Monday, March 9, 2015

பள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள்



மைக்ரோசாப்ட் அதிகாரிகளிடம் விருதுபெறும் திலீப்
மைக்ரோசாப்ட் அதிகாரிகளிடம் விருதுபெறும் திலீப் 
கிராமப்புற மாணவர்கள் எல்லோருக்கும் நவீனக் கல்வி கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அந்த மாணவர்களுக்கு மிக நவீனமான முறையில் ஒரு ஆசிரியர் கற்பிக்கிறார். அவர் விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர் திலீப். அரசுப் பள்ளியில் பயிலும் தன் இரு மகள்களோடு நம்மை வரவேற்ற அவர், சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிகிறார். 

"குழந்தைகளுக்குப் பத்து நாளுக்கு முன்னாடி பாத்த சினிமா காட்சி மனசுல அப்படியே நிக்குது, ஆனா பத்து நிமிஷத்துக்கு முன்னாடி நடத்துன மனப்பாடப் பாட்டு மறந்து போயிருது. காரணம் குழந்தைகளுக்குப் புத்தகங்கள் மூலமாகப் படிக்கிற விசயங்களைக் காட்டிலும் படமாகப் பார்க்கிற விசயங்கள் தான் எளிதில் மனதில் பதியும்.

அதனால பாடங்களைப் பவர்பாயிண்ட், ஃபோட்டோ ஸ்டோரி, டிராயிங், அனிமேஷன் வீடியோக்களாக மாத்தி புரொஜக்டர் மூலமாகப் பாடம் நடத்துறேன். அதோடு, யூ டியூப்ல இருந்து கல்வி தொடர்பான வீடியோகளை எடுத்து, என்னோட குரல்லயே மொழி பெயர்த்து அதையே பாடமாக நடத்துவேன்." என்கிறார் அவர். 

இந்திய அரசு அவரது இந்த முன்முயற்சியை பாராட்டி திலீப்புக்கு கடந்த 2012- ம் ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருதை வழங்கியது. 

திலீப்பின் www.dhilipteacher.blogspot.in என்ற வலைப்பூவில் பள்ளிக் கல்வி தொடர்பான ஏராளமான தகவல்கள்கள் உள்ளன.  www.palli.in  இணைய தளத்தையும் அவர் நடத்துகிறார். 

கணினி மென்பொருள் உலகின் முதன்மையான நிறுவனமான, மைக்ரோசாஃப்ட் Microsoft Innovation Educator Leadership என்னும் போட்டியைப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்காகக் கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது. 

இந்த ஆண்டுக்கான போட்டியில் பங்கேற்க இந்தியாவில் இருந்து 762 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இந்த நிறுவனம் 15 ஆசிரியர்களைத் தேர்வு செய்து அதில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுக்க தில்லியில் கடந்த 20-ம் தேதி போட்டி ஒன்றை நடத்தியது. இந்தப் போட்டியில் பள்ளி ஆசிரியர்கள் பிரிவில் திலீப் முதலிடம் வென்றார்.

இதையடுத்து, அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் ஏப்ரல் மாதம் 86 நாடுகள் பங்கேற்கும் சர்வதேசக் கற்பித்தல் போட்டியில் இந்தியப் பிரதிநிதியாக அவர் கலந்து கொள்கிறார். கற்பித்தலில் பல புதுமைகளைக் கற்று அவர் திரும்பி, கிராமப்புற மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவார் என நம்பலாம்.