ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது என்பது பொருட்களை வாங்குவதுபோல அல்ல. ஏனெனில், இது உங்களின் தேவை, பட்ஜெட் ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஒரு குடும்பம் எடுக்கும் பாலிசி இன்னொரு குடும்பத்துக்குப் பொருந்தாது. எனவே, ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் முன் அதன் சாதக, பாதகம் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. மேலும், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதற்கு முன் கீழ்க்கண்ட கேள்விகளை நீங்களே கேட்டுக்கொள்வது அவசியம்.
1 பாலிசியின் கவரேஜ் தொகை போதுமானதா?
உங்களுக்கும், உங்கள் மனைவிக்கும் வேலை பார்க்கும் நிறுவனத்தில் குரூப் ஹெல்த் இன்ஷூரனஸ் பாலிசி எடுத்திருந்தாலும், குடும்பத்துக்கு தனியாக ஒரு ஹெல்த் பாலிசி எடுப்பது அவசியம். ஏனெனில், நிறுவனத்தில் எடுத்திருக்கும் இன்ஷூரன்ஸ் பாலிசி யின் கவரேஜ் தொகை உங்களுக்குப் போதுமானதாக இருக்க வாய்ப்புக் குறைவு. எனவே, தனியாக ஒரு டாப்அப் பாலிசி எடுத்துக் கொள்ளலாம்.
குடும்பத்துக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது யோசித்துப் பார்க்க வேண்டும். அதாவது, தனிநபர் பாலிசி எடுக்கப்போகிறீர்களா, ஃப்ளோட்டர் பாலிசி எடுக்கப் போகிறீர் களா என்பதைக் கவனிக்க வேண்டும். தனிநபர் பாலிசி பிரீமியத்துடன் ஒப்பிடும்போது ஃப்ளோட்டர் பாலிசியின் பிரீமியம் குறைவாக இருக்கும். பிரீமியம் குறைவாக இருக்கும் பாலிசியைத் தேர்ந்தெடுக்கும்போது கவரேஜ் போனமானதாக இருக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.
குடும்பத்தில் மூத்த குடிமக்கள் இருக்கும்போது அவர்களுக்குத் தனியாக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுப்பது நல்லது. பொதுவாக, ஃப்ளோட்டர் பாலிசியில் கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்குத்தான் கவரேஜ் கிடைக்கும். ஆனால், சில நிறுவனங்கள் பெற்றோர்களுக்கும் கவரேஜ் கிடைக்கும் வகையில் ஃப்ளோட்டர் பாலிசியை வடிவமைத்துள்ளன.
கவரேஜ் என்கிறபோது நீங்கள் குடியிருக்கும் நகரத்தின் மருத்துவச் செலவை கவனத்தில் கொள்வது அவசியம். நீங்கள் எடுக்கும் பாலிசி கவரேஜ் தொகை மற்றும் நோ க்ளைம் போனஸ் மூலம் கிடைக்கும் கூடுதல் கவரேஜ் ஆகிய இரண்டும் சேர்த்து மருத்துவச் செலவுகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குப் போதுமானதாக இருக்க வேண்டும்.
2எதற்கு க்ளைம் கிடைக்கும், கிடைக்காது?
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்போது நீங்கள் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, எந்தெந்த வியாதிகளுக்கு க்ளைம் கிடைக்கும், எந்தெந்த வியாதிகளுக்கு கிடைக்காது என்பதைத்தான். ஏனெனில், பாலிசிக்கு எவ்வளவு பிரீமியம் செலுத்துகிறீர்கள் என்பதைவிட எதற்கெல்லாம் க்ளைம் கிடைக்காது என்பதைத்ததான் கவனிக்க வேண்டும்.
ஹெல்த் பாலிசி எடுக்கும்போது, இதுவரை உங்களின் உடல்நலம் குறித்த கணிப்பு தவறாகப் போவதற்கான வாய்ப்பு அதிகம். அதாவது, இதுவரை எனக்கும், எனது குடும்பத்துக்கும் எந்தவிதமான வியாதியும் வந்ததில்லை. எனவே, நான் குறைவான அளவு கவரேஜ் கொண்ட பாலிசியை எடுத்துக் கொள்கிறேன் என்று கூறுவது தவறு. வயதாகும்போது வியாதி வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
தேவைகளின் அடிப்படையில் பாலிசியைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அதாவது, நீங்கள் தீவிர நோய் பாதிப்பு, விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மற்றும் பொதுவான மருத்துவச் செலவை சமாளிப்பது என எதற்காக பாலிசி எடுக்கிறீர்கள் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துகொள்வது நல்லது.
ஹெல்த இன்ஷூரன்ஸ் பாலிசியில் சில நோய்களுக்கு நிரந்தரமாகவும், சிலவற்றில் குறிப்பிட்ட காலத்துக்கும் க்ளைம் செய்ய முடியாது. விண்ணப்ப படிவத்தை கவனமாகப் படித்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.
3.பிரீமியத்தைப் பாருங்கள்!
ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கும்முன், நீங்கள் செலுத்தும் பிரீமியத்துக்குத் தரும் மொத்த கவரேஜ் தொகையை ஒப்பிட்டுப் பார்ப்பது அவசியம். சரியான பிரீமியத்தில் விரிவான கவரேஜ் கிடைக்கும் வகையில் பாலிசி இருக்க வேண்டும்.
நீங்கள் எடுக்கும் பாலிசியில் உள்ள அம்சங்களின் அடிப்படையில் மற்ற நிறுவனங்களின் பாலிசியுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். பிரீமியத்தை மட்டும் ஒப்பிடக்கூடாது. மேலும், இப்படி ஒப்பிடும்போது, கோபேமென்ட் (மருத்துவச் செலவில் நாம் கட்ட வேண்டிய சதவிகிதம்) எத்தனை சதவிகிதம் செலுத்த வேண்டும் என்பதையும் சேர்த்துதான் பார்க்க வேண்டும்.
4.மருத்துவமனை நெட்வொர்க்கை கவனியுங்கள்!
இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் நெட்வொர்க் பட்டியலில் உங்கள் பகுதியில் உள்ள சிறந்த மருத்துவமனைகள் உள்ளனவா என்பதைக் கவனிக்க வேண்டும். நெட்வொர்க் மருத்துவமனைகள் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும். அவசர தேவை ஏற்படும்போது விரைவாக மருத்துவமனைக்குச் செல்வதற்கு இது வசதியாக இருக்கும். கேஷ்லெஸ் வசதி உள்ளதா என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும்.
5. பாலிசி புதுப்பிப்பு, நிபந்தனைகளைப் புரிந்துகொள்ளவும்..!
பாலிசியைத் தொடர்ந்து புதுப்பிக்கும்போது, சிகிச்சை எடுத்துக்கொள்ளும் நோய்களுக்கான காத்திருப்புக் காலம் என்பது குறைவாக இருக்கும். பாலிசியில் க்ளைம் எதுவும் செய்யவில்லை எனில் நோ க்ளைம் போனஸ் கிடைக்கும்.
அடுத்து, பாலிசியின் நிபந்தனைகளை நன்றாகப் படித்து புரிந்துகொள்வது நல்லது. பாலிசியில் ஏதாவது புரியவில்லை எனில், அதுகுறித்த சந்தேகத்தை ஏஜென்ட் அல்லது இன்ஷூரன்ஸ் நிறுவனத்தில் கேட்டு தெரிந்துகொள்வது கட்டாயம். பாலிசியில் கையெழுத்துப் போடுவதற்குமுன் இதைச் செய்வது நல்லது.