ஒரு மீனைப் போல் படுத்துக்கொண்டு, கைகள் இரண்டையும் உடலில் இருந்து சுமார் 45 டிகிரி அளவுக்குத் தள்ளி வைத்து, இரண்டு கைகளிலும் சின்முத்திரை காட்டியபடி, குதிகால்களும் கால்களின் கட்டைவிரல்களும் ஒட்டியிருக்கும்படி வைத்துக் கொள்கிற மகராசனம் எனும் பயிற்சி, கொஞ்சம் ஆழ்ந்து கவனித்துச் செய்யவேண்டிய பயிற்சி!
இந்தப் பயிற்சியைச் செய்யும்போது, நம் தலைப் பகுதியை இடது பக்கமாகத் திருப்பினால், இடுப்பையும் கால்களையும் வலது பக்கமாகத் திருப்ப வேண்டும். தலையை வலப்பக்கம் திருப்பும்போது, இடுப்பையும் கால்களையும் இடப்பக்கம் திருப்ப வேண்டும். இதுபோல், மும்மூன்று முறை செய்யுங்கள். மிகவும் ஆழ்ந்து செய்தால்தான் இந்தப் பயிற்சி நமக்கு வசப்படும்.
ஈரோட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற கிராமத்தில் இருந்து ஒருவர் வந்திருந்தார். அங்கே ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார் அவர். வகுப்பில் மணிக்கணக்காக நின்றுகொண்டே பாடம் நடத்துவாராம். குறுக்கும் நெடுக்குமாக, மாணவர்களுக்கு இடையே நடந்துகொண்டே பாடம் நடத்துவாராம். ஒருநாளில், இப்படிச் சுமார் நான்கைந்து மணி நேரம் நின்றும், நடந்தும், கரும்பலகையில் எழுதியும் பாடம் நடத்தி வந்ததால் தன் கால்கள், முதுகுத் தண்டுவடம், தோள்கள் எனப் பல பகுதிகளில் நிரந்தரமாகவே ஒரு வலி தங்கிவிட்டது என்று வருந்தினார்.
'முக்கியமாக, மாணவர்களுக்கு ஆர்வத்துடன் பாடம் நடத்துகிறபோது, அதிலிருந்து என் கவனத்தைத் திசை திருப்புகிற இந்த அசாத்திய வலி குறித்த சிந்தனையின் ஆக்கிரமிப்பில் இருந்து நான் விடுபட வேண்டும். அதற்கு எனக்கு ஒரு வழி சொல்லுங்கள், சுவாமி!' என்று அந்த ஆசிரியர் கேட்டார்.
'இந்த வலியில் இருந்தும், இப்படியான மனநிலையில் இருந்தும் விரைவில் நீங்கள் விலகிவிடுவீர்கள். இப்போது பயிற்சியில் சேருகிறீர்களா? ஐந்து நாட்கள் இங்கு தங்கி, பயிற்சி எடுத்துக் கொண்டால் போதும்' என்றேன்.
'மன்னிக்க வேண்டும் சுவாமி! ஐந்து நாட்கள் விடுமுறை எடுக்க முடியாது. மாணவர்களுக்கு இது அரையாண்டுத் தேர்வு நேரம். பரீட்சை முடிந்து, பத்து நாள் விடுமுறை வரும். அப்போது வேண்டுமானால், பயிற்சி வகுப்பில் கலந்து கொள்கிறேன்'' என்று அவர் சொன்னபோது, மாணவர்கள் மீது அவருக்கு இருந்த அக்கறையை உணர்ந்தேன்.
பிறகு, அரையாண்டுத் தேர்வு முடிந்து, ஒரு டிசம்பர் மாதக் கடைசி வாரத்தில் வந்து, ஐந்து நாள் தங்கி, பயிற்சியை மிகுந்த ஆர்வத்துடன் கற்றுக்கொண்டார். பயிற்சி முடிந்து, ஏப்ரல் மாத விடுமுறையில் வந்து முழுப் பயிற்சியையும் எடுத்துக்கொண்டார். அதையடுத்து, தினமும் மனவளக் கலைப் பயிற்சியைச் செய்து வருவதாகவும், தற்போது கால் வலி, முதுகு மற்றும் தோள் வலி என எந்த வலியும், ஏன்... அது குறித்த சிந்தனை கூடத் தனக்கு இல்லை என்று மகிழ்ச்சியோடு தெரிவித்தார்.
அந்த ஆசிரியருக்குக் கொடுக்கப் பட்ட முதல் பயிற்சிதான், இந்த மகராசனப் பயிற்சி.
சரி... இப்போது இதன் அடுத்த கட்டப் பயிற்சியைப் பார்ப்போமா? வழக்கம்போல், மகராசனத்தில் படுத்துக்கொண்டு, குதிகால்களையும் கால் கட்டைவிரல்களையும் ஒட்டியபடி வைத்துக்கொள்ளுங்கள். கைகள் இரண்டும் சின்முத்திரை காட்டியபடி, நம் உடலில் இருந்து சுமார் 45 டிகிரி கோண அளவில் தள்ளியே இருக்கட்டும்.
தலையை நேராக வைத்துக்கொண்டு, கால்களை அப்படியே மெள்ள (படத்தில் உள்ளபடி) மடக்கி வைத்துக்கொள்ளுங்கள். இந்த நிலையில் இருந்தபடி, தோள்களைத் தூக்காமல், தலையை மெள்ள இடது பக்கம் திருப்புங்கள். அப்படித் திருப்புகிறபோது, கால்களை வலது பக்கத் தரையில் படும்படி கொண்டு செல்லுங்கள். திரும்பவும் பழைய நிலைக்கு வந்து, தலையை வலது பக்கமாகத் திருப்புங்கள். அதே நேரம், கால்களை இடது பக்கத் தரைப் பகுதியில் படும்படி கொண்டு வாருங்கள். இப்படி, இடது - வலது என மும்மூன்று முறை செய்யுங்கள்.
அவசரம் தேவையில்லை; முதுகைக் கோணிக்கொண்டு வைத்திருக்காதீர்கள். தலையை வெடுக்கென்று திருப்பாதீர்கள். கால்களை ஒரு லயக் கட்டுப்பாடு போல், மெள்ள தரையைத் தொடச் செய்யுங்கள். இந்தப் பயிற்சியை செய்யச் செய்ய... முழங்கால் மற்றும் கணுக்கால்களில் பலம் கூடும். முழங்காலில் உள்ள எலும்பு, மஜ்ஜை போன்றவை அனைத்தும் உறுதிப்படும். இந்த வலுவுடன் முழங்காலும் பாதங்களும் கணுக் கால்களும் இருந்தால், கால்களில் வலி என்பதே ஏற்படாது.
பேருந்தில் நடத்துனர்களாகப் பணிபுரிபவர்கள், டீக்கடை மற்றும் ஷோ ரூம்களில் வேலை செய்பவர்கள், டிராஃபிக் போலீசார், தொழிற்சாலைகளில் எந்திரங்களை நின்றுகொண்டே இயக்குபவர்கள் ஆகியோரின் கால்களுக்கு மிகவும் பலத்தைத் தருகிற, பயனுள்ள பயிற்சி இது!
அவ்வளவு ஏன்... ஒரு நாளின் எட்டு மணி நேர வேலையில், மிக அதிக நேரம் உட்கார்ந்துகொண்டே வேலை செய்பவர்கள், உடலில் அதிக எடையுடன் இருப்பவர்கள் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தால், தோள் பட்டையும் முதுகுத் தண்டுவடப் பகுதியும் உறுதியுடன் திகழும்.
பெங்களூருவில் இருந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் வந்திருந்தார். தனக்கு சிசேரியன் என்றும், குழந்தை பிறந்த பிறகுவேலையை விட்டுவிட்டதாகவும், இப்போது மகள் கொஞ்சம் வளர்ந்து, பள்ளிக்குச் செல்லத் துவங்கி விட்டதால் மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என்று தீர்மானித்து இருப்பதாகவும் ஆனால், இந்த நான்கைந்து வருடங்களில், சுமார் 15 கிலோ வரை தன் உடல் எடை அதிகரித்துவிட்டது என்றும் தெரிவித்தார். இந்த எடை அதிகரிப்பால், கால்களில் எந்நேரமும் வலி இருப்பதாகப் புலம்பினார், அந்தப்பெண்மணி.
ஆழியாறு அறிவுத் திருக் கோயிலில் 15 நாட்கள் தங்கி முறையான பயிற்சிகளை எடுத்துக்கொண்ட பெண்மணி, ஊருக்குச் சென்ற பின்பு, வாரம் ஒருமுறை கடிதம் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி எழுதிய கடிதங்களில், தினமும் நடைப் பயிற்சியும் மனவளக் கலைப் பயிற்சியும் மேற்கொண்டு வருவதாகவும், கால்களில் இருந்த வலி காணாமல் போய்விட்டது என்றும், உடல் எடையும் சுமார் 9 கிலோ வரை குறைந்துவிட்டது என்றும் தெரிவித்தார். மேலும் அந்தக் கடிதத்தில், உடல் எடை குறைந்து, கால் வலியுமின்றி, மூச்சிரைப்புப் பிரச்னையில் இருந்தும் முற்றிலுமாக நான் விடுபட்டுவிட்ட பின்னரும்கூட, இந்தப் பயிற்சிகளை தினமும் மேற்கொள்வேன். ஏனெனில், காலையில் எழுந்து இந்தப் பயிற்சிகளைச் செய்தால், அந்த நாள் முழுவதுமே மிகவும் உற்சாகமாகவும், பதற்றம் இன்றியும், சுறுசுறுப்பாகவும் கழிகிறது என்று அடிக்கோடிட்டு எழுதியிருந்தார், அவர்.
மனவளக் கலைப் பயிற்சி யை மேற்கொண்டால், மன அழுத்தத்தில் இருந்து விடுபட லாம். மகராசனப் பயிற்சியைத் தொடர்ந்து செய்தால், அந்த மீனைப் போல் நம் உடலும் தக்கையாகிவிடும்!
உடலைத் தூக்கி நிறுத்துவதற்கு முதுகெலும்பு எப்படிப் பயன்படுகிறதோ, அதேபோல் மனவளக்கலைப் பயிற்சியின் முதுகெலும்பு என்றே இந்த மகராசனப் பயிற்சியைச் சொல்லலாம்!