ஒருவர் தன் மனைவியோடு எதற்கெடுத்தாலும் அடிக்கடி சண்டைக்கு நிற்பார். "ஒரு நாள் அலுவலகம் சென்று நீ வேலை செய்து பார்; சம்பாதிப்பது எவ்வளவு கடினம் என்பது உனக்கு புரியும்... ஒரு நாள் ஆபிஸ் போய் வா பார்ப்போம்..." என்றெல்லாம் அடிக்கடி மனைவியை சவாலுக்கு அழைப்பார். அந்தப் பெண்ணும் பல காலம் இதைக் கேட்டுக் கேட்டு புளித்துப் போனாள். ஆனாலும், ஒரு நாள் பொறுமை இழந்தவளாய் "எப்பப் பார்த்தாலும் இப்படியே சொல்றீங்க! ஒரு நாள் நீங்க வீட்டில் இருந்து இந்தப் பசங்களையெல்லாம் பார்த்துக்கோங்க... காலையில குளிப்பாட்டி சாப்பிட வைத்து வீட்டுப் பாடங்கள் சொல்லிக் கொடுத்து சீருடைகள் அணிவித்து பள்ளிக்கு அனுப்பிப் பாருங்கள்... அதோடு வீட்டில் சமைப்பது துவைப்பது என எவ்வளவு வேலைகள் இருக்கு...
ஒரு நாள் இதையெல்லாம் நீங்களும் தான் செஞ்சிப் பாருங்களேன்..." என பொங்கி எழுந்து எதிர் சவாலை எடுத்து விட, அவளது கணவனோ, "சரி அப்படியே செய்வோம்... இன்று நீ என் அலுவலகத்துக்கு போ... நான் வீட்டில் இருந்து பசங்களைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று போட்டிக்கு தயாரானான். அவன் மனைவியோ "ஏங்க இதெல்லாம் வேண்டாங்க உங்களாளெல்லாம் முடியாது..." என்று சொல்லிப் பார்த்தாள்.
ஆனாலும் விடாப்பிடியாய் அவளது கணவன் நிற்க, "சரி, நான் என்ன செய்ய முடியும்?" என்றவாறே வீட்டையும், பிள்ளைகளையும் கணவனிடம் ஒப்படைத்துவிட்டு அவள் அலுவலகத்திற்கு புறப்பட்டுப் போனாள். அங்கே போய்ப் பார்த்தால் அலுவலகம் ஒரே குப்பையும், கூளமுமாகக் கிடந்தது. முதலாளியின் மனைவி என்பதையெல்லாம் மனதில் கொள்ளாமல் அவளே கூட்டிப் பெருக்கி அனைத்தையும் சுத்தம் செய்தாள். வருகைப் பதிவேட்டை சரிபார்த்து கால தாமதமாய் அலுவலகம் வருபவர்களிடம் கண்டித்து அறிவுறுத்தினாள். கணக்கு வழக்குகளைப் பார்த்தாள். இடையிடையே இந்நேரம் வீட்டில் அந்தப் பாவி மனுஷன் என்ன செய்யறாரோ... என்ற கவலை வேறு வந்து வந்து போனது.
ஒரு வழியாய் மாலை ஐந்து மணி ஆனதும் வீட்டிற்கு புறப்படலாம் என்ற வேளையில் அலுவலகத்தில் பணிபுரிபவரின், மகளின் திருமண வரவேற்பு குறித்து உதவியாளர் வந்து சொல்ல உடனே அதற்கொரு பரிசுப் பொருளை வாங்கிக்கொண்டு அந்த கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். மணமக்களிடம் அன்பளிப்பைக் கொடுத்துவிட்டு தன் கணவர் வராததற்கு பொய்யான காரணம் ஒன்றை சொல்லிவிட்டு மணமக்களின் கட்டாயத்தின் பேரில் சாப்பிடச் சென்றாள். பந்தியில் உட்கார்ந்தவளுக்கு சிந்தனையெல்லாம் வீட்டைப் பற்றியே. இலையில் வைத்த ஜாங்கிரியை மூத்தவனுக்கு பிடிக்கும் என்று தனது கைப்பைக்குள் எடுத்து வைத்து பத்திரப்படுத்தினாள். முறுக்கு அவருக்கு பிடிக்குமே என்று அதையும் எடுத்து தான் சாப்பிடுவது போல் நடித்துக்கொண்டே தன் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவள் சாப்பிட்டதை விட, பிள்ளைகளுக்கும், கணவனுக்கும் எனஅவள் பைக்குள் பதுக்கியதே அதிகம். ஒரு வழியாய் வேக வேகமாய் வீட்டை நோக்கி வந்திறங்கியவள் ஆட்டோவை விட்டு இறங்கி வீட்டிற்குள் அவசரத்தோடே நுழைந்தாள். வாசலில் அவளது கணவன் கையில் ஒரு பிரம்போடு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பது போல் கோபத்தின் உச்சத்திற்கே ஏறிய வண்ணம் இங்கும் அங்குமாக நடந்து கொண்டிருந்தான்.
இவளைப் பார்த்ததும் "பிள்ளையா பெத்து வச்சிருக்கே... அத்தனையும் குரங்குங்க... எதுவும் சொல்றதைக் கேட்க மாட்டேங்குது... படின்னா படிக்க மாட்டேங்கிறாங்க... சாப்பிடுன்னா சாப்பிட மாட்டேங்கிறாங்க... அத்தனை பேரையும் அடிச்சு அந்த ரூம்ல படுக்க வச்சிருக்கேன். பாசம் காட்டுறேன்னு பிள்ளைகள நல்லா கெடுத்து வச்சிருக்கே..." என்று மனைவி மீது கோபம் கொப்பளித்துப் பாய...அவளோ "அய்யய்யோ பிள்ளைங்களை அடிச்சீங்களா..." என்றவாறே உள்ளே ஓடி தாழிட்டிருந்த கதவை திறந்து பார்த்தாள். உள்ளே ஒரே அழுகையும், பொருமலுமாய் பிள்ளைகள். விளக்கைப் போட்டவள் அதிர்ந்தவாறே "ஏங்க இவனையும் அடிச்சிப் படுக்க வச்சீங்க..? இவன் எதிர்வீட்டுப் பையனாச்சே...?" என்று அவள் அலற... "அது தானா அவன் எழுந்து எழுந்து வெளியே ஓடுனான்?" என அவளது கணவனும் அதிர்ச்சியுற அந்த நிலையில் இருவருக்கும் ஒன்று புரிந்தது. இல்லாள் என்றும் மனைக்கு உரியவள் மனைவி என்றும் சங்க காலம் தொடங்கி நம் மூதாதையர்கள் சொல்கிறார்கள் என்றால் அது சாதாரணமானது அல்ல.
ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும்; பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்; ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது. அது போலவே, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் எதையும் சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான். உயர்வு-தாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான்.
ஒரு இல்லத்தை பராமரிப்பதிலும்; பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும்; ஒரு பெண்ணின் பங்கும் தலையாயது. அது போலவே, பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.இந்நிலையில் ஒரு இல்லத்தின் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணமே கணவன் மனைவி மீதோ, மனைவி கணவன் மீதோ ஆதிக்கம் செலுத்தாமல் அன்பால் எதையும் சாதிக்கும் மனநிலையைக் கொண்டிருப்பது தான். உயர்வு-தாழ்வு கொள்ளாது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது தான்.