'வயது ஆகிக்கொண்டே போகிறது காலா காலத்தில் ஒரு கல்யாணத்தப் பண்ணிப் பாத்திடணும்' - இது பெற்றோர்களின் தவிப்பு; 'என் குணத்திற்குத் தகுந்த நல்ல வரனாக அமைய வேண்டும்' இது மணமக்களின் ஆசை; 'நண்பனின் கல்யாணத்திற்கு அவன் வியக்கும் அளவிற்கு ஒரு பரிசை கொடுத்திடணும்!' இது நண்பனின் எண்ணம்.
கல்யாணத்திற்கு என்ன பரிசளிக்கலாம் என நண்பர்களுடன் ஆலோசனை செய்து, கிடைத்த ஆலோசனையை எல்லாம் ஏதோ ஒரு குறை சொல்லி தவிர்த்துவிட்டு, கல்யாணம் நெருங்கி வந்துவிட்ட நிலையில், தொடர்ந்து குழப்பத்துடன் யோசித்து, கடைசியாக கல்யாணத்திற்கு முந்தைய நாள் அவசர அவசரமாக அருகிலிருக்கும் ஒரு கடையில் ஒரு சுவர் கடிகாரத்தை வாங்கி பரிசளிக்கும் நண்பர்கள் ஏராளம்.
ஈஷா பசுமைக் கரங்களின் 'பசுமை தாம்பூலம்'
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் திருமணங்கள், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அனைவரும் வியக்கும் வண்ணம் ஒரு பரிசை நீங்கள் அளிக்க முடியும். அதோடு, இந்தப் பரிசு உங்கள் நண்பரின் கையில் மட்டுமல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் அனைவரின் கைகளுக்கும் சென்று சேரும். ஆம்! உங்கள் பரிசுப் பொருளாக நம் சுற்றுச் சூழலின் தற்போதைய தேவையான மரக்கன்றுகளை வழங்கலாம்.
தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்குடன் சத்குருவால் துவங்கப்பட்டுள்ள ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம் உருவாகியுள்ள ஒரு அற்புதத் திட்டம்தான் பசுமைத் தாம்பூலம். சுப நிகழ்ச்சிகளுக்கு வருபவர்கள், சாப்பாட்டை ருசித்துவிட்டு மொய் எழுதிய கையோடு அரக்க பரக்க கிளம்புவது வழக்கமாகிவிட்ட இன்றைய காலத்தில், சுப நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் வழங்கும் கலாச்சாரத்தை உருவாக்கி, மரங்களின் தேவையை உணர்த்தி வருகிறது, ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்.
பசுமைத் தாம்பூலம் திட்டத்தின் மூலம், 1,800க்கும் அதிகமான திருமண நிகழ்சிகளில் 12 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்?
'அதெல்லாம் சரி! நான் ஏன் இதைச் செய்ய வேண்டும்?' இப்படியொரு கேள்வி வருவது இப்போதெல்லாம் இயல்பாகிவிட்டது. ஏதாவது பலன் இருந்தால் மட்டுமே ஒன்றைச் செய்ய மனம் ஒப்புகிறது. நீங்கள் எந்த ஒரு விலையுயர்ந்த பொருளை அன்பளிப்பாக வழங்கினாலும் ஒருவேளை அது மணமக்களின் வீடுகளை அலங்கரிக்கலாம், அல்லது அவர்களின் பீரோக்களில் முடங்கிக்கிடக்கலாம். ஆனால் இந்த உயிர்ப்புள்ள மரக்கன்றுகளை வழங்கும்போது அது நிச்சயம் தன் பலனை இந்த சுற்றுப்புறத்திற்கு வழங்கும்.
நாம் ஒரு திருமணத்தில் 1000 மரக்கன்றுகளை பரிசாக வழங்கினால், அவற்றுள் 60 சதவிகித மரக்கன்றுகள் வளர்ந்து மரமானால் கூட, அது நமது அடுத்த தலைமுறையினர் ஆக்ஸிஜனை சுவாசிப்பதற்கு நாம் இப்போது அச்சாரம் போடுவதாகும். நாம் இதைச் செய்யவில்லையென்றால் வரும் தலைமுறை காசு கொடுத்து ஆக்ஸிஜன் வாங்கும்போதெல்லாம் நம்மை சபிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மரக்கன்றுகளைப் பரிசாக வழங்குவதில் பொதுநலனோடு கொஞ்சம் சுயநலமும் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் வழங்கப்படும் மரக்கன்றுகள் நம் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டில் வளர்ந்து மரமாகும்போது அந்நிகழ்ச்சியையும் அதனை வழங்கியவரையும் ஞாபகப்படுத்திக் கொண்டே இருக்கும். நம் பெயர் சொல்லி ஒரு மரம் வளரும்போது நமக்குப் பெருமையும் சுற்றுப் புறத்திற்கு நன்மையும் ஒருசேரக் கிடைப்பது நல்லதுதானே!
ஈஷா நாற்றுப் பண்ணைகள்
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம், தமிழகத்தில் மொத்தம் 33 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, மகாகோணி, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஈஷா நாற்றுப்பண்ணைகளில் மரக்கன்றுகள் மிகக் குறைந்த விலைகளில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. திருமணங்கள் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்காக நீங்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்து மரக்கன்றுகளைப் பெற முடியும்.
உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறவும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062