டாக்டர்களிடம் போனதுமே முதலில் வரும் அட்வைஸ்... 'சாப்பாட்டுல நிறைய காய்கறியை சேர்த்துக்கோங்க' என்பதுதான். அதற்காக, சீஸன் இல்லாத சமயங்களிலும் விளைந்துவரும் காய்கறிகளை, கிலோ 100 ரூபாய், 200 ரூபாய் என்று கொடுத்து வாங்கி
சமைக்கத் தேவையில்லை. சீஸனில் விலை மலிவாக வரும் காய்கறிகளே போதும்! 'இந்த நேரத்தில் உனக்கு இந்த சத்து தேவை. நீ இந்தக் காயைச் சாப்பிட வேண்டும்' என்று இயற்கையே நம்முடைய உடல் நலனில் அக்கறை கொண்டு விளைவிக்கும் காய்கறிகள் அவை!
இங்கே உங்களுக்கு உதவுவதற்காக... 30 வகை சீஸன் சமையல் ரெசிபிகளை பரிமாறுகிறார் சமையல்கலை நிபுணர் கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார்.
பனங்கிழங்கு புட்டு
தேவையானவை: பனங்கிழங்கு - 3, சின்ன வெங்காயம் - 10, பச்சை மிளகாய் - 3, பூண்டு - 2 பல், சீரகம் - கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பூண்டு, மஞ்சள்தூள் இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை தோல் சீவிய பனங்கிழங்கில் தடவி வேகவிடவும். வெந்தவுடன் நாரை உரித்துவிட்டு உதிர்த்துக் கொள்ளவும். காடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், உதிர்த்த கிழங்கு, உப்பு சேர்த்துக் கிளறவும். இறக்குவதற்கு முன்... சீரகம், தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றி சேர்த்துக் கிளறினால்... சுவையான, சத்தான பனங்கிழங்கு புட்டு ரெடி!
மரவள்ளிக்கிழங்கு கட்லெட்
தேவையானவை: மரவள்ளிக்கிழங்கு (வேக வைத்து, மசித்தது) - ஒரு கப், கேரட், வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 3, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பொட்டுக்கடலை மாவு - 3 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை நன்கு வேக வைத்து, மசித்துக் கொள்ளவும், கேரட்டை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மசித்த கிழங்குடன் கேரட் துருவல், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது, உப்பு, பொட்டுக்கடலை மாவு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். சூடான தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றி, விருப்பமான வடிவில் தட்டி இருபுறமும் சிவக்க விட்டு எடுக்கவும்.
சாஸுடன் சாப்பிட, மிகவும் சுவை யாக இருக்கும்.
பீஸ் புலாவ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பட்டாணி - கால் கப், பச்சை மிளகாய் - 4, தக்காளி, வெங்காயம் - தலா பாதி அளவு, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். குக்கரில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளிக்கவும். தக்காளி - வெங்காயம் விழுதைச் சேர்த்துக் கிளறவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுதையும் சேர்த்துக் கிளறவும். இதனுடன் பட்டாணி, அரிசி சேர்த்து, தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்துக் கலக்கவும். கொதி வந்தவுடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்துக் கிளறி மூடவும். ஆவி வர ஆரம்பித்ததும் குக்கரில் 'வெயிட்' போட்டு, அடுப்பை 'சிம்'மில் வைத்து 7 நிமிடம் கழித்து இறக்கினால்... பீஸ் புலாவ் ரெடி.
இதற்கு தயிர் பச்சடி, சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
பீஸ் ஃப்ரைடு ரைஸ்
தேவையானவை: பாஸ்மதி அரிசி - ஒரு கப், பட்டாணி - அரை கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பூண்டு - 5 பல், பொடியாக நறுக்கிய தக்காளி, நீளமாக நறுக்கிய வெங்காயம் - தலா ஒன்று, சோயா சாஸ் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாஸ் - அரை டீஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காய்த்தாள் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பட்டாணி, அரிசியைத் தனித்தனியே வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் வெண்ணெயை சூடாக்கி... இஞ்சி, பூண்டு, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். வேக வைத்த பட்டாணி, சோயா சாஸ், தக்காளி சாஸ் சேர்த்துக் கிளறவும். தேவையான உப்பு சேர்க்கவும். இதனுடன் வேக வைத்த சாதத்தை சேர்த்துக் கிளறி, வெங்காயத்தாள் தூவி அலங்கரித்தால்... பீஸ் ஃப்ரைடு ரைஸ் ரெடி.
ஆலு மட்டர்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பட்டாணி - கால் கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிது, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை நறுக்கி, விழுதாக அரைத்துக் கொள்ளவும். நறுக்கிய உருளைக்கிழங்கு, பட்டாணியை தனித்தனியே வேக வைத்து, எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் தாளித்து... வெங்காயம் - தக்காளி விழுதைச் சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். பிறகு வேக வைத்த பட்டாணி, உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டுக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவி அலங்கரிக்கவும்.
மட்டர் பனீர்
தேவையானவை: பனீர் துண்டுகள் - 100 கிராம், பட்டாணி - கால் கப், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், முந்திரி விழுது - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று, புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: பட்டாணியை வேக வைத்து எடுத்து வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம், சோம்பு தாளிக்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்க்கவும். வேக வைத்த பட்டாணி சேர்த்து, நீர் ஊற்றி கிளறவும். அரைத்த முந்திரி விழுது, உப்பு சேர்க்கவும். கொதித்து வரும்போது, பனீர் துண்டுகளைச் சேர்த்து கிளறி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, பூரிக்கு ஏற்ற சைட் டிஷ் இது.
முள்ளங்கி ரைஸ்
தேவையானவை: சாதம், முள்ளங்கித் துருவல் - தலா ஒரு கப், பச்சை மிளகாய் - 3, வெங்காயம், தக்காளி, - தலா ஒன்று, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு - கால் டீஸ்பூன், பட்டை - சிறிய துண்டு, பிரிஞ்சி இலை (சிறியது) - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், புதினா, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியை நீளமாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், பட்டை, சோம்பு மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைக்கவும். காடாயில் நெய், எண்ணெயை விட்டு சூடாக்கி, பிரிஞ்சி இலை தாளித்து... வெங் காயம், தக்காளியை வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிள காய் விழுது சேர்த்து வதக்கவும். இதனுடன் துருவிய முள்ளங்கி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கவும். பிறகு, சாதத்தை சேர்த்து நன்கு கிளறி, நறுக்கிய புதினா, கொத்தமல்லி தூவி அலங்கரித்தால்... முள்ளங்கி ரைஸ் ரெடி!
கோபி பராத்தா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், காலிஃப்ளவர் துருவல் - அரை கப், வெங்காயம் (பொடியாக நறுக்கவும்) - ஒன்று, இஞ்சித் துருவல், சீரகத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை வதக்கவும். அதனுடன் சுத்தம் செய்த காலிஃப்ளவர் துருவல், இஞ்சித் துருவல், சீரகத்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து சுருள வதக்கி, ஆற வைக்ககவும். கோதுமை மாவுடன் உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். மாவை சப்பாத்தியாக இட்டு, அதன் நடுவில் காலிஃப்ளவர் கலவையை வைத்து மூடி, மீண்டும் சப்பாத்தியாக இட்டு, சூடான தோசைக்கல்லில் நெய் விட்டு இருபுறமும் சுட்டு எடுத்தால்... கோபி பராத்தா தயார்.
மங்களூர் மொச்சை கிரேவி
தேவையானவை: மொச்சை - ஒரு கப், உரித்த சின்ன வெங்காயம் - அரை கப், பெரிய வெங்காயம் - ஒன்று, தேங்காய் துருவல் - கால் கப், கசகசா - 2 டீஸ்பூன் (விழுதாக அரைத்துக் கொள்ளவும்), கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
வறுத்து அரைக்க: தனியா, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 6, மிளகு - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: வறுத்து அரைக்க கொடுத்துள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை தோலுடன் தணலில் தோல் கருகும் வரை சுடவும். பிறகு, தோலை உரித்துவிட்டு மைய அரைக்கவும். குக்கரில் எண்ணெயை சூடாக்கி... சின்ன வெங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும். வறுத்து அரைத்த பொடி, வெங்காய விழுது, மொச்சை, உப்பு சேர்த்து வதக்கி, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதி வந்தவுடன் மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கி வைக்கவும். மூடியைத் திறந்து, தேங்காய் துருவல், அரைத்த கசகசா விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
இது கர்நாடக ஸ்பெஷல் அக்கி ரொட்டிக்கு (அரிசி ரொட்டி) ஏற்ற சைட் டிஷ்!
முள்ளங்கி சட்னி
தேவையானவை: முள்ளங்கி - 2, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, காய்ந்த மிளகாய் - 5, இஞ்சி - சிறிய துண்டு, கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கி, தக்காளி, வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... நறுக்கிய காய்கறிகள், இஞ்சி, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து சேர்க்கவும். இட்லி, தோசை, தயிர்சாதம் சப்பாத்தி என எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ் ரெடி!
கோஸ் மொச்சை கிரேவி
தேவையானவை: முட்டைகோஸ் (துருவியது) - ஒரு கப், பச்சை மொச்சை - அரை கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, சீரகம் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், மல்லித்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி, சீரகம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இஞ்சி - பூண்டு விழுது, மல்லித்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறவும். முட்டைகோஸ், மொச்சை சேர்க்கவும். வதங்கியவுடன் தண்ணீர் விட்டு வேக வைக்கவும். வெந்தவுடன் தேவையான உப்பு சேர்த்து, எல்லாம் ஒன்றாக சேர்ந்து கிரேவி பதம் வந்ததும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
இது சாதம், சப்பாத்தி, இட்லி, தோசைக்கு அருமையான காம்பினேஷன்.
மூலி பராத்தா
தேவையானவை: கோதுமை மாவு - ஒரு கப், முள்ளங்கித் துருவல் - அரை கப், பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கவும்) - 2, சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு, நெய் - தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவுடன் முள்ளங்கித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், சீரகத்தூள், உப்பு சேர்த்து பிசிறிக் கொள்ளவும். பின்னர் தேவையான நீர் சேர்த்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து, சப்பாத்தியாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும். நெய் தடவி பரிமாறவும்.
மரவள்ளி அடை
தேவையானவை: கடலைப்பருப்பு, புழுங்கல் அரிசி, - தலா அரை கப், துவரம்பருப்பு, உளுந்து - தலா கால் கப், காய்ந்த மிளகாய் - 10, மிளகு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், இஞ்சி - சிறிய துண்டு, மரவள்ளிக் கிழங்கு துருவல் - ஒரு கப், வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பருப்பு வகைகள், அரிசியை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். மரவள்ளிக்கிழங்கை முக்கால் பாகம் வேக வைத்து, தோலுரித்து, துருவிக் கொள்ளவும். ஊற வைத்த பருப்பு வகைகள், அரிசியை அரைக்கவும். பாதி அரைத்தவுடன் உப்பு, காய்ந்த மிளகாய், மிளகு, சோம்பு, சீரகம், இஞ்சி ஆகியவற்றை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் வெங்காயம், மரவள்ளிக் கிழங்குத் துருவல் சேர்த்துக் கலக்கி, சூடான தோசைக் கல்லில் அடைகளாக ஊற்றி, இருபுறமும் எண்ணெய் ஊற்றி சுட்டு எடுக்கவும். இதை, தேங்காய் சட்னியுடன் சாப்பிட சுவையோ சுவை!
சர்க்கரைவள்ளிக் கிழங்கு கோலா உருண்டை
தேவையானவை: சர்க்கரைவள்ளிக் கிழங்கு (வேக வைத்து, மசித்தது) - ஒரு கப், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பட்டை, கிராம்பு - சிறிதளவு, பொட்டுக்கடலை மாவு - கால் கப், வெங்காயம் - ஒன்று, புதினா, கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாணலியில் எண்ணெயை சூடாக்கி, வேக வைத்து மசித்த வள்ளிக்கிழங்கு, இஞ்சி - பூண்டு விழுது, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வும். ஆறியதும், நறுக்கிய வெங் காயம், புதினா, கொத்தமல்லி, பொட்டுக்கடலை மாவு சேர்க்க வும். சிறிய உருண்டைகளாக உருட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்தால்... சர்க்கரை வள்ளிக் கிழங்கு கோலா உருண்டை ரெடி.
காய்கறி ஆம்லெட்
தேவையானவை: கடலை மாவு - அரை கப், சின்ன வெங்காயம் - 5, தக்காளி - ஒன்று, வேக வைத்த பட்டாணி, கேரட் துருவல் - தலா கால் கப், பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லி தழை - சிறிதளவு, இஞ்சித் துருவல் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெயை சூடாக்கி, சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய தக்காளி, கேரட் துருவல், வேக வைத்த பட்டாணி, இஞ்சித் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும். ஆறியதும் கடலை மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை சூடாக்கி மாவை தோசைகளாக ஊற்றி, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி, இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
காய்கறி பிரட்டல்
தேவையானவை: கேரட், உருளைக்கிழங்கு, தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று, பீன்ஸ் - 10, உதிர்த்த காலிஃப்ளவர் - 10 துண்டுகள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைத்துக்கொள்ள: தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சோம்பு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், சிவப்பு மிளகாய் - 6, கசகசா - கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: அரைக்க கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். காய்கறிகளை சதுரமாக வெட்டி வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... வெங்காயம், தக்காளியை வதக்கவும். வதங்கியதும், அரைத்த விழுது, வேக வைத்த காய்கறிகள், உப்பு சேர்த்து வதக்கவும். தண்ணீர் தெளித்து வேகவிடவும். பச்சை வாசனை போய், நன்கு சுருண்டு வரும்போது இறக்கிப் பரிமாறவும்.
வெஜ் ஜல்ஃப்ரைசி
தேவையானவை: கேரட், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, பீன்ஸ் - 10, பட்டாணி - கால் கப், குடமிளகாய் - ஒன்று, தக்காளி, வெங்காயம் - தலா 2, பட்டை கிராம்பு,
ஏலக்காய் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், மல்லித்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை விரல் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். ஒரு தக்காளி, வெங்காயத்தை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, பட்டை, கிராம்பு ஏலக்காய் தாளித்து, இஞ்சி - பூண்டு விழுது, தக்காளி - வெங் காய விழுது சேர்த்து வதக்கவும். அதனுடன் மீதமுள்ள ஒரு தக்காளி, வெங்காயத்தை நறுக்கி சேர்க்கவும். மற்ற காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். மஞ்சள்தூள், மிளகாய்த் தூள், மல்லித்தூள் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து வேகவிடவும். காய்கறிகள் வெந்தவுடன், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
இது, ஃப்ரைடு ரைஸ், சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ்.
சீஸ் வெஜ் கட்லெட்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, வெங்காயம், கேரட் - தலா ஒன்று, சீஸ் - 4 க்யூப்ஸ், கோஸ் துருவல் - 4 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பிரெட் தூள் - சிறிதளவு, எண் ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயை சூடாக்கி... வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட், கோஸ், பச்சை மிளகாய் - இஞ்சி - பூண்டு விழுது, கரம் மசாலாத் தூள், உப்பு சேர்த்து வதக்கவும். ஆறிய கலவையுடன் துருவிய சீஸ் சேர்க்கவும்.
இதை வட்டமாக தட்டி, பிரெட் தூளில் புரட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.
நெல்லிக்காய் தயிர் பச்சடி
தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 2, தயிர் - அரை கப், பச்சை மிளகாய் - ஒன்று, சீரகம் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயை துருவிக் கொள்ளவும். பச்சை மிளகாய், சீரகம், தேங்காய் துருவலை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் நெல்லித் துருவல், அரைத்த விழுது, உப்பு சேர்த்து தயிருடன் கலக்கவும். எண்ணெயை சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்தால்... நெல்லிக்காய் தயிர் பச்சடி ரெடி.
நெல்லிக்காய் தொக்கு
தேவையானவை: நெல்லிக்காய் - 20-25, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம் - தலா ஒரு டீஸ்பூன் (வறுத்துப் பொடிக்கவும்), நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: நெல்லிக்காயை கொட்டை நீக்கி, பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, நறுக்கிய நெல்லிக்காய், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும். உப்பு சேர்க்கவும். நன்கு வதங்கி எண்ணெய் பிரிந்து வரும் போது கடுகு, வெந்தயப்பொடி சேர்க்கவும். 5 நிமிடம் கிளறி, இறக்கியதும் ஆறவிட்டு, சுத்தமான பாட்டிலில் போட்டு வைக்கவும்.
நெல்லி ஜாம்
தேவையானவை: நெல்லிக்காய் - 20, சர்க்கரை - கால் கிலோ.
செய்முறை: நெல்லிக்காயை வேக வைத்து கொட்டை நீக்கி, துண்டுகளாக்கி, உலர விடவும். அடுப்பில் பாத்திரத்தை ஏற்றி, சூடானதும் சர்க்கரைப் பாகு காய்ச்சவும். சர்க்கரை கரைந்து வரும்போது நறுக்கி வைத்திருக்கும் நெல்லிக்காயைச் சேர்க்கவும். பாகு இறுகி வரும்போது இறக்கி, ஆற வைத்துப் பின் பாட்டிலில் போடவும். தினசரி ஒரு துண்டு வீதம் சாப்பிட, நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
காய்கறி புளி மண்டி
தேவையானவை: வெண்டைக்காய் - 4, கத்திரிக்காய் - ஒன்று, அவரைக்காய் - 5, வாழைக்காய், சுரைக்காய் - பாதி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் - தலா 3, பச்சை மொச்சை - கால் கப், சின்ன வெங்காயம் - 10, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி - பெரிய நெல்லிக்காய் அளவு (அரிசி களைந்த நீரில் ஊற வைக்கவும்), கடுகு, வெந்தயம் - தலா கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை பெரிய துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் தாளிக்கவும். காய்கறிகளை போட்டு வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்க்கவும். புளித் தண்ணீர் ஊற்றி வேகவிடவும். காய்கறிகள் வெந்து சேர்ந்தாற்போல் வரும்போது இறக்கி வைக்கவும்.
பாலக் பக்கோடா
தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பாலக்கீரை - ஒரு கட்டு, வெங்காயம் - ஒன்று, இஞ்சி - சிறிய துண்டு, சீரகம், சோம்பு - தலா கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாசிப்பருப்பை 2 மணி நேரம் ஊறவிடவும். ஊறிய பருப்புடன் உப்பு, பச்சை மிளகாய், சீரகம், சோம்பு, இஞ்சி சேர்த்து அரைக்கவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம், கீரை சேர்த்துப் பிசையவும். மாவை சூடான எண்ணெயில் பக்கோடா போல் கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
கத்திரிக்காய் டிலைட்
தேவையானவை: பெரிய கத்திரிக்காய் - ஒன்று, மைதா மாவு - கால் கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், பிரெட் தூள் - கால் கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கத்திரிக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். மைதா மாவில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பஜ்ஜி மாவு பதத் துக்கு கரைக்கவும். கத்திரித் துண்டுகளை மாவில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டியெடுத்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பச்சைப் பட்டாணி வடை
தேவையானவை: உரித்த பச்சைப் பட்டாணி - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு - கால் கப், வெங்காயம் - ஒன்று, சோம்பு, மிளகு, சீரகம் - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: உரித்த பச்சைப் பட்டாணி, சோம்பு, மிளகு, சீரகம், சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வடை மாவு போல் பிசைந்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி, மாவை அதில் வடைகளாகத் தட்டிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
கல்யாணப் பூசணி பச்சடி
தேவையானவை: மஞ்சள் பூசணி - கால் கிலோ, மிளகாய்த்தூள், மல்லித்தூள் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் - 5, கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மஞ்சள் பூசணியை துண்டுகளாக்கி, மஞ்சள்தூள் சேர்த்து வேக விட்டு... ஒன்றிரண்டாக மசிக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி... கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் தாளிக்கவும். மசித்த பூசணியை சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்துக் கலக்கி கொதிக்கவிட்டு, நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
மரவள்ளிக்கிழங்கு கீர்
தேவையானவை: மரவள்ளிக்கிழங்குத் துருவல் - அரை கப், பால் - அரை லிட்டர், சர்க்கரை - ஒரு கப், நெய் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், முந்திரி, திராட்சை - சிறிதளவு, பாதாம் பவுடர் - ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: மரவள்ளிக்கிழங்கை பாதி வேக வைத்து, துருவிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு நெய்யை சூடாக்கி, முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். மீதி நெய்யில் மரவள்ளிக் கிழங்குத் துருவலை வதக்கவும். பாலைக் காய்ச்சி, கொதி வரும்போது வதக்கிய மரவள்ளிக் கிழங்குத் துருவலை சேர்த்து வேகவிடவும். அதனுடன் சர்க்கரையை சேர்த்து... பால் சுண்டி வரும்போது, ஏலக்காய்தூள், பாதாம் பவுடர், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கினால்.... வித்தியாசமான கீர் ரெடி! சூடாகவோ, குளிர வைத்தோ பரிமாறலாம்.
பட்டாணி கீர்
தேவையானவை: பச்சைப் பட்டாணி - ஒரு கப், பால் - அரை லிட்டர், சர்க்கரை - முக்கால் கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: பச்சைப் பட்டாணியை ஆவியில் 10 நிமிடம் வேகவைத்து, பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சி, அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்கவிட்டு, மிதமான தீயில் 10 நிமிடம் அப்படியே வைக்கவும். பின்னர் அதில் சர்க்கரையைச் சேர்க்கவும். எல்லாம் நன்றாகச் சேர்ந்து வரும்போது வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கினால்... சூப்பர் பட்டாணி கீர் ரெடி.
பனங்கிழங்கு வெல்ல பாயசம்
தேவையானவை: பனங்கிழங்கு - 4, வெல்லம் - முக்கால் கப், தேங்காய்ப் பால் - 2 கப், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை - சிறிதளவு.
செய்முறை: பனங்கிழங்கை வேக வைத்து, நாரெடுத்து, துருவிக் கொள்ளவும். வாணலியில் நெய்யை சூடாக்கி, துருவலை வதக்கி, ஒன்றரை கப் தேங்காய்ப் பாலில் வேகவிடவும். வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், முந்திரி, திராட்சை சேர்க்கவும். மீதமுள்ள அரை கப் தேங்காய்ப் பாலை சேர்த்து, கொதி வந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
வெஜ் ஊறுகாய்
தேவையானவை: கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, பட்டாணி, முள்ளங்கிக் கலவை - ஒரு கப், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, வெந்தயப்பொடி - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், இஞ்சி - விரல் நீளத்துண்டு, பூண்டு - 5 பல், புளி - எலுமிச்சை அளவு, நல்லெண்ணெய் - அரை கப், உப்பு - தேவையான அளவு (விருப்பப்பட்டால் பேரீச்சை துண்டுகள் சேர்க்கலாம்).
செய்முறை: காய்கறிகளை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஆவியில் வேக வைக்கவும். ஈரம் போக உலர விடவும். வாணலியில் எண்ணெயை ஊற்றி, சூடானதும் பூண்டு, இஞ்சி (பொடியாக நறுக்கியது) வதக்கவும். இதனுடன் காய்கறிகள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும். புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விடவும். பச்சை வாசனை போனதும் கடுகு - வெந்தயப் பொடி சேர்த்து எண்ணெய் பிரியும்போது இறக்கி, பாட்டிலில் ஊற்றி வைக்கவும்.
காய்கறிகளை சமைக்க நேரம் இல்லாதபோது கைகொடுக்கும் இந்த ஊறுகாய்.