Thursday, January 30, 2014

சந்தோஷமாகத் தொடங்கும் வாழ்க்கை இறுதி வரை இனிப்பாக இருப்பது இல்லையே... ஏன்?

ர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் வாழ்க்கைப் பந்தம் உருவாவது திருமணத்தின்போதுதான் என்பது பலரின் கருத்து. ஆனால், திருமணச் சடங்குகள் முடிந்த பிறகு, முதல் இரவு வேளையில் 'இவன் நமக்கானவன்; இவள் நமக்கானவள், இனி வாழப்போகும் ஒவ்வொரு நொடியும், இனிமை மட்டுமே எங்களுக்குள் இருக்க வேண்டும்' என்ற ஓர் எண்ணம் வேர்விடும். அப்போது உருவாகும் பந்தம்தான், உண்மையிலேயே அந்தத் தம்பதியை மகிழ்ச்சியாக வாழவைக்கும். இப்படி சந்தோஷமாகத் தொடங்கும் வாழ்க்கை இறுதி வரை இனிப்பாக இருப்பது இல்லையே... ஏன்?

ஐந்து இலக்கத்தில் சம்பாதிக்கும் ஐ.டி. இளைஞன் அவன்; அதிர்ந்து பேசாதவன். அவளோ, இருக்கும் இடத்தைக் கலகலப்பாக்கிவிடும் அல்ட்ரா மாடர்ன் பெண். இருவரின் ஜாதகங்களையும் அலசி, பொருத்தங்கள் பார்த்தே திருமணம் செய்துவைத்தனர். முதல் இரண்டு மாதங்கள் நன்றாகவே போனது வாழ்க்கை. ஒருநாள், 'இன்னைக்குச் சீக்கிரம் வந்துடுங்க, வெளியே போறோம்... டின்னர் முடிச்சுட்டுத்தான் வீட்டுக்கு ரிட்டர்ன்' என்றாள் அவள். அலுவலகப் பணிகள் அழுத்தவே, அவன் சுத்தமாக மறந்துபோனான். போன் சைலன்ட் மோடில் இருந்ததால், மனைவியின் குறுஞ்செய்திகள், அழைப்புகள் எதையும் பார்க்கவில்லை. வீட்டுக்குக் கிளம்பியபோது போனைப் பார்த்தவன் அதிர்ந்து, மனைவிக்கு போன் செய்தான். முதல் முறை லாங் ரிங் போனது. இரண்டாவது முறை ஸ்விட்ச்டு ஆஃப்.

'சரி, சமாளிக்கலாம்' என வீட்டுக்கு வந்தவனிடம், சாமியாடிவிட்டாள். 'என்னைவிட உனக்கு வேலை முக்கியமா? என் சின்ன ஆசையைக்கூட நிவர்த்தி பண்ணமுடியாத நீயெல்லாம் ஒரு ஆம்பிளையா?' என்று அதிகம் பேசிவிட்டாள். பொறுத்துப் பார்த்தவன் 'பொளேர்' என அறைந்தான். 'நான் பேசுறதே எனக்குக் கேட்காத அளவுக்கு அமைதியானவன் நான். எனக்குன்னு வந்து வாச்சிருக்கியே...' என்று கத்திவிட்டுப் போய்விட்டான். அவள், கன்னத்தில் கைவைத்தபடி தூங்கியே போனாள். காலையில் அவன் சொல்லாமல் கொள்ளாமல் அலுவலகம் போய்விட்டான். 'நீ மட்டும்தான் இப்படிப் பண்ணுவியா... நானும் போறேன்' என்று அவள் அம்மா வீட்டுக்குப் போய்விட்டாள். இரண்டு குடும்பங்களும் சமாதானம் செய்துவைப்பதற்குப் பதிலாக ஆளாளுக்குத் தூண்டிவிட, இப்போது இருவரும் விவாகரத்துக்காக, கோர்ட் படி ஏறியிருக்கின்றனர்.

பெற்றோர் பார்த்து நிச்சயித்த திருமணத் தில் மட்டுமா... காதல் திருமணம் செய்தவர்களிலும் கணிசமானோர், விவாகரத்து கேட்டு விண்ணப்பிப்பதும் வினோதம்தான். இப்படிப் பிரச்னைகள் அதிகரிக்க என்ன காரணம்? ஆணும் - பெண்ணும் திருமண வயதை அடைந்துவிட்டாலும், மனதளவில் அவர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைப் பெற்றோர் உறுதி செய்ய வேண்டும். கால்கட்டு போட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று கல்யாணம் செய்துவைப்பதன் விளைவு, குடும்பத்தை நிர்வகிக்கத் தெரியாமல், சமூகத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரச்னை ஆரம்பமாகி, இறுதியில் அது தாம்பத்திய வாழ்க்கையையே நாசமாக்கிவிடுகிறது.

எல்லாப் பிரச்னைகளுக்கும் தாம்பத்தியம் தீர்வாகிவிடாது. ஆனால், தம்பதியராக இணைந்து பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு தாம்பத்தியம் ஏற்படுத்தும் பிணைப்பும், அது தரும் சக்தியும் அபாரமானது!

'தாம்பத்திய உறவு நல்லபடியாக இருந்தாலும், பிரச்னைக்குக் குறைவில்லை என்ன செய்வது?' என்று சிலர் கேட்கலாம். உங்கள் பிரச்னைகளை, நம்பிக்கைக்குரியவர்கள் தவிர மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். தாம்பத்திய உறவு சம்பந்தப்பட்டவற்றை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வது அமைதியைக் குலைத்துவிடும். இருவர் பக்கமும் சாராமல் பிரச்னைகளை அணுகக்கூடிய குடும்பநல ஆலோசகர்களிடம் வேண்டுமானால் சொல்லலாம்.

இருபாலருக்கும் வயசு ரொம்ப முக்கியம். நாம் திருமணம் செய்துகொண்ட பிறகு, அதற்குரிய கடமைகளில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், அதைவிட மிக முக்கியம். எமோஷனல் மெச்சூரிட்டி கொண்டவர்கள் மட்டுமே, பிரச்னைகளைச் சுமுகமாகக் கையாள்வார்கள். இப்போது திருமணமான தம்பதிகளின் பிரச்னையின் மூலவேரை ஆராய்ந்தால், அது பொருளாதாரத்தின் தலையை முட்டிக்கொண்டு நிற்கும். எனவே, ஃபைனான்ஸ் மேனேஜ்மென்ட் மிக முக்கியம்.

 

தம்பதியர் உறவை புத்துணர்ச்சியாக்க...

செய்ய வேண்டியவை:

ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக்கொள்வதைக் கைவிட வேண்டும்.

ஒருவருடைய தனித் திறமைகளை, மற்றவர் மதிக்க வேண்டும்.

ஒருவர், ஒரு நல்ல காரியம் செய்யும்போது, மற்றவர் அவருக்கு ஆதரவாக இருந்து பாராட்ட வேண்டும்.

ஒருவருக்கொருவர் உண்மையாகவும் நேர்மையாகவும் இருக்க வேண்டும்.

வாரத்துக்கு இருமுறையாவது திருப்தியான தாம்பத்திய உறவு மிக முக்கியம்.

ஈகோவைக் கைவிடுவது மிக முக்கியம்.

உங்கள் பார்ட்னரின் தேவைகளுக்குக் காதுகொடுங்கள்.


செய்யக் கூடாதவை:


இறந்தகாலச் சம்பவங்களைக் கூடுமானவரை மறப்பது அவசியம்.

மற்றவர்களோடு உங்கள் வாழ்க்கைத் துணையை என்றைக்கும் ஒப்பிடக் கூடாது.

பொதுவெளியில் சண்டை போட்டுக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.