செர்பிய நாட்டைச் சேர்ந்த 59 வயதுப் பெண்மணி ஒருவருக்கு இதயத்தில் பிரச்னை. ஜெர்மனியில் உள்ள மருத்துவமனையில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும், பேஸ் மேக்கர் கருவி பொருத்தும் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், அவரது இதயத்தின் பம்ப் செய்யும் திறன் மேம்படவில்லை. அடுத்தடுத்த சிகிச்சையைத் தாக்குப்பிடிக்க
|
செர்பியப் பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை குறித்து ஃபிரான்டியர் லைஃப் லைன் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் ஜி.என்.பிரசாத்திடம் பேசினோம். ''பொதுவாக மனித இதயம் (பெரியவர்கள்) ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 80 முறை துடிக்க வேண்டும். ஆனால், 'இதயம் செயல் இழப்பு' என்கிற பாதிப்புக்கு ஆளான அந்த செர்பியப் பெண்ணுக்கு இதயத் துடிப்பு நிமிடத்துக்கு 30 முதல் 35 எனக் குறைந்து இருந்தது. இதனால், பக்கத்து அறைக்கு நடந்து செல்லக்கூட அவரால் முடியவில்லை. சில அடிகள் எடுத்துவைத்தாலே, அவருக்கு மூச்சுத் திணறல் வரும். அவருடைய இதயத்தின் பம்பிங் திறன் 30 சதவிகிதம்தான் இருந்தது. ரத்த அழுத்தம், சிறுநீரகத்தில் கோளாறு என்று இன்னும் சில பிரச்னைகளும் அவருக்கு இருந்தன. அதனால், எந்த அறுவை சிகிச்சையும் பலன் அளிக்காது என்ற நிலையில், ஸ்டெம் செல் சிகிச்சையைப் பரிந்துரை செய்தோம்.
இந்த சிகிச்சைக்காக அவரது எலும்பு மஜ்ஜையில் இருந்து 150 மி.லி. ரத்தம் எடுக்கப்பட்டது. ஆய்வகத்தில் பல்வேறு செயல்பாடுகளுக்குப் பிறகு அந்த ரத்தத்தில் இருந்து சிடி-34 என்ற செல்லைத் தனியாகப் பிரித்து எடுத்தோம். அப்படிப் பிரிக்கும்போது, வெறும் 12 மி.லி-தான் சிடி-34 ஸ்டெம்செல் கிடைத்தது. அந்த ஸ்டெம் செல்லை ஊசி மூலம் அந்தப் பெண்ணின் நெஞ்சுக்கூட்டைத் திறந்து இதயத் தசையில் செலுத்தினோம். அதாவது 12 மி.லி. சிடி-34 செல்லை சமமாகப் பிரித்து வலது மற்றும் இடது கொரணரியில் 5 முதல் 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாகச் செலுத்தினோம். பொதுவாக நெஞ்சுக் கூட்டைத் திறக்காமலேயே, இதயத்தில் இந்த ஸ்டெம் செல்லை செலுத்தலாம். இதயத்துக்கு ரத்தம் கொண்டுசெல்லும் குழாய் பகுதிக்கு மட்டும் அனஸ்தீஷியா கொடுத்துவிட்டு, ஸ்டெம் செல்லை இதயத் தசையில் செலுத்துவோம். ஆனால், சில பிரச்னைகள் காரணமாக இவருக்கு நெஞ்சுக்கூட்டைத் திறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த அனைத்து செயல்பாடுகளும் மூன்று நாட்களில் செய்யப்பட்டது. ஒரே வாரத்தில், அவரது இதயத்தின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதயத் துடிப்பிலும் நல்ல முன்னேற்றம். நிம்மதியாகத் தன் சொந்த நாட்டுக்குத் திரும்பிவிட்டார்!'' என சிகிச்சை முறைகளை விளக்கினார்.
''இந்த சிகிச்சை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், இன்னும் ஆராய்ச்சி அளவில்தான் இருக்கிறது. இதய செயல் இழப்பு, ஆஞ்சியோபிளாஸ்டி, வென்ட்ரிக்குலர் ரீமாடலிங், இதய பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகளை மேற்கொண்ட பிறகும், இதயம் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் மேம்படாதவர்களுக்கு, இதய மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு. ஆனால், அந்த அளவுக்கு இதயங்கள் கிடைப்பது இல்லை. அதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டிய நிலை இருக்கிறது. வேறு சிகிச்சை செய்ய முடியாது என்ற நிலை உள்ளவர்களுக்கு, இந்த ஸ்டெம்செல் சிகிச்சையை நாங்கள் அளிக்கிறோம். இந்த சிகிச்சைக்குப் பிறகு 10 சதவிகிதம் வரை இதயத்தின் செயல்பாடு மேம்படுகிறது. நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டெம் செல்லே அவருக்கு செலுத்தப்படுவதால், நிராகரித்தல் என்ற பிரச்னை இதில் இல்லை. எதிர்காலத்தில் இந்த சிகிச்சையின் மூலம் இதயத்தின் செயல்பாட்டுத் திறன் மேலும் அதிகரிக்கும்.
ஸ்டெம் செல்லின் நன்மைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஸ்டெம் செல்லை உங்கள் இதயத்தில் செலுத்தினால், இதயத் திசுவாக வளர்ந்துவிடும். சிறுநீரகத்தில் செலுத்தினால், சிறுநீரகத் திசுவாக வளர்ந்துவிடும். கல்லீரலில் செலுத்தினால், கல்லீரல் திசுவாக வளர்ந்துவிடும். அதாவது, எந்த இடத்தில் அது செலுத்தப்படுகிறதோ, அந்த இடத்துக்கு ஏற்ற திசுவாக வளரத் தொடங்கிவிடும். இதைக்கொண்டு நடுக்குவாதம்(parkinson's disease),ஞாபக மறதி உள்ளிட்ட நோய்களைக்கூட குணப்படுத்தி இருக்கிறார்கள்!'' என்கிறார் வியக்க வைக்கும் விதமாக.
காஸ்மெடிக் சர்ஜரி, சிறுநீரகம் உள்ளிட்ட அறுவை சிகிச்சையிலும்கூட ஸ்டெம் செல்லைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பது, இன்னும் நல்ல செய்தி!