Monday, October 1, 2012

ஏன் இப்படி வயித்துக்கு வஞ்சனை பண்றீங்க?


சாப்பிடாமல் கொள்ளாமல் கிளம்பினாலோ அல்லது பரபரவென வேறு வேலைகளால் சாப்பிடாமல் இருந்துவிட்டாலோ, மனைவியோ பெற்றவர்களோ நண்பர்களோ அக்கறையுடன் கேட்பார்கள்... 'ஏன் இப்படி வயித்துக்கு வஞ்சனை பண்றீங்க?' என்று.

'அட... பேசிக்கிட்டே இருந்ததுல சாப்பிடணும்கற எண்ணமே மறந்து போயிடுச்சு' என்றோ, 'வேலை மும்முரத்துல சாப்பாட்டு ஞாபகமே இல்லை' என்றோ சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். ஆக, வயிறு என்பதை, சாப்பிடுகிற உணவையெல்லாம் அடைத்து வைத்துக்கொண்டு உடலுக்குத் தெம்பைத் தருகிற ஒரு இயந்திரமாக, சாப்பாடு தேவை என்பதைச் சொல்கிற அலாரமாகப் பார்க்கிறோம். உண்மையில், வயிறு என்பது நம் ஒருநாளின் நிம்மதியைக் கெடுக்கவல்லது அல்லது சந்தோஷத்தைத் தரவல்லது என்பதை அறிவீர்களா?

அந்தக் காலத்திலேயே அழகாகக் சொல்லி வைத்தார்கள்... 'மனச்சிக்கல் இருந்தால் மலச்சிக்கல் வரும்' என்று. அதாவது, உடல் மற்றும் மனத்தில் எங்கேனும் ஏதேனும் கோளாறு என்றால், அது உடனடியாக வயிற்றையும் தாக்கும். அந்த அளவுக்கு ரொம்பவே சென்சிடிவ்வான பகுதி அது!

வயிறு என்பதை பண்டம் அடைக்கிற பார்சல் டப்பாவாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், சிலர். எண்ணெய்ப் பதார்த்தங்கள் கொண்ட உணவை உட்கொள்ளும் போக்கு சமீபகாலங்களில் அதிகரித்துவிட்டது. இதுமாதிரியான உணவுகள் வயிற்றைப் பதம் பார்ப்பவை; மெள்ள மெள்ள வயிற்றைச் சேதப்படுத்தக் கூடியவை. வயிற்றுக்குச்சிக்கல் ஏற்படுத்தாத உணவுகள் எவை என்பதில் ஒரு தெளிவு நம்மிடையே உடனடியாகத் தேவை.

'என்னன்னே தெரியலை... வயிறு உப்புசம் பிடிச்சது போல இருக்கு. புளிச்ச ஏப்பமா வருது. அடிக்கடி உடம்பே சோர்வாயிடுது. குறிப்பா, சாப்பிட்டு முடிச்சதும் ஒரு மணி நேரத்துக்கு எந்த வேலையும் செய்யமுடியாம முடக்கிப் போட்டுடுது' என்று புலம்புகிற அன்பர்கள் இருக்கிறார்கள்.

காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் சரியான நேரத்துக்கு உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல், அளவான உணவை மட்டுமே சாப்பிடவேண்டும். 'அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷம்' என்று நம் முன்னோர்கள் அளவுமீறலை நெத்தியடியாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

கூடுமானவரை பிடித்தமான உணவைச் சாப்பிடுங்கள். உங்களுக்குப் பிடித்த உணவு, சத்தானதாக இல்லை, எண்ணெய்ப் பதார்த்த உணவு என்பதாக இருந்தால், அவற்றை முழுவதுமாக விலக்கிவைத்துவிடுங்கள். பிறகு, சத்தான உணவு எவை எவை என்று ஒரு பட்டியல் போட்டுக்கொண்டு, அவற்றில் எது எது உங்களுக்குப் பிடித்தமானதோ அவற்றை காலை, மதியம், இரவு எனச் சாப்பிடுங்கள். 'சத்தான உணவுன்னு நல்லாவே தெரியுது. ஆனா, எதுவும் எனக்குப் பிடிக்கலையே...' என்கிறீர்களா? கொஞ்ச நாளைக்குக் கண்களை மூடிக்கொண்டு, முகத்தைச் சுளித்துக்கொண்டு, கடகடவெனக் கசப்பு மருந்தைச் சாப்பிடுவதுபோலச் சாப்பிட்டுவிடுங்கள். நாளாக ஆக, அந்த உணவே உங்களுக்கு மிகவும் பிடித்தமான உணவாக மாறியிருக்கும், பாருங்களேன்!

பொதுவாக, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் விழாக்களிலும் விருந்து தடபுடலாக இருக்கும். வழக்கத்தைவிடக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுவோம். வழக்கத்தைவிட நாலு கவளம் சாதம் அதிகமாக இறங்கியிருக்கும். முக்கியமாக சாம்பார், ரசம், மோர் என்கிற வரிசையில், சாம்பாருக்கு முன்னதாக பருப்பு, ரசத்துக்கு முன்னதாக மோர்க்குழம்பு அல்லது காரக்குழம்பு, தவிர, எலுமிச்சை, புளியோதரை, ஃப்ரைடு ரைஸ் என ஒரு சித்ரான்னம் என தடபுடலான விருந்தும், ஆளை அசத்துகிற உணவு வகைகளுமாக இருக்க... நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு சாப்பிடுகிற ஆசை யாருக்குத்தான் இருக்காது?!

ஆனாலும், இங்கே கொஞ்சம் நிதானம் தேவை. நாம் வழக்கமாகச் சாப்பிடுகிற மொத்த அளவில் இருந்து கொஞ்சமும் கூடுதலாகாமல், அனைத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துச் சாப்பிடுவதே புத்திசாலித்தனம். இல்லையெனில் வயிற்றுக்குத்தான் சங்கடம்! 'வயிற்றுக்குத்தானே... பார்த்துக் கொள்ளலாம்' என அலட்சியமாக இருந்துவிடாதீர்கள். வயிற்றில் ஏதும் கோளாறு என்றால், அது ஒட்டுமொத்தமாக உங்களையும் உங்கள் உடம்பையும் தாக்கும். உங்களின் ஒரு நாளையே பாழாக்கிவிடும்.

ஆகவே, வயிற்றுப் பகுதியையும் இடுப்புப் பகுதியையும் கவனமாகப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு உண்டு. வயிற்றுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்து, அமைதிப்படுத்துவது மிக மிக அவசியம்.

விரிப்பு ஒன்றில் மல்லந்து படுத்துக்கொள்ளுங்கள். மொத்த உடலையும் தளர்த்திக் கொண்டு, கண்களை மூடிக் கொள்ளுங்கள். கால்களைப் பிரித்து வைத்துக்கொண்டு, தளர்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள்.

பாதங்களைத் தளர்த்திக் கொள்ளுங்கள். 'ரத்த ஓட்டம், வெப்ப ஓட்டம், காற்றோட்டம், உயிர் ஓட்டம் ஆகியவை சீராக நடைபெறுகின்றன. பாதங்கள் போதிய வலுவும் பலமும் பெறுகின்றன. பாதங்கள் ஓய்வு பெறட்டும், ஓய்வு பெறட்டும், ஓய்வு பெறட்டும்... ஓய்வு ஓய்வு ஓய்வு' என்று மனத்துக்குள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொள்ளுங்கள்.

அதேபோல்... கெண்டைக்கால், முழங்கால், தொடைப் பகுதி, இடுப்பு என ஒவ்வொரு பகுதியையும் கூர்ந்து நோக்கியபடி, கண்களை மூடி, மனத்தால் கவனித்து, ஒவ்வொன்றும் ஓய்வு எடுத்து வருவதாகச் சொல்லிக் கொள்ளுங்கள்.

அடுத்து, வயிற்றுப் பகுதியையும் தளர்த்திக் கொள்ளுங்கள். 'என் வயிற்றுப் பகுதியும் வயிற்றின் உள்உறுப்புகளும் சீராக இயங்கிக்கொண்டிருக்கின்றன' என்று மனதுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். 'வயிறு மற்றும் உள் உறுப்புகள் தற்போது ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றன' என்று சொல்லுங்கள். சன்னமான குரலில், 'ஓய்வு ஓய்வு ஓய்வு...' என்று மனத்துக்குள் மந்திரம் போல் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருங்கள்.

பாதங்களும் கால்களும் கனமே இல்லாதிருப்பதை உணர்வீர்கள். அங்கே இருந்த வலியெல்லாம் எங்கே போயிற்று எனத் தெரியாமல் இருப்பீர்கள். கெண்டைக்காலில் தங்கியிருந்த வேதனையும், முழங்காலில் குடியேறிய வலியும் காணாது போயிருக்கும். எந்நேரமும் இறுக்கமாக இருந்த தொடை தளர்ந்து, வலியற்று, தக்கையாகிக் கிடக்கும்.

'குனிந்தால் நிமிர முடியலை; நிமிர்ந்தால் குனிய முடியலை' என்றிருந்த இடுப்புப் பகுதியில், ஒருவித மலர்ச்சி ஏற்பட்டிருக்கும். குனிந்த முதுகை நிமிர்த்தியோ நிமிர்ந்த முதுகை குனிய வைத்தோ பார்க்க... இறுக்கமும் வலியும் தசைப் பிடிப்பும் எங்கோ பறந்து போயிருப்பதை உணர்ந்து சிரிப்பீர்கள்; சிலிர்ப்பீர்கள்!

உடலுக்குத் தருகிற ஓய்வு, நம் மொத்த மகிழ்ச்சிக்கும் சிரிப்புக்கும் அஸ்திவாரம் என்பதை உணர்கிறீர்கள்தானே?!