மனைவி என்பவள்!
என் நண்பர்கள் மூவரை, தெருவில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தேன். அப்போது, நண்பர்களில் ஒருவர், காய்கறி வாங்கி வர, தன் மனைவி சொல்லியதாக குறிப்பிட்டு, புறப்பட்டார். உடனே, மற்றொரு நண்பர், 'இதெல்லாம் லேடீசுங்க வேலைப்பா... உன் மனைவியே செய்யச் சொன்னாலும், 'அது என்னோட வேலை இல்ல'ன்னு சொல்லுவியா... அதை விட்டுட்டு, பொண்டாட்டி சொன்னான்னு மார்க்கெட்டுக்கு போறியே...' என்றார். அருகிலிருந்த மற்றொருவரோ, அவர் சொன்னதை ஆமோதிப்பது போல, 'நானெல்லாம் இதுவரைக்கும் என் மனைவி சொல்லி, எதுவுமே கேட்டதில்லை...' என்று, பெருமைப்பட்டுக் கொண்டார்.
ஆமாம்... மனைவின்னா அவ்வளவு இளக்காரமா? செக்சுக்கு மனைவி வேண்டும்; வீட்டு வேலைகள் செய்றதுக்கும், பிறந்த வீட்டை மறந்துட்டு, கணவனுக்கு பணிவிடை செய்யவும் மனைவி வேண்டும். இது எல்லாவற்றுக்கும் மேலாக, வேலைக்கு செல்லும் மனைவி என்றால், அவளது சம்பளம், கவருடன் வேண்டும். ஆனால், வீட்டு வேலைகளில், மனைவிக்கு ஒத்தாசை செய்வதும், அவளின் சொல்லை கேட்பதும், கேவலமா போச்சா?
ஆணாதிக்கம் கொண்டவர்களே... வீண் ஜம்பம் பேசி, குடும்ப வாழ்க்கையை கெடுத்துக் கொள்ளாதீர்!
சப்தமாக பேசி ஆபத்தில் சிக்கிக்கொள்ளாதீர்கள்!
மதுரையிலிருந்து திண்டுக்கல்லுக்கு பஸ்சில் வந்து கொண்டிருந்தேன். என் அருகில், ஒரு அழகான இளம்பெண், அமர்ந்தார். பஸ்சில் கூட்டம் அதிகமிருந்தது. அப்பெண், என்னிடம், தான் திண்டுக்கல்லுக்கு புதிது என்றும், அங்குள்ள பெண்கள் கல்லூரி பெயரைக் கூறி, அக்கல்லூரிக்கு எப்படிப் போவது என்ற விவரங்களை சற்று சத்தமாக கேட்டாள். இது போதாதா... இந்தக் கால ரோமியோக்களுக்கு!
என் அடுத்த இருக்கையிலிருந்த இளைஞன் ஒருவன், 'எனக்கு தெரியும். நான் கூட்டிச் செல்கிறேன்...' என்று, வலிய வந்து, 'ஜொள்ளு' விட்டான். அப்போதும், இந்த பெண் சுதாரிக்கவில்லை. இதை கவனித்த நான், 'என் வீட்டருகில் தான் உள்ளது. நான், உன்னை கல்லூரியில விட்டுட்டு போகிறேன்...' என்றேன். இது, அவனுக்கு பிடிக்கவில்லை. 'ஆன்டி, உங்களுக்கேன் சிரமம்...' என்றான். உடனே நான், 'என் மகள் போன்ற பெண்ணுக்கு, தாய் ஸ்தானத்திலிருந்து செய்ய வேண்டியது என் கடமை. அதனால், நானே அவளை காலேஜுல விட்டுட்டு போறேன்...' என்றேன். உடனே, அவன் முகம் மாறி விட்டது. அவன் இறங்க வேண்டியது கொடைரோடு என்பதை, அவன், 'டிக்கெட்' வாங்கும் போதே கவனித்திருந்ததால், ஏதோ கெட்ட எண்ணத்துடன் பொய் சொல்கிறான் என்று நினைத்து தான், அவனிடம் இப்படி கூறினேன்.
பெண்களே... புது இடங்களில் பயணம் செய்யும் போது, குறிப்பாக, ரயில் அல்லது பஸ்சில், ஊருக்கு புதியவள் என்பதை பிரகடனப்படுத்தி, கயவர்களுக்கு இடங்கொடுத்து, அவஸ்தைப்படாதீர்கள். அதே போல், பஸ்சில் மொபைல் போனில் உரக்க பேசுவதையும் தவிருங்கள். ஏனெனில், இதுபோன்ற செயல்கள், ஆபத்தை, நாமே விலை கொடுத்து வாங்குவதை போன்றது.