பராசர பட்டர் என்கிற மகான் ஒருமுறை சொன்னார்:
"பகவான் எத்தனை எளிமையானவன் தெரியுமா? அவனுக்கு வாசனை சாம்பிராணி வேண்டாம். ஒரு கூளத்தையிட்டு புகைத்தாலும் அதனை ஏற்றுக் கொள்கிறான். ஏதோ ஒரு மலரிட்டு வணங்கினாலும் ஏற்றுக் கொள்கிறான்".
இப்படி பராசர பட்டர் சொல்லிக்கொண்டிருக்கும் போது அவர் சீடர் நஞ்சீயர் இடையில் கேள்வி கேட்டார்.
"சாத்திரங்கள் சில பூக்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்க வேண்டாம் என்று சொல்கிறதே"
"கண்டகாலிகா மலரைச் சமர்ப்பிக்கக் கூடாது என்பதுதான் சாத்திர வசனம். ஏற்றுக்கொள்வதில்லை என்று பொருள் அல்ல." என்றார் பராசரர்.
"இதென்ன முரண்பாடு?" என்று கேட்டார் சீடர்.
"முரண்பாடல்ல. தெளிவு. கண்டகாலிகா புஷ்பம் எப்படியிருக்கும்?"
"முள்ளோடு சூழ்ந்த மலராக இருக்கும்"
"அந்த மலரைப் பறிக்கும்போது பறிப்பவர்க்கு என்ன நடக்கும்?"
"முள் குத்தி இரத்தம் வந்து வேதனை கொடுக்கும்"
"இரக்கமே உருவான இறைவன் தன் பொருட்டு ஓர் மலர் பறிக்கும்போது கூட பக்தனுக்கு முட்கள் குத்தி வேதனைப்படுவதை ஏற்க மாட்டான் என்பதற்காகத்தான் சில புஷ்பங்களை பெரியவர்கள் ஒதுக்கியிருக்கிறார்களே தவிர அது பகவானுக்கு ஆகாது என்பதற்காக அல்ல" என்று பதில் சொன்னார் பராசரர்.
சீடன் மனம் தெளிந்தார்.