Friday, January 13, 2012

எந்த பால் பெஸ்ட்?

எவ்வளவு பெரிய போராட்டம் நடந்தாலும் பால் வண்டிக்கு மட்டும் யாரும் எந்த எதிர்ப்பும் காட்டுவதில்லை. காரணம், அது மிக அத்தியாவசியமானது என்பதால்தான். மின்சாரம் இல்லாமல்கூட நாம் இருந்துவிடலாம். ஆனால், பாலில்லாமல் நம்மால் இருக்க முடியாது. பாலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரும் நாம், நல்ல பாலைத்தான் வாங்கிக் குடிக்கிறோமா?

ந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்ளும் முன்பு, பாலில் எத்தனை வகை இருக்கிறது? எப்படிப்பட்ட பால் நமக்குத் தேவை? எதில் எவ்வளவு சத்து இருக்கிறது? என்று பார்ப்போம்.

ஃபுட் சேஃப்டி அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவின் தரக் கொள்கையின்படி பாஸ்ட்ரைஸ்டு மற்றும் ஹோமோஜினியஸ்டு பால்தான் தரமான பால். அது என்ன பாஸ்ட்ரைஸ்டு பால்?  

பதப்பட்ட பாலின் ஒரு வகைதான் இது. சாதாரண பாலை 72.5 டிகிரி செல்சியஸுக்கு மேலே 16 நொடி களுக்கு சூடுபடுத்தி, பிறகு உடனடியாக 4 டிகிரி செல்சியஸில் குளிர்விக்கும் முறை இது. ஹோமோஜி னியஸ்டு பால் என்பது இன்னொரு வகை. பாலில் இருக்கும் கொழுப்பை முழுமையாக நீக்கிவிட்டு, 0.1 மைக்ரான் என்ற அளவுக்கு கொழுப்பு இருக்கிற மாதிரி  எளிதாக செரிமானம் ஆகக்கூடிய பால் இது.

லாக்டோஸ் இல்லாத பால், குழந்தைகளுக்கு ஏற்றது. வயதான பெரியவர்களுக்கும் இது ஏற்றது. டெட்ரா பேக் பால் என்பது ஒரு வகையான சிறப்பு பால். பாக்டீரியா இல்லாத, குறைவான லாக்டிக் அமிலம் கொண்ட பால். இம்முறையில் பதப்படுத்தப்பட்ட பாலை 180 நாள் வரை பாதுகாக்கலாம். இதன் விலை ரொம்பவே அதிகம்.

இவை தவிர, பாலில் இருக்கும் கொழுப்பு தன்மையை வைத்தும் பாலை வகைப்படுத்தலாம்.

புல் கிரீம் பால்: இதில் 6% கொழுப்பு இருக்கும். இது இளையவர்களுக்கு ஏற்றது.

ஸ்டாண்டரைஸ்டு பால்: இதில் 4.5% கொழுப்பு இருக்கும். இது அனைவருக்கும் எற்றது. ஆனால், வயதானவர்களுக்கு ஏற்றதல்ல.

டோன்டு பால் (Toned Milk): இது அனைவருக்கும் ஏற்றது. கொழுப்பின் அளவு 3%.

டபுள் டோன்டு பால் (Toned Milk): இது கொழுப்பை குறைக்க நினைப்பவர்களுக்கான பால் இது. இதில் 1.5 சதவிகித கொழுப்பு மட்டுமே இருக்கிறது.

ஸ்கிம்மிடு பால்: இதில் 0.5 சதவிகிதத்துக்கு குறைவான கொழுப்புதான். டயட்டில் இருப்பவர்களுக்கு ஏற்றது. ஆனால், சுவையாக இருக்காது.

இனி பால் பற்றிய முடிவுகளுக்கு வருவோம்.

ஒப்பீட்டு முறையில் தென் இந்தியாவில் இருக்கும் பிராண்டட் பால் நிறுவனங்களை எடுத்து கான்சர்ட் நிறுவனம் சோதனை செய்து பார்த்ததில், இதற்காக எடுக்கப்பட்ட சர்வேயில் 25 சதவிகித மக்கள் ஸ்டாண்டரைஸ்டு பாலையும், 70 சதவிகித மக்கள் டோன்டு பாலையும், மீதமுள்ள 5 சதவிகித மக்கள் இதர வகையான பாலையும் பயன்படுத்துகிறார்கள். எனவே, ஸ்டாண்டரைஸ்டு பால், டோன்டு பால் என்ற இரண்டு வகையான பாலை மட்டுமே எடுத்துக்கொண்டு 'கான்சர்ட்' அமைப்பு சோதனை செய்தது. லேபிள், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து சோதனை செய்தது கான்சர்ட்.

பிராண்டின் பெயர், முகவரி, உற்பத்தி இடம், பாலின் வகை, புகார்களை பதிவு செய்வதற்கான எண், உற்பத்தி தேதி, விலை, அளவு, சத்துக்களின் அளவு உள்ளிட்ட பல தகவல்கள் பாலின் லேபிளில் இருக்க வேண்டும்.

சில நிறுவனங்கள் இந்த விதிமுறைகளை பின்பற்றினாலும், சில நிறுவனங்கள் மீறியிருக்கின்றன. உதாரணத்துக்கு சில பால் பாக்கெட்களில் உற்பத்தி செய்து இரண்டு நாட்களுக்குள் பயன்படுத்தவும் என்று அச்சிட்டி ருக்கிறார்கள். ஆனால், என்றைக்கு அந்த பால் பாக்கெட் தயாரானது என்கிற தேதியை போடவில்லை.

அதேபோல, சில பால்களில் ஃபிரெஷ் என்ற வாசகத்தை எழுதி இருக்கிறார்கள். நமக்கு கிடைக்கும் அனைத்துமே பதப்படுத்தப்பட்ட பால் என்னும்போது அதை ஃபிரெஷ் பால் என்று சொல்வது தவறு! சில பால்களில் கொழுப்பின் அளவு கொஞ்சம் கூடுதலாகவோ அல்லது குறைத்தோ சொல்லி தவறான வழிகாட்டிவிடுகிறார்கள்.

அடுத்த தலைமுறையை ஆரோக்கியமாக உருவாக்குவதில் பாலின் பங்கு முக்கியமானது. அதில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாமே!