மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் - அரை கிலோ, பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சர்க்கரை - 50 கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து, சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
பூண்டு சட்னி
தேவையானவை: பூண்டுப் பல் - ஒரு கப், காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெயை விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.
இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.