எந்தவிதமான முதலீடாக இருந்தாலும் சரி, அதன் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் கடுமையாக ஏறியிறங்கி இருக்கிறது. உலக அளவில் பல நாட்டு பங்குச் சந்தைகள் பாரதூரமாக ஏறியிறங்கி இருக்கின்றன. கச்சா எண்ணெய் விலைகூட 147 டாலர்கள் வரை உயர்ந்து, அதன்பிறகு கடுமையாகச் சரிந்தது. ஆனால், தங்கத்தின் விலை மட்டும் இறங்காமல் தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த ஏற்றத்தைப் பயன்படுத்தி லாபம் சம்பாதித்தவர்கள் மிகச் சிலர் மட்டுமே. இந்த விலையேற்றத்தை எதிர்பாராத பலரும் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.
விஷயம் தெரிந்த சிலர் மட்டும் வங்கிகள் விற்கும் தங்கக்காசுகளை வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இந்த காசுகளை வங்கிகள் திரும்ப வாங்கிக் கொள்வதில்லை என்ப தோடு, தங்க நகைக் கடைகளில் விற்கும்போது அவர்கள் கேட்கும் விலைக்கு கொடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
இந்த பிரச்னைக்களுக்கெல்லாம் ஒரு எளிய தீர்வாக நினைத்த நேரத்தில் தங்கத்தை வாங்கி, விற்று லாபம் பார்க்க நினைப்பவர்களுக்கு கிடைத்திருக்கும் ஒரு வரப்பிரசாதம் தான் கோல்ட் இ.டி.எஃப்.
கோல்ட் இ.டி.எஃப். என்றால் என்னமோ ஏதோ என்று அஞ்சத் தேவையில்லை. மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒரு வகைதான் 'எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்' என அழைக்கப்படும் இ.டி.எஃப் கள்.இந்த இ.டி.எஃப்.களில் பல வகை உண்டு. வங்கிப் பங்குகள், நிஃப்டி பங்குகள், ஜூனியர் நிஃப்டி பங்குகள், இன்ஃப்ரா பங்குகள் என பலவிதமான இ.டி.எஃப். திட்டங்கள் உள்ளன. இதில் ஒன்றுதான் கோல்ட் இ.டி.எஃப். தங்கத்தில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்க நினைக்கிற முதலீட்டாளர்களுக் காகவே இந்த கோல்ட் இ.டி.எஃப். திட்டத்தைக் கொண்டு வந்திருக்கின்றன மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள்.
இந்தியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் கோல்ட் இ.டி.எஃப். திட்டங்கள் அறிமுகப்படுத்தபட்டன. ஆனால், இன்றோ 10 கோல்ட் இ.டி.எஃப். திட்டங்கள் வந்துவிட்டன. என்.எஸ்.இ.கோல்ட்.காம் (http://www.nsegold.com) எனும் இணையதளத்தை பார்த்தாலே தெரிந்துவிடும், அந்த திட்டங்கள் குறித்த சகலமும்.
கோல்ட் இ.டி.எஃப்.பை பேப்பர் தங்கம் என்றும் சொல்கிறார்கள். நகைக் கடைகளில் நகையாக தங்கம் வாங்கும்போது அதை தொட்டுப் பார்த்து உணரலாம். ஆனால் இ.டி.எஃப். மூலம் முதலீடு செய்யும்போது அது நம் டீமேட் கணக்கில் அது யூனிட்களாக வரவு வைக்கப்படும். ஒரு யூனிட் என்பது கிட்டத்தட்ட ஒரு கிராம் தங்கத்துக்கு சமமானது.
பொதுவாக, இ.டி.எஃப். திட்டத்தை ஆரம்பிக்கும் முன்பே மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கணிசமான அளவு தங்கத்தை வாங்கி சேர்த்து வைத்திருக்கும். அந்தத் திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை அதிகரிக்க அதிகரிக்க தன் வசம் இருக்கும் தங்கத்தை சம்பந்தப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
தங்கம் விலை உயரும்போது அது நம்முடைய இ.டி.எஃப். யூனிட்களிலும் எதிரொலிக்கும். அதாவது, வெளி மார்க்கெட்டில் ஒரு கிராம் தங்கம் விலை 10 ரூபாய் உயர்ந்தால், நம்மிடம் இருக்கும் கோல்ட் இ.டி.எஃப். யூனிட்டின் மதிப்பும் சுமார் 10 ரூபாய்க்கு உயரும்.
விலை குறைந்தால் நம்மிடம் இருக்கும் யூனிட்டின் மதிப்பும் குறையும்.
சில ஆண்டுகளுக்குப் பின் நல்ல லாப விலைக்கு வந்தபிறகு அதை விற்று லாபம் பார்க்க நினைத்தாலும் விற்று பணமாக்கிக் கொள்ளலாம். அல்லது தங்கமாகவும் வாங்கிக் கொள்ளலாம். ஆனால், குறைந்த பட்சம் ஆயிரம் கிராம் தங்கத்துக்கு சமமான யூனிட்கள் இருந்தால் மட்டுமே தங்கமாக வாங்கிக் கொள்ள முடியும். ஒரு கிலோ தங்கத்தை வெளி மார்க்கெட்டில் நேரடியாக வாங்கும்போது வாட், செல்வ வரி, இன்ஷூரன்ஸ் போன்றவை செலுத்த வேண்டும். ஆனால், இ.டி.எஃப். யூனிட்களை தங்கமாக மாற்ற புரோக்கரேஜ் கட்டணங்களை மட்டும் செலுத்தினால் போதும்.
எப்படி முதலீடு செய்யலாம்?
கோல்ட் இ.டி.எஃப்.-யில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு மட்டும் இருந்தால் போதும். பங்குகளை வாங்க நீங்கள் ஏற்கெனவே டீமேட் கணக்கு வைத்திருந்தால், அந்த கணக்கிலேயே கோல்ட் இ.டி.எஃப். யூனிட்களையும் வாங்கலாம். பங்குச் சந்தை வர்த்தகமாகும் நேரத்தில் இந்த ஃபண்டுகளும் வர்த்தகமாகும். தேவைப்படும் நேரத்தில் எளிதாக வாங்கவும் முடியும், விற்கவும் முடியும்.
எவ்வளவு முதலீடு செய்யலாம்?
ஒவ்வொருவரின் போர்ட்ஃ போலியோவிலும் குறைந்தபட்சம் 10 முதல் 15 சதவிகிதம் வரை தங்கம் இருக்கலாம்.
எஸ்.ஐ.பி-யில் முதலீடு!
நகைக்கடைகளுக்கு போய் ஒரு கிராம், இரண்டு கிராம் என தங்க நகை வாங்க முடியாது. ஆனால், கோல்ட் இ.டி.எஃப்.பில் ஒரு யூனிட் தங்கத்தைகூட வாங்க முடியும். மாதந்தோறும் ஒன்றிரண்டு யூனிட் கோல்ட் இ.டி.எஃப். வாங்கினால் கூட சில மாதங்களில் ஒரு கணிசமாக யூனிட்கள் நம் வசம் சேர்ந்திருக்கும்.
அனைத்து இ.டி.எஃப்.களும் கிட்டத்தட்ட ஒரே அளவு வருமானத்தைத்தான் கொடுக்கும். காரணம், ஒவ்வொரு ஃபண்ட் நிறுவனமும் தன்னிடம் இருக்கும் மொத்த தொகைக்குமே தங்கத்தை வாங்குவதில்லை. அதிகபட்சமாக 10 சதவிகித தொகையை ரொக்க மாகவோ அல்லது இதர கடன் திட்டங்களிலோ முதலீடு செய்யும். இதுபோல எவ்வளவு தொகையை வைத்திருக்கிறார்களோ, அதற்கேற்றார்போல இ.டி.எஃப்.-ன் வருமானம் கூடவோ, குறையவோ வாய்ப்பிருக்கிறது.
இனியாவது சேமிப்பின் ஒரு பகுதியை தங்கத்தில் முதலீடு செய்வோமா?