ஒரு நிறுவனம் ஒரு நபரை வேலைக்கு எடுக்கும் போது, அவர் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள பல நுட்பமான வழிமுறைகளை பின்பற்றுகிறது. நீங்கள் முன்பு பணியாற்றிய பழைய நிறுவனத்தைச் சார்ந்தவர்கள், உங்களை தெரிந்துவைத்திருக்கும் நபர்கள், உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் உங்களைப் பற்றிய தகவல்களை விசாரிக்கும். இப்போது இதெல்லாம் பழைய ஸ்டைல். இன்றைய தேதியில் உங்களைப் பற்றி தெரிந்துகொள்ள சமூக வலைதளங்களே போதும் என்கின்றன பல நிறுவனங்கள். ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், அதுதான் உண்மை.
இன்றைய தேதியில் வேலைக்கு விண்ணப்பிக்கும் 1,000 நபர்களில் 700 பேர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதாகச் சொல்கிறது ஒரு சர்வே. உங்களைப் பற்றிய ஒருவித மதிப்பீட்டை உருவாக்கிக் காட்டும் சமூக வலைதளங்களை எப்படி பயன்படுத்தினால் நன்மைகளைப் பெற முடியும், இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து சொல்கிறார் ரான்ஸ்டாட் நிறுவனத்தின் சி.இ.ஓ. பாலாஜி.
''சமூக வலைதளம் என்பது வெறும் பொழுதுபோக்கிற்காக என்று மட்டும் நினைக்காதீர்கள். குறிப்பிட்ட ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நீங்கள் பேசும் கருத்தானது, அங்கு இருப்பவர்களுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், சமூக வலைதளத்தில் அப்படி இல்லை. ஒரே நேரத்தில் பல ஆயிரம் பேரின் பார்வைக்குச் சென்றுவிடும். எனவே, மற்றவர்களின் வாய்க்குத் தீனிப்போடும் வகையில் முரண்பாடான கருத்துக்களையோ, புகைப்படங்களையோ பதிவு செய்யாதீர்கள்.
சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி நீங்கள் தரும் அடிப்படை தகவல்களான உங்கள் படிப்பு, வயது, முகவரி, பணி அனுபவம், பதவி போன்றவை உண்மையானவையாக இருப்பது நல்லது. கௌரவத்திற்காகப் பொய்யான தகவல்களைத் தரும்போது தேவையற்ற பல சிக்கல்கள் உருவாக வாய்ப்பு உண்டு.
நீங்கள் பணியாற்றிய, பணியாற்றும் நிறுவனங்களில் இருக்கும் உயர் அதிகாரிகளைப் பற்றியோ, பிற நிறுவனங்களின் உயர் அதிகாரிகளைப் பற்றியோ தவறான விமர்சனங்களை வலைதளங்களில் எக்காரணத்தைக் கொண்டும் பதிவிடாதீர்கள்.
'உன் நண்பன் யார் என்று சொல்; உன்னைப் பற்றி சொல்கிறேன்' என்பார்கள். அந்த அடிப்படையில் சமூக வலைதளங்களில் உங்களின் நண்பர்கள் யார் யார் என்பதையும் கவனிப்பார்கள். அதனால் சரியாகப் பழக்கமில்லாதவர்களை எல்லாம் வலைதள நண்பர்களாக வைத்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்கு நன்கு தெரிந்தவர்களை மட்டுமே இணைப்பில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒவ்வொரு காலகட்டத்திலும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் ஏதாவது நிகழ்ந்துகொண்டுதான் இருக்கும். சர்ச்சையைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் அதற்கெல்லாம் ஏதாவது கருத்தைச் சொல்லிக்கொண்டே இருப்பது, அது தொடர்பாக விவாதிப்பதெல்லாம் தவிர்ப்பது மிக அவசியம்.
வலைதளங்களில் நீங்கள் பதிவிடும் புகைப்படம் மற்றவர்களை முகம் சுளிக்க வைப்பதாக இருக்கக்கூடாது. எப்போதும் வலைதளங்களே கதியாக இருக்கக்கூடாது. பணி இடத்தில் பணி நேரத்தில் நீங்கள் சமூக வலைதளங்களில் அதிக நேரம் காணப்படுகிறீர்கள் என்று தெரியவந்தால், அது உங்களின் வளர்ச்சி வாய்ப்புகளை காவு வாங்கிவிடும். பெரும்பாலான நிறுவனங்கள் அலுவலகத்தில் சமூக வலைதளங்களுக்குத் தடை விதித்துள்ளதுக்குக் காரணமே அலுவலக நேரங்கள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கத்தான். எனவே, தேவைப்பட்டால் அன்றி பணியிடத்தில் சமூக வலைதளங்களைப் பார்க்க வேண்டாம்.
பெரிய தலைவர்கள் தங்கள் இமேஜை வளர்க்க சமூக இணையதளங்களை பயன்படுத்தலாம். ஆனால், பணிக் காலத்தில் அதை தவறாகப் பயன்படுத்தினால் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்'' என்றார் அவர்.
அலுவலகத்தில் வேலை பார்க்கிறவர்களும், இனி புதிதாக வேலை தேடப் போகிறவர்களும் மேற்சொன்ன விஷயங்களைக் கட்டாயம் மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது.