பேராசிரியர்கள், எம்.ஏ., மற்றும் ஆராய்ச்சி மாணவ- மாணவியர் எனப் பலரும் நிறைந்த சபையில், அந்த சுவாமிஜி புன்முறுவலோடு உரையாடத் தொடங்கினார்.
'சிலர் தலைமுடியில் கார்களைக் கட்டி இழுப்பதைப் பார்த்திருக்கிறோம். பற்களால் நீர் நிறைந்த பானையைத் தூக்கிச் சுற்றுவதை திரைப்படங்களில், தொலைக்காட்சிகளில் பார்த்திருப்போம். இது எப்படி சாத்தியம் ஆகிறது?' என்று கேட்டு சுவாமிஜி நிறுத்த, 'எல்லாம் கிராபிக்ஸ்தான்!' என்றார் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் ஒருவர்.
'சினிமாவை விடுங்கள். இப்படியான அசாத்தியமான செயல்களை நாம் நேராகவே பார்த்திருக்கிறோமே? இத்தகைய சாதனைகளைச் செய்யும் மனிதர்கள், தங்களின் மென்மையான முடிகளாலோ, பற்களாலோ அதைச் செய்கிறார்கள் என்பதைவிட, மனோபலத்தால் மட்டுமே சாதிக்கிறார்கள் என்பதே உண்மை. உங்களுக்கு இன்னொரு எடுத்துக்காட்டு தருகிறேன். நமது உடலில் சாதாரண வெப்ப நிலையின் அளவென்ன?'
'98.4 டிகிரி' என்றார் ஒரு புத்திசாலி மாணவி சட்டென்று.
'அதற்கு மேல் கூடினால்..?' - சுவாமிஜி கேட்டார்.
'காய்ச்சல்தான்!'
'குறைந்துகொண்டே போனால்..?'' - விடாமல் கேட்டார் சுவாமிஜி.
'ஜன்னி வந்து ஃபிரீஸாயிடுவோம்!'
'இது உண்மைதான். ஒருமுறை, இமயமலையில் இருந்து வந்த ஒரு பௌத்த துறவியை மருத்துவ விஞ்ஞானிகள் சோதித்தார்களாம். அப்போது ஐஸ் நீரில் ஊறவைத்த கம்பளியைத் துறவியின்மீது போர்த்த, அவருடைய உடம்பின் உஷ்ணம் குறைந்துகொண்டே வந்து, ஓரிடத்தில் நின்று, பிறகு 100, 102, 106 என ஏறிக்கொண்டே போனதாம். சற்று நேரத்தில், தன் மீது போர்த்தப்பட்ட ஈரமான ஐஸ் கம்பளியை தன் உடல் வெப்பத்தாலேயே முற்றிலும் உலர்ந்து போகுமாறு அந்தத் துறவி சாதித்துக் காட்டினாராம். மருத்துவ விஞ்ஞானிகள் வியந்துபோனார்களாம். இது கதையல்ல; நிஜமாக நடந்த நிகழ்ச்சி!' என்றார் சுவாமிஜி.
'சுவாமிஜி சொல்வது உண்மைதான். சமீபத்தில் கின்னஸ் சாதனை புரிந்த ஓர் இளைஞர், பனிக்கட்டி நீரில் ஓரிரு நாட்கள் இருந்து, அவருடைய கால்கள் புண்ணானது தவிர, மற்றபடி பூரண நலத்தோடு இருந்து சாதனை செய்ததை நான் லண்டன் சென்றிருந்தபோது பார்த்து வியந்தேன். இது அவரது மனவலிமைக்கு ஓர் அத்தாட்சி!' என்றார் ஒரு பேராசிரியர்.
''நம் மனது அத்தனை வலிமையானதா?!'' என்று வியந்தார் ஒரு மாணவர்.
'ஆமாம்! நம்முடைய உடல் வியர்க்க வேண்டுமென்று எத்தனையோ கடுமையான உடற்பயிற்சிகளைச் செய்கிறோம் அல்லவா? ஆனால், இருளில் ஏதேனும் ஒரு வழவழப்பான பொருளை வெறும் காலில் மிதித்துவிட்டால், பாம்போ என ஒரு கணம் தூக்கிவாரிப்போட, பயத்தில் நம் மனது பதைபதைக்கிறது; பதறிப்போகிறது. ஒரு நொடியில் உடம்பில் வெள்ளமென வியர்வை கொட்டுகிறது. அதனால், மனது இடர்ப்பட்டால் வலிமையை இழப்போம்; மனது வலுப்பட்டால், உலகையே அளப்போம்!' என்று சுவாமிஜி சொல்ல, அரங்கமே ஆச்சரியத்தில்- அமைதியில் ஆழ்ந்தது.