கல்லூரியில் பயிலும், 'டீன்-ஏஜை' கடந்த இளம் பெண்ணின் மனநிலை, ஆண் - பெண் நட்பு; அவர்களுக்கிடையே முகிழும் காதல்; தனக்கு வரவிருக்கும் கணவன் பற்றிய எதிர்பார்ப்பு; தன் சராசரி சக தோழியரைப் பற்றிய மதிப்பீடு போன்ற எண்ணங்கள், இளம் பெண்களிடையே எப்படி இருக்கும் என்பதற்கு, இதோ ஒரு வாசகியின் கடிதம்:
அந்துமணிக்கு எழுதிக் கொள் வது... எப்படி இருக்கீங்க?
மணி... ஓரிரு நாட்களாக எனக்குள் ஒரு எண்ணம்! உங்கள் நட்பை இழந்து விட்டேனோ என்று! ஏன் என்று தெரியவில்லை. ஆனா, ஒன்று மட்டும் புரிகிறது... உங்கள் நட்பு, என் தகுதிக்கு அப்பாற்பட்டது என்று! நான் ஒருவரிடம் பழக வேண்டும் என்று நினைத்தால், ரொம்ப யோசித்து தான் பழகுவேன். எதுக்குத் தெரியுமா... என் நட்பு முறியக் கூடாது. கடைசி வரை நம்மகிட்ட அன்பா இருக்க மாட்டாங்கன்னு தெரிஞ்சா, அவங்க கூட மனம் விட்டு பேசவோ, பழகவோ மாட்டேன்; ஒரு சிரிப்புடன் நிறுத்தி விடுவேன். அதனாலேயே, என்னை எல்லாரும், 'ரொம்ப அமைதியான பொண்ணு'ன்னு சொல்லுவாங்க. ஆனா, என்னுடைய காலேஜ் லைப் இதற்கு நேர் எதிர். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது... எப்படி இந்த மாதிரி வேறுபாடு என்று!
எனக்கு, மூன்று பெண் தோழிகள் இருந்தால், ஆறு ஆண் நண்பர்கள் இருப்பர். ஆனா, இவங்க யாரும் மோசமானவங்க கிடையாது. இவங்க மூலமாத்தான், பெண்கள் எப்படிப் பட்டவங்கன்னு தெரிஞ்சுது; ஆனா, உடனடியா எதையுமே நான் நம்பலை. மறைமுகமாக நிறைய பேர் மூலமா விசாரித்துப் பார்த்தேன். என் கண்களால் நேரடியாகப் பார்த்தேன்... அவர்களின் மாய ஜால வித்தைகளை நேரடியாக அனுபவித்தும் புரிந்து கொண்டேன்.
பெண்களுக்குள்ளும் எத்தனை விதமான அசிங்கங்கள்! என்னால் நம்ப முடியவில்லை. என்னை, என் கண்களை, காதுகளை, நான் ஆராய்ந்து அறிந்ததை!
இந்த ஆய்வின் மூலம், பெண்கள் எல்லாரும் நல்லவர்கள் இல்லை என்பதும், அனைத்து ஆண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதும், புரிந்தது.
என்னுடன் பேசும், பழகும் ஆண்களில் திருமணமானவர்களும் உண்டு; இளைஞர்களும் உண்டு. ஒருவர் கூட தவறான பார்வையை என் மீது செலுத்தியதில்லை. சாதாரணமாக நாட்டு நடப்புகளை குறித்தே பேசிக் கொண்டிருப்பர். அப்படித் தவறான எண்ணம் இருக்கிறது என்று என் மனதில் பட்டால், அப்புறம் நான், நானாக இருக்க மாட்டேன் என்பதும், அவர்களுக்குத் தெரியும்.
ஓ.கே., தென்... உங்க கிட்ட ஒரு விஷயம் பற்றி எழுத விருப்பம்.
அன்று சனிக்கிழமை... அதிகாலையில் பாலை வாங்கி வைத்தவள், சிறிது நேரம் கழித்து, டீ போடப் போகலாம் என்று நினைத்து, தூங்கப் போனேன். படுத்த பத்தாவது நிமிடம், 'காலிங் பெல்' அடித்தது. இந்த நேரம் யாராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே எழுந்து, கதவைத் திறந்தேன். ஒரு சின்ன பையன் நின்று கொண்டிருந்தான்.
இவனுக்கு எப்படி, 'ஸ்விட்ச்' எட்டியது என்ற ஆச்சரியத்துடன், அவனிடம் வந்த விஷயத்தைக் கேட்டுக் கொண்டே அங்கும், இங்கும் தேடினேன். ஏதேனும் பெரியவர்கள் தென்படுகின்றனரா என்று! ஆனால், ஒருவரையும் காணவில்லை. அதனால், அவனிடமே, 'பெல் அடித்தது நீயா?' என்று கேட்டேன்.
உடனே, 'இல்லை, எங்கம்மா...' என்றான். 'உங்கம்மா எங்கே?' என்று கேட்டேன்.
'நான் இங்கே தான் நிக்கிறேன்...' என்று, பக்கத்து வாசல் மறைவிலிருந்து வெளிப்பட்டார் அந்த வெள்ளைச் சேலை பெண்மணி; இளம் விதவை.
அதிகாலையில், நம் முகத்தில் முழிக்க வேண்டி வருமே என்ற எண்ணம், அவரை மறைந்து நிற்கச் செய்து விட்டது. ஏனோ இந்த சம்பவம், என்னை இன்னும் வேதனைப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இத்தகைய சம்பவங்கள் நகரங்களில் குறைந்து விட்டாலும், கிராமங்களில் இன்றும் காணப்படுகிறது. இப்படிப்பட்டவர்களுக்கு, முற்போக்கான சிந்தனையை தூண்டும் விதமாக நீங்கள் எழுதலாமே...
மேலும், மற்றுமொரு சம்பவம், என்னை சிந்திக்க வைத்து விட்டது. எங்க கல்லூரி ரொம்ப கண்டிப்பு நிறைந்தது. ஆனாலும், காலேஜில் சேர்ந்த ஆறே மாதத்தில், ஒரு காதல் ஜோடி வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டது. எப்படி இவர்கள் சந்தித்தனர்; பேசினர்... எப்படி ஆறே மாதத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்று, எங்களுக்குள் ஒரே குழப்பம்.
ஆறே மாதத்தில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டனரா என்ற எண்ணத்தை விட, இத்தனைக் கண்டிப்பான கல்லூரியில், எப்படி வார்த்தைகளை பரிமாறிக் கொண்டனர் என்ற எண்ணம் எங்களுக்குள். ஏனென்றால், இருவரும் வேறு வேறு ஊர். இது குறித்து, தோழிகள் பேசிக் கொண்டிருப்போம். அப்போது தான், எங்களுக்கு ஒரு அதிர்ச்சி தரும் செய்தி கிடைத்தது. எங்கள் வகுப்பில், இதே போன்று ஐந்து காதல் ஜோடிகள் இருப்பதாக!
உடனே, நாங்கள் தீர்மானித்தோம்... நேரம் கிடைக்கும் போதெல்லாம் இவர்களை, தொடர்ந்து செல்ல வேண்டும் என்று!
முதல் காரியமாக அந்த ஜோடிகள் யார் யாரென்று நைசாக விசாரித்தோம். அப்புறம் அவர்கள் தோழிகள், தோழர்கள் உதவி எந்த அளவு இருக்கிறது என்று கண்காணித்தோம். 'ரிசல்ட்' மூன்று ஜோடிகளுக்கு, தோழிகள் உறுதுணை; ஒன்றுக்கு தோழிகளே இல்லை; இன்னும் ஒன்றுக்கு தோழிகள் கண்டும் காணாதது போல்...
இது இப்படியிருக்க, இவர்கள் எப்படி பேசுகின்றனர் என்று ஆராய்ச்சி செய்ததில், ஓரிரு ஜோடிகளில் இருவரில் ஒருவர் முன்னே போக, ஒருவர் பின்னே போக, கூடவே தோழிகள், தோழர்கள் சேர்ந்து போக, தோழிகளிடம் பேசுவது போல், ஒருவருக்கொருவர் பேசுகின்றனர்.சில நேரங்களில், கண்ணிமைக் கும் நேரங்களில், புத்த கப் பரிமாற்றங்கள்...ஒரு ஜோடியோ வித விதமான சைகைகள், கண்ணசைவுகள்!
நாங்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, கொஞ்ச தூரம் செல்வது போல் சென்று, மறைவான இடம் வந்ததும் பைக்குகளில் ஏறிச் சென்று விடுகின்றனர். இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு ஜோடி, கல்லூரிக்கே ஒழுங்காக வருவதில்லை. ஒரே சுற்றுலா...
இதெல்லாம் ஏன் எழுதுகிறேன் தெரியுமா? நாட்டு நடப்பு இப்படித்தான் இருக்கு. இவர்களின் முடிவையும், உங்களுக்கு எழுதுகிறேன்.
ஒரு ஜோடி இரண்டாம் ஆண்டு ஆரம்பத்திலும், ஒரு ஜோடி மூன்றாம் ஆண்டு ஆரம்பத்திலும், பெற்றோருக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டனர். ஒழுங்காக கல்லூரி வராத ஒரு ஜோடிக்கு, கல்லூரி முதல்வர் டி.சி., கொடுத்து, அனுப்பி விட்டார்.
விஷயம் வீட்டிற்கு தெரிந்ததும், வேறு இரண்டு பெண்களுக்கு, அவர்களின் பெற்றோர் படிப்பையே நிறுத்தி விட்டனர். அவர்களில் ஒருத்தியை வீட்டில், 'ப்ரீ'யாக விட்டிருக்கின்றனர். ஆனால், இன்னொருத்தியையோ வீட்டில் சிறை வைத்து விட்டனர்; அதுவும் சொல்ல முடியாத கொடுமைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
காதலிப்பவர்கள், தன்னை கர்ப்பத்தில் ஏந்திய நாள் முதல், இந்நேரம் வரை, கண்ணின் மணியைப் போல் பாதுகாத்தது வந்தது மட்டுமன்றி, நம்மை வளர்க்க பல இன்னல்களை அடைந்த பெற்றோரை மறந்து விடுவர் போலும்!
எங்களுக்கு தெரிந்து இத்தனை; தெரியாமல் எத்தனையோ!
மணி... என், 'ப்ரெண்ட்ஸ்' எப்பவும் கேட்பாங்க... 'நம்ம இப்படி ஒவ்வொருவரையா, 'பாலோ' பண்றோமே... நாமளும் ஒரு வேளை சந்தர்ப்பவசத்தால், 'லவ்' பண்ண ஆரம்பிச்சா, நம்மளையும், 'பாலோ' பண்ண யாராவது இல்லாமலா இருப்பாங்க'ன்னு!
அதான் நான் சொல்லியிருக்கேன், 'ஆயிரம் பொய் சொல்லி, கல்யாணம் பண்ணு'ன்னு சொல்வாங்க... ஆனா, என்னுடைய திருமணம் நிச்சயிக்கும் நாளில், ஒரே ஒரு பொய் சொல்ல வேண்டும்...' என்று சொல்லியிருக்கேன்.
அது என்னன்னா... 'பொண்ணுக்கு படிப்பு பாக்கி இருக்குதுன்னோ அல்லது அது மாதிரி ஏதாவது ஒரு காரணம் சொல்லி, ஆறு மாதத்திற்கு திருமணத் தேதி குறிக்க விடக் கூடாது. அந்த ஆறு மாதமும், நிச்சயித்தவரை காதலிக்க வேண்டும். காதலென்றால் வாய் வார்த்தை ஒன்றும் பேசக் கூடாது; கண்களால் பேசும் காதலாக மட்டுமே இருக்க வேண்டும். எனக்குப் பிடித்த, 'ஓராயிரம் பார்வையிலே, உன் பார்வையை நானறிவேன்...' என்ற பாடலை, அவர் வாயாலே பாட வைத்து விட வேண்டும்...' என்று சொல்லி இருக்கேன்.
'பார்க்கத்தானே போறோம்...' என்று சொல்லியிருக்காளுக!
காதல் உணர்வுகள் எல்லாருக்குமே உண்டு; எனக்கும் உண்டு. அது, சுகமானது; இனிமையானது. தென்றல் காற்று தீண்டும் போதும், இனிமையான பாடல்களை கேட்கும் போதும் கிளர்த்தெழும்புவது.
ஆனாலும் மணி, அந்த உணர்வுகளுக்கு அடிமையாகி, காதலிக்கும் பெண்களை நினைக்கும் போது, பரிதாபமாக இருக்கிறது.
சாதாரணமா வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்தால் கூட, நல்ல கணவர்கள் அமைவது கடினம். இந்நிலையில், நல்லவர்களைப் போல நடிப்பவர்களை நம்பி, காதலித்து ஏமாறும் பெண்களை நினைத்து, வேதனையாக உள்ளது.
ஒருவேளை காதலிக்கும் போது, தங்கள் காதலர்கள் நல்லவர்கள் போலத் தோன்றுமோ இந்த பெண்களுக்கு? அதெல்லாம் கானல் நீர் என்பது இவர்களுக்கு ஏன் தெரியாமல் போகிறது? ஒன்றும் புரியவில்லை.
— இப்படியே இன்னும் தொடர்கிறது கடிதம்.
எல்லா இளம் பெண்களுமே இவர் போல் மனநிலை கொண்டவர்களா, இவரை போலவே சிந்திப்பரா? தெரியவில்லை.