Saturday, October 20, 2012

குழந்தைகளுக்கான இணைய தளம்

 
கலை, அறிவியல் மற்றும் நம் மூளை இவை குறித்த தகவல்களை குழந்தைகள் விரும்பும் வகையில், ஓர் அதிசய பயணமாகத் தருகிறது http://wondermind.tate.org.uk/ என்ற முகவரியில் உள்ள ஓர் இணைய தளம்.
 
இந்த தளத்தில் நுழைந்தவுடன், இதில் கிடைக்கும் Your Wondermind Play என்ற பட்டனை அழுத்தி காட்டப்படும் விடீயோ காட்சியினை ரசிக்கலாம். இதில் மூளை இயக்கம் குறித்து அனைத்து தகவல்களும் தரப்படுகிறது. இந்த வீடியோவில் பார்ப்பவர்களையும் விடையளிக்கச் செய்கிறது. வீடியோ கேட்கும் கேள்விகள் அனைத்தும் மூளையின் செயல்பாடு குறித்தே உள்ளன.
 
இந்த வீடியோவினைப் பார்த்து, கேள்விகளுக்குப் பதில் அளித்த பின்னர், தளத்தின் பல பாகங்களுக்குச் செல்லலாம். The Hedge Maze, The Forest, The Tea Party, மற்றும் The Garden எனப் பல பாகங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவின் நுழை வாயிலிலும், மூளையின் இயக்கம் குறித்து அரிய தகவல்கள் தரப்படுகின்றன.
 
முதல் பிரிவான The Hedge Mazeல் மூளை எப்படி தன்னைச் சுற்றியுள்ள வெளியை உணர்ந்து செயல்படுகிறது என்பது வீடியோவாகவும், விளையாட்டாகவும், கேள்வி பதிலாகவும் காட்டப்படுகிறது.
 
The Forest என்ற இரண்டாவது பிரிவில் தொடங்கும் விளையாட்டு, முயல் ஒன்றைக் காட்டில் பிடித்திட உதவி செய்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. வழிகளை அவ்வப்போது மாற்றி மாற்றி அமைக்க வேண்டும். விளையாட்டு முடிந்தவுடன், நம் மூளை எப்படி தன் வழி முறைகளை, நம் அனுபவத்தின் அடிப்படையில் தொடர்ந்து மாற்றி அமைத்து வருகிறது என்பதனைக் காட்டுகிறது.

The Tea Party என்ற பிரிவு இதே போல விளையாட்டு ஒன்றை வழங்கி, இறுதியில் மூளை எப்படி ஒரு மொழியை உணர்ந்து கிரஹித்துக் கொண்டு, பதிய வைத்துக் கொண்டு செயல்படுகிறது என்பதனைக் காட்டுகிறது.
 
அடுத்ததாக உள்ள The Garden என்பது ஒரு சீட்டு விளையாட்டு. குழந்தைகள் கேள்விகளுக்கான பதிலை கார்டுகளை இணை சேர்ப்பதன் மூலம் தர வேண்டும். இறுதியில் காட்டப்படும் வீடியோவில், மூளையில் எந்தப் பகுதி நினைவகமாகச் செயல்படுகிறது என்பதைக் காட்டுகிறது.
 
இன்னும் நிறைய பிரிவுகளில் கலை மற்றும் அறிவியல் குறித்த தகவல்கள் தரப்படுகின்றன. முதல் தொடக்க வழித் திரையிலிருந்தே இவற்றையும் காணலாம். நம்மைக் காட்டிலும் குழந்தைகளுக்கு இந்த தளம் மிக மிகப் பயனுடையதாக உள்ளது.