந்தமும் இணைந்து இந்தத் தகவல்களைத் தொகுத்திருக்கிறார்கள். அதை வாசிக்கும்போது அரிவாணம், ஒட்டுட்டி, கடையால், காரகம், முழிசி, சட்டுவம், கோரம், தவ்வி, தூங்கல், மந்திநி, மிடா, மூழை, வட்டு இலைத்தட்டு எனப் பல்வேறு உணவுக்கலன்கள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன.
குறிப்பாக சங்க காலத்தில் மண்கலன்களையே மக்கள் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார்கள். உட்புறம் கறுப்பாகவும் வெளிப்புறம் சிவப்பாகவும் உள்ள கலன்களே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோலவே ரோமானிய நாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட அரிடைன், ரௌலட்டட் ஆம்போரா போன்ற உயர்வகை அடுகலன்களும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோலவே சீன பீங்கான் கலயங்களும் அடுமனைப் பொருட்களும் தமிழகத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இன்றும்கூடச் சில உணவகங்களில் 'மண்பானைச் சமையல்' என விளம்பரம் செய்கிறார்கள். மண்பானையில் சமைக்கப்படும் உணவின் ருசி அலாதியானது. குறிப்பாக மண்சட்டிகளில் வைக்கப்படும் குழம்பு அதிக ருசி கொண்டிருக்கும். அலுமினிய பாத்திரங்களின் வருகை சமையலில் முக்கிய மாற்றத்தைத் தோற்றுவித்தது. இன்று அதன் அடுத்த நிலை 'நான்ஸ்டிக்' எனப்படும் ஒட்டாத, கரிப்பிடிக்காத பாத்திரங்கள், டெஃப்லான் கோட்டிங் செய்யப்பட்ட பாத்திரங்கள் என நவீன சமையல் கருவிகளின் வருகை, புதிய வணிகச் சந்தையை உருவாக்கியதோடு மரபாகக் கடைபிடிக்கப்பட்ட சமையல் முறைகளையும் மாற்றியமைத்திருக்கிறது.
உணவு விற்பனையில் இன்று காணாமல் போயிருக்கும் முக்கிய அம்சம் அக்கறையும் அறமும்தான். உணவை விற்பவர்கள் அதிக அளவில் லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக அதைப் புசிப்பவன் உடலைக் கெடுக்கிறோம் என அறிந்தே செய்வது மன்னிக்க முடியாத தவறு.
உணவில் மாற்றம் கொண்டுவர வேண்டியதற்கு வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டியதே முதற்படி. மனஅழுத்தமும், வெறுமையும் மிதமிஞ்சிய சுயநலமும்கொண்ட இன்றைய வாழ்க்கை முறையிலிருந்து நாம் விடுபட வேண்டும். அத்தோடு பாரம்பர்யமாக நாம் உட்கொண்டுவந்த சிறுதானியங்கள், கீரைகள், பழங்கள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினையரிசிப் பொங்கல், கேழ்வரகு இட்லி, வெந்தயக்களி, சோள தோசை, கைக்குத்தல் அரிசி சாதம், வரகரிசி உப்புமா, உளுந்தங்களி, உளுந்தஞ்சோறு, எள்ளுத் துவையல், பனங்கருப்பட்டி, நாட்டுவாழைப்பழம், பனங்கிழங்கு... என நாம் தேர்வுசெய்து சாப்பிடத் தொடங்கினால் உடல்நலம் பெறுவதுடன் நமது விவசாயமும் புத்துணர்வு பெறும்.
தமிழகத்தின் மாறி வரும் உணவுப் பண்பாட்டினை பற்றி நினைக்கும்போது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாயின் குறுங்கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.
ஒரு நாள் குழந்தைகள் வீதியில் விளையாடிக் கொண்டிருந்தபோது அதிசயமான தானியம் ஒன்றைக் கண்டெடுத்தனர். கோழி முட்டை அளவில் இருந்த அந்தத் தானியம் மன்னரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்பட்டது. அரசர், இது என்ன தானியம் எனக் கேட்டபோது ஒருவருக்கும் தெரியவில்லை.
இதைப்பற்றி நாட்டிலுள்ள வயதான விவசாயி யாரிடமாவது விசாரிக்குமாறு மன்னர் கட்டளையிட்டார்.
உடனே, ஒரு வயதான விவசாயியை அரண்மனைக்கு அழைத்து வந்தார்கள். அவர் தள்ளாடியபடியே நடந்துவந்தார். கண்பார்வையும் சற்று மங்கியிருந்தது. அவர் தானியத்தைத் தொட்டுப் பார்த்துவிட்டு இதை நான் பயிரிடவில்லை, எனது தந்தையைக் கேட்டால் ஒருவேளை தெரியக்கூடும் என்றார்.
உடனே வீட்டிலிருந்த அவரது தந்தை அழைத்து வரப்பட்டார். அவருக்கு உடல் தள்ளாடவில்லை. ஆனால், கால் தாங்கித் தாங்கி நடந்து வந்தார். அவர் தன்னிடம் காட்டப்பட்ட தானியத்தை உற்றுப் பார்த்துவிட்டு, ''இது எங்கள் காலத்தில் விளைவிக்கப்பட்டது அல்ல. ஒருவேளை எனது தந்தையிடம் விசாரித்தால் தெரியும்'' எனச் சொன்னார்.
உடனடியாக அவரது தந்தையும் அரண்மனைக்கு வரவழைக்கப்பட்டார். அவர் நல்ல திடகாத்திரத்துடன் எந்தக் குறையுமின்றி ஒளிரும் கண்களுடன் உறுதியான கைகால்களுடன் மிடுக்காக நடந்து வந்து தானியத்தைப் பார்த்துவிட்டு 'இது எங்கள் காலத்தில் விளைந்த கோதுமை' எனச் சந்தோஷமாகச் சொன்னார்.
அரசர் வியப்போடு அவரிடம், 'ஐயா தங்களது மகனும் பேரனும் இப்படித் தள்ளாடிய உடல்நிலையில், பார்வையிழந்து, நடக்க முடியாதவர்களாக இருக்கும்போது நீங்கள் மட்டும் எப்படி உறுதியான உடலுடன், சந்தோஷமான முகத்துடன் இருக்கிறீர்கள்?' எனக் கேட்டார்.
அதற்கு அந்த முதியவர், ''எங்கள் காலத்தில் சக மனிதர்களை நேசித்தோம். போட்டி பொறாமை இல்லை. அனைவரிடமும் உண்மையான அன்பு பாராட்டினோம். இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோம். இயற்கை எங்களுக்கு உதவியது. கடுமையாக உழைத்தோம். வாழ்க்கையைக் கொண்டாடி ரசித்து வாழ்ந்தோம். ஆனால், இன்றைக்கு உழைப்பதில் யாருக்கும் ஆர்வமில்லை. அடுத்தவர் சொத்தை அடைய முயற்சிக்கிறார்கள். சுயநலம் பெருகிவிட்டது. அதுதான் இந்த வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்'' என்றார் முதியவர்.
என்றோ டால்ஸ்டாய் சொன்ன ரஷ்யக் கதை தமிழ்ச் சமூகத்தின் இன்றைய நிலைக்கு அப்படியே பொருந்துவதாக உள்ளது. நாம் வளமான நமது விவசாய நிலங்களை இழந்து வருகிறோம். செழித்து விளைந்த நவதானியங்கள், காய்கறிகள், பழங்கள் கீரைகள் அத்தனையையும் கைவிட்டுவிட்டு பிளாஸ்டிக் பாக்கெட்டுகளிலும் டின்களிலும் அடைத்த உணவுகளை, ரசாயனம் கலந்த தானியங்களை வாங்கி உண்ணும் நிலைக்கு வந்திருக்கிறோம்.
தமிழகத்துக்கு என இருந்த தனித்தன்மையான உணவு வகைகள் கைவிடப்பட்டுவிட்டன. உலகெங்கும் ஒரே உணவு என்பது சந்தையை உருவாக்கும் சூழ்ச்சி. அது வேகமாக நம்மிடையே பரவிவருகிறது.
நமது பாரம்பர்யம், உணவை மருந்தாகக் கொண்டிருந்தது. இன்று உணவின் பன்முகத் தன்மை வணிகர்களால் திட்டமிட்டு அழிக்கப்படுவதோடு நமக்கான உணவு உற்பத்தியைத் தடுத்து நிறுத்தி, அயல்நாடுகளில் நம்மைக் கையேந்த வைப்பதும் நடந்து வருகிறது.
துப்பாக்கிகள், பீரங்கிகளை வைத்துக்கொண்டு ஒரு நாட்டை கைப்பற்றுவதை விடவும் உணவு சந்தையைக் கைப்பற்றுவதன் வழியே ஒரு நாட்டை எளிதாக அடிமைப்படுத்திவிடலாம். இன்று இந்திய உணவுச் சந்தையிலும் அதுதான் நண்பர்களே நடந்துவருகிறது.
உணவு குறித்த விழிப்பு உணர்வு ஆரோக்கியத்துக்கான வழிகாட்டுதல் என்ற முறையிலும் அரசியல் ரீதியாக முக்கியமானது என்பதாலும் அதில் நாம் அதிகக் கவனம்கொள்ள வேண்டியிருக்கிறது.
நண்பர்களே, இன்று இந்தியாவெங்கும் நடப்பது உணவு அரசியல். இது பன்னாட்டு வணிகத்தின் சூழ்ச்சி, மோசடியான வலைப்பின்னல், இன்று உணவு வெறும் சாப்பாட்டு விஷயமில்லை. அது மாபெரும் சந்தை. கோடி கோடியாகப் பணம் புரளும் பன்னாட்டு விற்பனைக்களம்.
நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பதை வணிக நிறுவனங்கள் தீர்மானிக்கின்றன. நமது ஆரோக்கியத்தை உறிஞ்சி யாரோ கொள்ளை லாபம் அடிக்கிறார்கள். இதிலிருந்து நாம் விழித்துக்கொள்ளத் தவறினால் எதிர்காலம் நோயாளிகளின் தேசமாக மாறிவிடும் என்பது கவலைக்குரிய நிஜம்.