புதிதாக வீடு வாங்கும்போது கட்டடம் கட்டித் தருபவரோடு செய்துகொள்ளும் ஒப்பந்தத்தைப் பலரும் படித்துப் பார்ப்பதே இல்லை. ஏற்கெனவே எல்லாம் பேசியாச்சே, பேசின விஷயங்கள்தானே ஒப்பந்தத்தில் எழுதி இருப்பார்கள் என்றோ, தெரிந்த பில்டர் ஆச்சே! அவரா நமக்குத் துரோகம் செய்யப் போகிறவர் என்றோ அல்லது பெரிய நிறுவனம், எல்லாம் பக்காவாக இருக்கும் என்றோ பல சமயங்களில் அசட்டையாக இருந்துவிடுகிறோம்.
ஆனால், இந்த அஜாக்கிரதையே பிற்பாடு நமக்கு பல சிக்கல்களை ஏற்படுத்தித் தரும் விஷமுள்ளாக மாறி, நிம்மதி இழந்து தவிக்கிறோம். இந்தச் சிக்கலில் நாம் சிக்காமல் இருக்க, வீடு வாங்கும்போது போடப்படும் ஒப்பந்தத்தில் இடம்பெறவேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றி சொல்கிறார் பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு ஃப்ளாட் அண்ட் ஹவுஸிங் புரமோட்டர்ஸ் அசோசியேஷன் தலைவர் மணிசங்கர்.
''இப்போதைய நிலையில் வீடு வாங்குபவர்கள் எல்லா வகையிலும் முழுமையான தெளிவோடும், மிகுந்த முன்யோசனைகளோடும்தான் வாங்குகின்றனர். பல்வேறு வகையில் ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் கிடைப்பதால் ஒப்பந்தங்களும் தெளிவாகவே இருக்கின்றன. எனினும், ஒரு ஒப்பந்தத்தில் கட்டாயம் கவனிக்கவேண்டிய விஷயங்களைச் சொல்லிவிடுகிறேன்.
ஒப்பந்தத்தில் ஈடுபடும் நபர்கள்!
ஒப்பந்தம் போட்டுத் தருபவருடைய பெயர், முகவரி போன்ற விவரங்கள் கட்டாயம் இடம் பெறவேண்டும். பில்டரிடம் இருந்து வாங்குகிறோம் எனில், பில்டருடைய பெயர் தெளிவாகக் குறிப்பிடப்படவேண்டும். ஒப்பந்தம் உங்கள் இருவருக்குமானது மட்டுமே, வேறு யாரையும் கட்டுப்படுத்தாது என்று குறிப்பிடலாம்.
அனுமதிகள்!
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பிலிருந்து வாங்கப்பட்ட கட்டட அனுமதி எண், பிளான் அப்ரூவல் மற்றும் வழங்கப்பட்ட தேதி, அந்தக் கட்டடம் எந்தப் பெயரால் அழைக்கப்படும் என்கிற விவரங்கள் இடம் பெறவேண்டும்.
முகவரி!
நீங்கள் வாங்கும் கட்டடம் அமைந் துள்ள இடத்தின் முகவரி. குறிப்பாக, ஃப்ளாட் எண், எந்தத் தளம், கதவு எண், மனை எண், தெருவின் பெயர், கிராமம் / ஏரியாவின் பெயர் போன்றவைகளை குறிப்பிட வேண்டும். இந்த விவரங்கள் அடிப்படையில் இந்த வீட்டை வாங்க கட்டட ஒப்பந்தக்காரரோடு விவாதித்து ஒப்பந்தங்கள் போடப்படுகிறது என்கிற விவரமும் சேர்க்கவேண்டும்.
காலக்கெடு!
பில்டர் எத்தனை நாட்களில் வீட்டைக் கட்டி ஒப்படைப்பார் என்கிற விவரம் இடம் பெறவேண்டும். குடிநீர் இணைப்பு, கழிவு நீர் இணைப்பு போன்ற அரசு இணைப்புகள் தாமதமானால் அதன்காரணமாகவும் பில்டருக்கு குறிப்பிட்ட காலத்திற்குள் வீட்டை முடிக்க காலதாமதம் ஆகலாம். அப்படி தாமதமாகும்போது இந்த ஒப்பந்தம் பில்டரைக் கட்டுப்படுத்தாது என்று குறிப்பிட்டிருப்பார்கள். இதற்கு நீங்கள் ஆட்சேபம் தெரிவிப்பதன் மூலம், ஷரத்தைக் கொஞ்சம் மாற்றி, பாதிப்பையும் கொஞ்சம் குறைத்துக்கொள்ளலாம்.
பணப் பட்டுவாடா!
வீட்டின் மொத்த மதிப்பு, முன்பணம் பற்றிய விவரங்கள், எத்தனை நாட்களில், எந்தெந்த நிலைகளில் பணம் தரப்பட வேண்டும் என்கிற விவரங்கள். மொத்தப் பணமும் தந்தபிறகு எத்தனை நாட்களில் வீடு ஒப்படைக்கப்படும் என்பது ஒப்பந்தத்துக்குள் வரவேண்டும்.
காலதாமதம்!
வீடு கட்டி முடிக்கப்பட்டபிறகு ஒப்பந்தப்படி நாம் வாங்கிக்கொள்ள காலதாமதம் ஆனாலோ அல்லது பணம் தருவதில் காலதாமதம் ஆனாலோ குறிப்பிட்ட சதவிகிதம் வட்டி தரவேண்டும் (15-லிருந்து 30 சதவிகிதம்) என்கிற ஒரு ஷரத்தையும் சேர்த்திருப்பார்கள். பில்டரோடு பேசி இந்த வட்டி விகிதத்தை முடிந்தளவு குறைத்து ஒப்பந்தம் போடலாம். அல்லது நாம் மொத்தப் பணத்தையும் செலுத்திய பிறகும் பில்டர் வீட்டை கட்டி முடிக்க தாமதப்படுத்துகிறார் என்றால், தாமதமாகும் காலத்திற்கு நஷ்டஈடு வழங்கச் சொல்வது போன்ற ஷரத்தை அவசியம் சேர்க்கவேண்டும். அந்த இடத்தில் வாடகை மதிப்புக்கு ஏற்ப இந்தத் தொகையை நாம் கேட்கலாம். தவிர, வீடு கட்டி முடிக்கப்பட்டப் பிறகு எத்தனை வருடங்களுக்கு பில்டர் அந்த வீட்டுக்குப் பராமரிப்பு வழங்குவார் என்கிற விவரத்தையும் ஒப்பந்தத்தில் தரவேண்டும்.
வரிகள்!
சொத்து வரி, குடிநீர், கழிவுநீர் போன்றவற்றுக்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் சேல்ஸ் டாக்ஸ், சர்வீஸ் டாக்ஸ் போன்றவற்றை செலுத்துவது யார் என்கிற விவரங்கள் கட்டாயம் இடம் பெறவேண்டும்.
மின் இணைப்பு!
ஒவ்வொரு வீட்டிற்கும் தனி மின்சார மீட்டர்களை பொருத்த வேண்டியது பில்டரின் பொறுப்பு. எனவே, அதுகுறித்து ஷரத்தில் சேர்க்கவேண்டும்.
அளவுகள்!
வீட்டைச் சுற்றி உள்ள நான்கு எல்லை அளவுகள். வீட்டின் அமைவிட அளவு, வீடு அமைந்துள்ள இடம், எந்த பதிவு மாவட்டத்தின் கீழ் வருகிறது என்கிற விவரங்கள் இடம் பெற வேண்டும்.
கார் பார்க்கிங்!
உங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கார் பார்க்கிங் இடத்தின் அளவு, அதன் நான்கு மூலை விவரங்கள் போன்றவற்றை குறிப்பிட வேண்டும்.
இதுதவிர, வீட்டின் கட்டுமான பொருட்கள், உள்ளமைப்பு வேலைகள், மின்சார ஒயர்கள், ஃபர்னிச்சர்கள், ஜன்னல், கதவு நிலை போன்றவை எந்த வகை மரத்தால் செய்யப்படும் என்கிற விவரம், டைல்ஸ், மார்பிள்ஸ், மொட்டைமாடி ப்ளோர் போன்றவற்றின் விவரங்கள் இடம்பெற வேண்டும். குறிப்பிட்ட நிறுவன தயாரிப்பு, அளவுதான் வேண்டும் என்றால், அதைக் குறிப்பிட்டும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம்.
சிறிய பில்டர்களிடம் வீடு வாங்கும் போதும் சரி, லைஃப்ஸ்டைல் வீடுகளை வழங்கும் பெரிய கட்டுமான நிறுவனங்கள் என்றாலும் தேவையானதைக் குறிப்பிட்டு ஒப்பந்தம் போட்டுக்கொள்வதே புத்திசாலித்தனம்.
பல இடங்களையும் பார்த்து வாங்கினேன்!
சென்னை வேளச்சேரி பகுதியில் சமீபத்தில் வீடு வாங்கிய ஆர்.விஜயகுமாரின் அனுபவம் இது;
''சிறிய பில்டர்களிடம் நமது தேவைக்கு ஏற்ப ஒப்பந்தங்களைச் சேர்த்தோ அல்லது இருவரும் உடன்பட்டோ சில மாற்றங்களை செய்துகொள்ள முடியும். ஆனால், பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களில் எந்தவிதமான மாற்றங்களையும் கோர முடியாது. அவர்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் வாங்க முடியும் என்பதுதான் நிலைமை.
நான் வீடு வாங்க திட்டமிட்டபோது பல்வேறு வகையிலும் யோசித்து, வீட்டில் கலந்து ஆலோசித்துதான் திட்டமிட்டேன். கவனமாகத் தேடியபிறகும் நான் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி இல்லாமல் சிறு சிறு குறைகள் இருக்கவே செய்தன. வீடு வாங்குவதற்கு முன் அந்த பில்டர் முன்னர் செய்த புராஜெக்ட்களை ஆராய வேண்டும்: ஒப்பந்தங்களைத் தீர படித்துப்பார்த்து திருத்தங்கள் தேவையெனில் செய்யலாம்.
எல்லாவற்றையும்விட முக்கியமானது, வீட்டு வேலைகள் நடக்கும் போது அடிக்கடி சென்று பார்ப்பதும், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி வேலைகள் நடக்கிறதா என்று கண்காணிப்பதும் அவசியம்.''