Friday, August 15, 2014

வந்தால் வரட்டும் முதுமை


அன்பு நண்பர்களே!
சென்ற வாரம்  நான் பணி நிமித்தமாக  புகலூர் சென்று விட்டு  கடந்த வெள்ளியன்று  கரூரில் இருந்து  "பழனி- சென்னை "அதி விரைவு ரயில் மூலம் சென்னை வந்தேன். அப்போது என்னுடன் ஒரு  வயதான பெரியவர்   பயணம் செய்தார்.  அவரது வயது எண்பதுக்கு மேல் இருக்கும்.  பேச்சுவாக்கில்  அவர்  தன்னை  வத்தலக்குண்டு   அரசு மேல்நிலைப் பள்ளியின் முன்னாள்  தலைமை ஆசிரியர் என்று அறிமுகப் படுத்திக்கொண்டார்.  நல்லாசிரியர் விருது  பெற்றவரும் கூட என்று அறிந்து கொண்டேன்.  வயதான பின்  வரும் உடல் பிரச்சினைகளை விட  மிகக் கொடுமையானது "தனிமை " என்றார்.   தற்காலங்களில்  குடும்பங்கள்  சுருங்கி  வரும் நிலையில் வயதானவர்களை கவனிப்பதற்கோ,அக்கறை காட்டுவதற்கோ   ஏன் பேசுவதற்குக்கூட  ஆட்கள் இருப்பதில்லை  என்று  மிகவும் வருத்தப்பட்டார்.  நாங்கள் இருவரும் வெகுநேரம்   கல்வி , சீரழிவுகள்  போன்ற விஷயங்கள் பற்றி   பேசிக் கொண்டு வந்தோம்.  கற்பிப்பது என்பது "பணி "என்ற நிலை மாறி 'தொழில் " என்று  ஆகிவிட்டது என்று   அவரும் சொன்னார்.(நான் முன்னமே சொல்லியிருக்கிறேன்) .சமீபத்தில் நடந்த ஆசிரியர்  பணி தேர்வுகள் பற்றி  மிகவும் நொந்து கொண்டார். "இவர்களே  அறுபது சதம் மதிப்பெண்கள்  போதும் என்றால்  இவர்கள் படிக்காமல் விட்ட  நாற்பது சதவிகித  பாடங்களை இவர்களது மாணவர்களுக்கு  யார் கற்பிப்பார்கள் "என்று  மிகவும் வருத்தப்பட்டார்.

ரயில் நான்கு மணி சுமாருக்கு   சென்னை வந்தடைந்தது. .அதற்கு முன் அவர் தனது மகனின்  கார் டிரைவர் தன்னை  வந்து அழைத்து  செல்வார் என்று என்னிடம்சொல்லிக்கொண்டிருந்தார்.  ஆனால் டிரைவர் வரவில்லை சற்றே கலவரப்பட்ட  அவரால் அவரது டிரைவரை  மொபைலில் தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை.  நான் எனது மொபைலில்  தொடர்பு கொண்டபோது அவரது டிரைவர்  தூங்கி விட்டது தெரிய வந்தது. .அவரது டிரைவர் வருவதற்கு ஒரு அரை மணி நேரம் ஆகும் என்று அறிந்தேன். வண்டி  சென்ட்ரல்  வந்தடைந்ததும்  நான் பெரியவரை இறங்கச்சொல்லி விட்டு  அவரது பொருட்களையும் இறக்கிக் கொடுத்து விட்டு  அவருடன் துணைக்கு  நின்று  கொண்டிருந்தேன். 
"நீங்கள் வீட்டுக்கு புறப்படுங்கள் தம்பி .இங்கேதான்  கூட்டம்  இருக்கின்றதே . நான் பார்த்துக்கொள்கிறேன் " என்றார் பெரியவர்.
"பரவாயில்லை அய்யா. நான் வீட்டிற்கு நாலு மணிக்கே சென்று ஒன்றும் பெரிதாக செய்யப்போவதில்லை. உங்கள் டிரைவர் வரும்வரை நான் உங்களுக்கு துணையாக  நிற்பதில் எனக்கு  சிரமம் ஒன்றுமில்லை " என்றேன்.  பிறகு  மேலும்  ஒரு  அரை மணிநேரம் நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம்.  அதற்குள் அவரது டிரைவரும் வந்து விட்டார். நான் அவருடன் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டேன்.  அப்போது பெரியவர் என் இரண்டு கைகளையும்  தன் இரண்டு கைகளால் பிடித்துக்கொண்டு "தம்பி ! உங்களுக்கு  உங்கள் நேரம்  சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நீங்கள் என்னுடன் எனக்காக செலவிட்ட  இந்த அரைமணிநேரம் என்னைப் பொறுத்த வரையில்  ஒரு பொன்னான நேரம் " என்றார். .அவர் அப்படி சொன்னது எனக்கு மிகவும் சங்கடமாகவும் கூச்சமாகவும் இருந்தது. "ஒரு நல்லாசிரியருக்கு  என் நேரத்தை  செலவு  செய்தது என் பாக்கியம்." என்று சொல்லி விட்டு  நான் வீடு செல்ல திரும்பினேன். ஆனால் அவரது  குரலில் இருந்த ஏக்கம் என்னை  பின் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது. அதன் தாக்கம்  மேலும்சில நாட்களுக்கு  தொடர்ந்தது. "உனக்கும்  இதே நிலை வரும் " என்று  மனம் வேறு பயமுறுத்திக் கொண்டிருந்தது. இரண்டு நாள் முன்னர்  மாலையில்  அலுவலகம் முடிந்து  வீடு திரும்பி தொலைகாட்சி  சானல்களை  ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்த போது  முரசுவில்  "வெள்ளி விழா " திரைப்படம்  ஓடிக்கொண்டிருந்தது. நான்பார்க்கும் சமயத்தில்  "உனக்கென்ன குறைச்சல் " பாடல் ஓடிக்கொண்டிருந்தது. ஜெமினி கணேசன் தன்  பிள்ளைகளால் ஒதுக்கப்பட்டு  விரக்தியில் பாடும் பாடல் அது. மெல்லிசை மன்னர்  பாடுவார். வாலி எழுத்து. குமார் இசை. மிக மிக அருமையான,பொருள் பொதிந்த  பாடல் அது.
"உனக்கென்ன குறைச்சல்  ! நீ ஒரு ராஜா
வந்தால் வரட்டும் முதுமை  ..வந்தா,,,, ல்  வரட்டும் முதுமை
தனக்குத் தானே துணை என நினைத்தால் உலகத்தில்  ஏது  தனிமை.
 என்று பாடுவார்.
அடுத்து வரும் வரிகள் விரக்தியின்  உச்சம்  என்று சொன்னால் மிகை யாகாது.
"கடந்த காலமோ  திரும்புவதில்லை
நிகழ்  காலமோ விரும்புவதில்லை
எதிர் காலமோ அரும்புவதில்லை
இது தானே அறுபதின் நிலை "
வாலி, அந்தப் பாட்டிலேயே இந்தத் தனிமைக்கு ஒரு விடையும் சொல்கிறார்.
"எதையோ தேடும் இதயம்
அதற்கு எண்ணம் தானே பாலம்
அந்த நினைவே இன்று போதும்
உன் தனிமை யாவும் தீரும் "
என்ற முடிப்பார்.
அந்தப் படத்தில் அதற்குப்பின்  இளம் வயதிலேயே  மனைவியை இழந்த ஜெமினி, தன்  தோழியான வாணிஸ்ரீ யை  சிங்கப்பூரிலிருந்து  சென்னைக்கு அழைத்து வருவார்.  அதன் பின் அவரது பிள்ளைகள்  வாணிஸ்ரீயை  மனத்தால்  மிகவும்  துன்புறுத்துவார்கள். அந்தக் காட்சிகள்  மிக உணர்சிகரமாக இருக்கும்.  அன்றைக்கு  நான் இருந்த மனநிலையில்   மேற்கொண்டு அந்தப் படத்தைப் பார்க்க திராணி இல்லாமல்  தொலைகாட்சியை  அணைத்துவிட்டேன்.
"தனிமைக்கு நினைவுகளில் வாழ்வதுதான்  விடையா " என்று எனக்கு  நானே கேள்வி கேட்டுக்கொண்டு அப்படியே  உறங்கி விட்டேன்.
மறுநாள் காலையில், ஹிந்து பத்திரிக்கையில்  "அழகம்மாள் " என்னும்  ஒரு பெண்மணி பற்றி ஒரு செய்தி வந்துள்ளது. அந்தப் பெண்மணிக்கு  வயது  கிட்டத்தட்ட நூறு  என்று  சொல்லபடுகிறது. அவர் பிள்ளையார் பட்டியில்  கோவில் அருகிலேயே  வாழ்ந்து வருகிறார். .அவரது சொந்த  ஊர் குன்றக்குடியாகும். அவருக்கு  வாழ்வில் துணை என்று யாரும்  கிடையாது.  அவர் தனது வாழ்வில் பெரும் பகுதியை  தனிமையிலே  கழித்து விட்டார்.  சிறு வயதிலேயே  அவரது பெற்றோர்  மறைந்து விட்டனர்.  அவரது கணவன் இன்னொரு பெண்ணுடன் ஓடி விட்டான். அவனும் பிறகு  இறந்து விட்டான். . அந்தப் பெண்மணி  தனது தாய் மாமனுக்கு இரண்டாம் தாரமாக  வாழ்க்கைப் பட்டுள்ளார்.  அவரும் இறந்து விட்டார். இந்தப் பெண்மணிக்கு இரண்டு மகள்களும் , இரண்டு  மகன்களும் இருந்திருக்கிறார்கள் . அவர்களும் இறந்துவிட்டார்கள். அவருக்கு எம்ஜியாரை கூடத் தெரியவில்லையாம். ரயிலையே  பார்த்ததில்லையாம். இன்றளவும்  அவர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தரும் பிரசாதம்  மற்றும் பழங்களைமட்டுமே உண்டு  வாழ்ந்து  வருகிறார். யாராவது  அந்த பாட்டியை   தம்முடன் வருமாறு அழைத்தால் "கணேசன்  பார்த்துப்பான் " (பிள்ளையாரை சொல்கிறார்)  என்று வர மறுத்துவிடுவாராம்.இதில்  என்ன ஆச்சரியம் என்றால் அவருக்கு இது வரை ஒரு  சிறு காய்ச்சல் தலைவலி   கூட  வந்ததே  கிடையாதாம். நிஜமாகவே கணேசன் அந்தப் பாட்டியை  பார்த்துக்கொள்கிறான் என்றே தோன்றுகிறது.
என் மனதில் கேள்வி எழுந்த நேரமும் , அதற்கு  மறைமுகமாக  கிடைத்த பதிலும்  இதுதான் - " தனிமையை  பக்தியால் மற்றும், நம்பிக்கையால்  வெல்ல முடியும். நாயன்மார்கள் , ஆழ்வார்கள் பற்றிப் படித்திருக்கிறோம்.  தற்போது ஏன்  அதே போல நாயன்மார்களும் ஆழ்வார்களும் தோன்றவில்லை  என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறேன். இந்தப் பெண்மணியைப் பார்த்தும்  நாயன்மார்களும் ஆழ்வார்களும் இன்னும் இருக்கின்றார்கள் என்றே எனக்குத்  தோன்றுகிறது..படிப்பறிவில்லாத  அந்தப் பாட்டியின் பக்தியும்  நம்பிக்கையும்  எனக்குள் இருக்கும் ஆணவத்தை அழிப்பது போல உணர்கின்றேன்.
என்  பிள்ளைகளிடம் நேற்று  இந்த பாட்டி  பற்றி சொல்லி "அடுத்தமுறை  நாம் பிள்ளையார் பட்டி செல்லும் போது அந்தப்  பாட்டியைப்   பார்த்து அவரது பாதங்களை   தொட்டு வணங்க வேண்டும்" என்று சொன்னேன். அவர்களும் மகிழ்ச்சியுடன்  "போகலாம் அப்பா "  என்றார்கள். என் மனம் நிறைவடைந்தது.
ராமகிருஷ்ணன்
மயிலாப்பூர்