வீட்டு வரவேற்பு அறையில் குப்புறப் படுத்துக் கொண்டு, பொம்மை ரயிலை தரையில் ஓடவிட்டுக் கொண்டிருந்தார் என் நண்பர். அவரை நிமிர்த்தி உட்கார வைத்துவிட்டு, ''என்னாச்சு? ஏன் இந்தக் குழந்தைத்தனமான ஆசை?'' என்று கேட்டேன்.
''இந்த வாழ்க்கையே போரடிச்சுப் போச்சு, சார்!'' என்றார், விரக்தியான குரலில்.
''அப்படி என்னதான் நடந்தது?''
''ஒண்ணும் சொல்லிக்கிறாப்ல இல்ல, சார்! பால் விலை ஏறிடுச்சாம். அதனால மத்தியான காபியை 'கட்' பண்ணிட்டாங்க. 'பிரதம மந்திரியே தெருவுல இறங்கிக் கூட்டறாரு; உலகநாயகன் ஏரியில இறங்கி தூர் வாருறாரு. நீங்க சும்மாதானே இருக்கீங்க. இன்னிலேர்ந்து நீங்கதான் வீட்டைப் பெருக்கிக் கழுவணும். பத்துப் பாத்திரம் தேய்க்கணும்; துணிமணிகளை துவைச்சுக் காயப் போடணும்'னு வீட்டம்மா உத்தரவு போட்டுட்டாங்க..!'' என்றார் பரிதாபமாக.
''சரி, அதுக்காக இப்படி பொம்மை ரயில் ஓட்டிக்கிட்டிருந்தா உங்க பிரச்னை தீர்ந்துடுமா?'' என்றேன்.
''குழந்தைப் பருவத்துக்கே திரும்பிடணும்கிற என் ஏக்கம்தான் இப்படி வெளிப்படுது, சார்! எந்தவிதமான கவலையோ பொறுப்போ இல்லாம ஜாலியா நேரத்தைக் கழிக்கணும். அப்பப்போ பெரியவங்ககிட்டே கிள்ளு, திட்டு, குட்டு வாங்கினாக்கூட பரவாயில்லைன்னு தோணுது. குழந்தைகளாலே மட்டும் எப்படி சார் சதா காலமும் கலகலன்னு இருக்க முடியுது? அவங்களைப் பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கு!'' என்றார்.
''அது வேற ஒண்ணுமில்ல... குழந்தைகளுக்குப் பொதுவா துறவு மனப்பான்மை அதிகம். ஒரு கட்டம் வரைக்கும்தான் பொம்மைமீது குழந்தைக்கு பிரேமை இருக்கும். கொஞ்ச நாள் போனா அதை மறந்துடும். நாம வாங்கிக் கொடுக்குற டெடி பியரோ, மூணு சக்கர சைக்கிளோ வாழ்க்கை முழுக்கத் தன் கூடவே இருக்கணும்னு எந்தக் குழந்தையும் ஆசைப்படாது. அதே மாதிரி, கடந்த காலம் பற்றிக் குழந்தைகள் கவலைப்படுறது இல்லை; எதிர்காலம் பற்றிக் கலவரப்படறதும் இல்லை. ஒவ்வொரு நாளையும் அதன் போக்கிலேயே அனுபவிக்குதுங்க'' என்றேன்.
''சரியா சொன்னீங்க, சார்! நாமும் அந்தக் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவங்கதானே? ஆனா, இப்ப நம்மால குழந்தைங்க போல நடந்துக்க முடியலையே? குழந்தைங்களோட மெச்சூரிட்டி நமக்கு வர மாட்டேங்குதே..!'' என்று அங்கலாய்த்தார் நண்பர்.
"அதுக்குக் காரணம், கோபம். மத்தவங்களுடைய குற்றங்களை மட்டுமே பார்க்கிற நம்ம கெட்ட குணம்! இது ரெண்டையும் விட்டோம்னாலே நாமும் குழந்தைகளைப் போல எப்பவும் சந்தோஷமா இருக்க முடியும். 'குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, குற்றங்களை மறந்துவிடும் மனத்தால் ஒன்று'ங்கிற பாட்டுல, 'பிள்ளைகளாய் இருந்தவர்தான் பெரியவரானார்; அந்தப் பெரியவர்கள் கோபத்தினால் சிறியவரானார்'னு சொல்றார் வாலி..."
நான் முடிப்பதற்குள், விருட்டென்று எழுந்து உட்கார்ந்தார் நண்பர். மனைவியை அழைத்தார்.
''அடுத்தபடியா நான் என்ன வேலை செய்யணும்னு உத்தரவிடுங்க, மகாராணி!'' என்று சேவகன் போல் பவ்வியமாகக் குனிந்து கேட்டார்.
ஒரு குழந்தையின் குதூகலமும் உற்சாகமும் ததும்பிக்கொண்டிருந்தது அவரிடம்!