Saturday, December 8, 2012

வளமான வாழ்க்கைக்கு திடமான திட்டங்கள்

நாற்பது என்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான வயது. காரணம், இளமைக் காலத்தின் கடைசிப்படியும், முதுமையின் முதல்படியும் இந்த நாற்பது வயதில்தான் வந்து போகிறது. இந்த வயது மனிதர்கள் அலுவலகம் அல்லது பிஸினஸ் வாழ்க்கையில் உச்சத்தைத் தொட்டிருப்பார்கள். குழந்தைகள் உயர்நிலைப் பள்ளியில் இருப்பார்கள். பெரிதாக ஒரு வீடு, ஆபீஸ் போய்வர ஒரு கார், பத்து நாட்களுக்குக் குடும்பத்தோடு ஜாலியாக வெளிநாட்டுப் பயணம், குழந்தைகளின் எதிர்காலத்துக்கு, நமது எதிர்காலத்துக்குத் தேவையான பணத்தைத் தனித்தனியாக முதலீடு... இப்படி ஒவ்வொருவரும் செய்திருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஆனால், நம்மில் பலரோ இந்த வயதில்தான் ஒரு பெரும் குழப்பத்தைச் சந்திக்கிறோம். அதுவரை மனைவி சொன்னதை எல்லாம் தப்பு என்று ஒதுக்கியவர்கள், அதன்பிறகு 'அவங்கச் சொல்றதுலயும் உண்மை இருக்குமோ' என்று யோசிக்க ஆரம்பிப்போம். நமது எதிர்காலத்தில் ஒரு பெரிய ஓட்டை விழுந்துள்ளதுபோல் தோன்றும். இன்னும் சிலர், எதிர்காலத்திற்கு எந்த பாதுகாப்பையும் செய்துகொள்ளாமல் இருந்துவிட்டோமே என்றுகூட நினைப்பார்கள். இந்த வயதில் தொழிலில் நஷ்டம் அல்லது நல்ல சம்பாத்தியம் தந்த வேலையை இழந்தால் அதைத் தாங்கிக்கொண்டு, மீண்டு வருவது கடினம்தான். பிரஷர், சுகர் வந்துவிடுமோ என்று பயம் வரும். இதுபோல் பல குழப்பங்கள் வந்து, எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்ய முடியாமல் திக்குமுக்காட வைக்கும்.
ஆனால், நாற்பது வயதுக்குள்  கட்டாயம் செய்திருக்க வேண்டிய விஷயங்களைச் செய்திருந்தால்,  நாம் கலங்கி நிற்க வேண்டிய அவசியமே இருக்காது. இன்றைய தேதியில் ஒரு மனிதன் தனது நாற்பது வயதுக்குள் கட்டாயம் செய்திருக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? ஒருவேளை அந்த விஷயங்களை செய்திருக்காவிட்டால், இனி என்ன செய்து சமாளிக்கலாம்? என்பதை  எடுத்துச் சொல்லவே இந்த கட்டுரை.


முதலில், நாற்பது வயதிற்கு உட்பட்ட ஒரு மனிதனின் வாழ்க்கையை மூன்று பகுதிகளாகப் பிரித்துக்கொள்வோம்.


21-27: நம்மவர்கள் 20 அல்லது 21-ல் கல்லூரிப் படிப்பை முடிக்கிறார்கள். வேலை தேடி, நல்ல வேலை கிடைத்து செட்டில் ஆவதற்கு ஓரிரு ஆண்டுகள் ஆகிவிடும். எப்படியும் 25 வயதில் செட்டில் ஆகிவிடுவார்கள். 27-ல் பெரும்பாலானவர்களுக்குத் திருமணம் ஆகிவிடும். திருமணம் ஆகும் வரை கிடைக்கும் பணத்தைச் சேமிப்புக் கணக்கிலேயே விட்டுவைக்காமல்,  மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யத் தொடங்கலாம். 



இப்படி சேமித்தப் பணத்தைத் தனது திருமணம், வாகனம் வாங்குதல் மற்றும் குடும்பச் செலவுகளுக்காகப் பகிர்ந்துகொள்ளலாம். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. நன்றாகச் சம்பாதிக்கிறோமே என்பதற்காக கண்டபடி செலவு செய்வதும் கூடாது. காரணம், அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர வாய்ப்புண்டு!


சம்பாதிக்க ஆரம்பித்ததும், ஒரு டேர்ம் பிளான் எடுத்துக்கொள்வது கட்டாயம். பணியிடத்தில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் தராதபட்சத்தில், சொந்தமாக எடுத்துக்கொள்வதும் அவசியம்.
இந்தப் பருவத்திலேயே தீர்க்கமாக யோசித்து, ஒரு நீண்டகாலத் திட்டம் தீட்டுவது மிக அவசியம். உதாரணத்திற்கு, வேலையா அல்லது சொந்தத் தொழிலா, தனியாக வீடு வாங்கலாமா, பெற்றோர்கள் தரும் வீடே போதுமா? என்கிற விஷயத்தில் திடமான முடிவு எடுத்துவிடுவது நல்லது. இது நீண்டகாலத்தில் வெற்றிகளை அள்ளிக் குவிக்க உதவும்.


27-35: இந்த வயதுக்குள் குழந்தைகள் பெற்றுவிடுவது அவசியம். எந்த விஷயத்துக்காகவும் அதை ஒத்திப்போடாதீர்கள். அப்போதுதான் நாம் ரிட்டையர்டு ஆவதற்குள் நம் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் செட்டில் ஆவார்கள்.


இக்காலகட்டத்தில் குடும்பம், குழந்தைகள், வேலை/தொழில் என நமது பொறுப்பு நிறையவே அதிகரித்திருக்கும். நாம் மேலே கூறியபடி, ஹெல்த் மற்றும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுத்திருக்காவிட்டால், இக்காலகட்டத்தில் எடுத்துவிடுவது மிக மிக அவசியம்.


வீடு என்பது நமது ஒவ்வொருவரின் கனவு. அந்தக் கனவை நனவாக்குவதற்கு இதைவிட உகந்த தருணம் வேறு இருக்க முடியாது. காரணம், இந்த வயதில் வீட்டுக் கடன் வாங்கினால், நாம் ரிட்டையர்டு ஆவதற்குள் இ.எம்.ஐ. முடித்து, வீட்டை நமக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொள்ள முடியும்.
இந்த வயதில்தான் குடும்பத் தலைவன் மற்றும் தலைவி ஆகிய இருவருக்கும் வீட்டை அழகுபடுத்தவும், ரசிக்கவும், கொண்டாடவும் நேரம் மற்றும் சக்தியும் இருக்கும். அடுத்த பத்து, பன்னிரண்டு வருடங்களில் குழந்தைகள் காலேஜில் நுழைய ஆயத்தம் ஆவார்கள். அவர்களின் உயர்படிப்புக்குத் தேவையான பணத்தை இந்த வயதிலிருந்து சேமிக்கத் தொடங்க வேண்டும்.
குழந்தைகளின் திருமணத்திற்கு அவர்களே சம்பாதித்துக்கொள்வார்கள் என்றாலும், நாம் ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதற்கும் இப்போதே தயாராகத் தொடங்குவது நல்லது. எல்லாவற்றிற்கும் மேலாக, ஓய்வுக்காலத்திற்கு என இந்த வயது முதலே கொஞ்சம் கொஞ்சமாகச் சேமிக்கத் தொடங்கிவிடுவதும் நல்லது.


35-40: முதலிரண்டு பகுதிகளில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டவர்கள் இந்தக் காலத்திலாவது அவற்றை செய்ய கடைசி வாய்ப்பு. இதற்கு மேலும் எதிர்கால வாழ்க்கைப் பற்றி எந்த கவலையும் இல்லாமல் இருந்தால், அதனால் நீங்கள் அடையக்கூடிய இழப்பு மிக மிக அதிகமாக இருக்கும். கிடைக்கிற வருமானத்தில் ஒவ்வொரு தேவைக்கும் நிறைய பணத்தை வேறு வழியில்லாமல் ஒதுக்க வேண்டியிருக்கும். கூட்டு வட்டியின் வளர்ச்சி வெகுவாகக் குறைந்துவிடும். இதனால் ஒரு பாதுகாப்பற்ற மனநிலை உருவாகும். சேமிப்போ, முதலீடோ பெரிய அளவில் இல்லாததால், எந்த விஷயத்திலும் துணிந்து முடிவெடுக்க பயப்படுவோம். வேலையில்/ தொழிலில் சுணக்கம் ஏற்பட்டால், அதன் பாதிப்பை குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அனுபவிக்க வேண்டியிருக்கும்.


இந்த வயதிற்கு மேல் டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்க நினைத்தால் பிரீமியத் தொகையும் கடுமையாக அதிகரிக்கும். அதேபோல், உங்கள் வீட்டுக் கடனை செலுத்தக் கிடைக்கும் கால அவகாசம் மிகக் குறைவாக இருக்கும். இதனால் நீங்கள் இ.எம்.ஐ.ஆக செலுத்த வேண்டிய பணமும் மிக அதிகமாக இருக்கும்.
எனவே, நாற்பது வயதிற்கு முன் நீங்கள்  அவசியம் செய்திருக்க வேண்டியவை:


1. தனக்கு மற்றும் குடும்பத்தினருக்கு ஹெல்த் இன்ஷூரன்ஸ்.
2. தனக்கும் மற்றும் சம்பாதிக்கும் லைஃப் பார்ட்னருக்கும் டேர்ம் இன்ஷூரன்ஸ்.
3. சொந்த வீடு.
4. குழந்தைகள் கல்லூரி மற்றும் திருமணத்திற்கான முதலீடு.
5. ஓய்வுக்காலத்திற்கான முதலீடு.
6. வாழ்க்கையின் திடீர் ஏற்ற இறக்கங்களை சமாளிக்க எமர்ஜென்ஸி ஃபண்ட்.
7. தேவையைப் பொறுத்து ஏதாவது ஒரு வாகனம்.


சரி, இப்போது உங்களுக்கு நாற்பது வயது. ''சார், நீங்கள் மேலே சொன்ன எந்த ஒரு விஷயத்தையும் நான் செய்யவில்லை. சித்தம்போக்கு சிவம்போக்கு என்று இருந்து விட்டேன். இனி என்ன செய்வது?'' என்று கேட்கிறீர்களா?


முதலில், பதற்றப்படாதீர்கள். பதற்றம் மேலும் தவறுகளைச் செய்ய வைக்கும். தவிர, இப்போதுகூட குடிமுழுகிப் போய்விடவில்லை. உங்கள் எதிர்காலத்திற்கு நீங்கள் நன்றாகத் திட்டமிடலாம். இதுவரை எதையும் செய்யாதவர்கள் கீழ்க்கண்ட வரிசையில் முன்னுரிமை தந்து,  ஒவ்வொன்றையும் படிப் படியாகச் செய்ய ஆரம்பியுங்கள்.


1. குடும்பத்திற்கும் உங்களுக்கும் தேவையான அளவு ஹெல்த் இன்ஷூரன்ஸ்.
2. உங்களுக்கான டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ்.
3. உங்களின் ஓய்வுக்காலத்திற்கு முதலீடு.
4. உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான முதலீடு.
5. முடிந்தால், சொந்தமாக ஒரு வீடு.
6. உங்கள் வருமானத்தைப் பொருத்து உங்களது இதர தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளுதல்.
நாற்பது வயதிற்குமேல் எதிர்காலத் தேவைகளுக்காக முதலீடு செய்ய ஆரம்பிக்கும் போது, அதிகமான ரிஸ்க் எடுக்காமல் பார்த்துக்கொள்வது அவசியம். போதுமான கால அவகாசம் இல்லாததால், எந்த விஷயத்தையும் ரிஸ்க் எடுத்து, தோற்று கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு குறைவு. எனவே, எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யாமல் நின்று, நிதானமாக யோசித்து பிழை இல்லாமல் முடிவு எடுக்க வேண்டும்.


தவிர,  நாற்பது வயதிற்கு மேல் கேஷ் ஃப்ளோ தொடர்ந்து கிடைக்குமாறு பார்த்துக்கொள்வது அவசியம். அது வேலை மூலமாகவோ அல்லது தொழில் மூலமாகவோ கிடைத்தால் சரிதான்.
நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இன்றைய இந்தியாவின் சராசரி ஆயுட்காலம் கூடிக்கொண்டே செல்கிறது. ஆகவே, ஐம்பது வயதைத் தாண்டிய பிறகுதான் ஒருவருக்கு 'மிடில் ஏஜ்' தொடங்குவதாகச் சொல்கிறார்கள். மேலும், உடல் ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில் அறிவு சார்ந்த வேலைகளில் இருப்பவர்கள் 70 வயதுவரைகூட ஆக்டிவ்-ஆக வேலை செய்கிறார்கள்.


நாற்பது வயதிற்கு மேல் உங்களுக்கு ஒரு மொத்தத் தொகை கிடைக்கும்பட்சத்தில், அதை ஹை ரிஸ்க் விஷயத்தில் முதலீடு செய்யாமல், நிரந்தர வருமானம் தரக்கூடிய திட்டங்களில் முதலீடு செய்யுங்கள். வேறு அதிக வருமானம் தரக்கூடிய வாய்ப்புகளையும் தேடுங்கள்.


35 - 55 வயது காலகட்டத்தில் பல மனிதர்கள் உச்சத்தை அடைகிறார்கள் என்று கூறினால் மிகையாகாது. அறிவு, வேகம், விவேகம், ரிஸ்க் எடுக்கும் திறன் ஆகிய அனைத்தும் நிரம்பி வழியும் காலம். இக்காலத்தை உபயோகித்துக் கொள்வது நம் கையில்தான் உள்ளது.


வாழ்க்கையில் பல்வேறு உச்சத்தை அடைவதற்கும், சாதிப்பதற்கும் ஒருவருடைய நிதி நிலைமை மிக முக்கியமானப் பங்கு வகிக்கிறது. நீங்கள் உச்சத்தை அடைவதற்கு முதல்படியாக இருக்கும் உங்கள் நிதி சுகாதாரத்தை முதலில் சரி செய்துகொள்வது தலையாய கடமை இல்லையா?