Saturday, May 8, 2010

‘தாயார் தினம்’ - அழிந்துதான் திருந்துவார்களோ என்னவோ?


அழிந்துதான் திருந்துவார்களோ என்னவோ? – பழ.கருப்பையா

இப்போதெல்லாம் நம்முடைய நாட்டிலே ‘தாயார் தினம்’ என்றெல்லாம் கொண்டாடத் துவங்கி விட்டார்கள்!

தாய் இறந்து விட்டால், அவள் இறந்த நாளை நீத்தார் நினைவு நாளாகவோ, திவசம் கொடுப்பதன் வழியாகவோ அவளை நினைவு கூர்வது வழக்கம்!

தன் மக்களை கருவில் சுமந்து, பின்பு தோளில் சுமந்து, பெற்று ஓரிரு ஆண்டுக்குத் தானே உணவாகி, அடுத்து நடக்கும் இருபது ஆண்டுகளுக்கு உணவூட்டும் தாயாகி, இறந்த பின்பும் அந்தக் குடும்பத்தைக் காத்து நிற்கும் காவல் தெய்வமான தாயின் நினைவு எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும் என்றாலும், அவளை அவள் இறந்த நாளில் நினைவு கூர்ந்து சிறப்பிப்பது தொன்று தொட்டு வரும் பழக்கம்!

ஆனால் இந்த ‘அதிநவீனங்களெல்லாம்’, தாய் வாழும் காலத்தில் அல்லவா ‘தாயார் தினம்’ கொண்டாடுகின்றன!

தாய் இறந்த பிறகு போற்றுவதற்கு அவளுடைய நினைவுகளே எஞ்சி நிற்கும்; அவள் வாழுங் காலத்தில் போற்றுவதற்கு அவளே இருக்கிறாளே! இதற்கு எதற்கு ஒரு தினம்?

விடுதலை பெற்ற பின்தானே அதை அடைவதற்குப் பட்ட பாட்டை நினைவுகூர, விடுதலை நாள் கொண்டாட வேண்டும்? தாய்தான் கண்ணெதிரே இருக்கிறாளே!
அவளுடைய அன்பில் நாளும்பொழுதும் நனைந்து, நம்முடைய அன்பில் அவளை நனைவித்து வாழும் வாழ்க்கையில், அவளை சிறப்பிக்கத் தனியான நாள் ஒதுக்கம் எதற்காக?

வெள்ளைக்காரப் பிள்ளைகள் படிக்கும்போது விடுதியிலோ, வயது வந்தபின் தனித்தோ வாழும்போது, ‘தாயார் தினம்’ என்று குறிப்பிடப்படும் அந்த நாளில், ஐந்தாவது கணவனோடு வேறொரு இடத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தாயை, நேரில் பார்த்து முகமன் கூறுவதற்கு அந்த தினம் தேவைப்படுகிறது!

நாம் மூன்றாவது மனிதருக்குத்தான் முகமன் கூறிப் பழக்கப் பட்டிருக்கிறோம்! பெற்ற தாய்க்கு அவளுடைய சதையின் சதையான நம்மால் எப்படி முகமன் கூற முடியும்? முகமன் என்பது வெறும் சம்பிரதாயமல்லவா! நமக்கெதற்கு தாயார் தினம்?

சிந்துச் சமவெளி மற்றும் வேத கால நாகரிக காலங்களிலிருந்து நேற்று வரை, நம்முடைய தமிழ்ச் சமூக அமைப்பில் கண்டும் கேட்டும் அறியாத ஒரு கொடுமை, இப்போது புதிதாக ஊருக்கு ஊர் உண்டாகி வருகிறது!

அனாதை இல்லங்கள் உண்டு. பசித்து வருவோர்க்குச் சோறிட அன்னச் சத்திரங்கள் உண்டு. மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் கூட இலவச மருத்துவமனைகள் உண்டு. ஆனால் ‘முதியோர் இல்லங்கள்’ என்ற ஒன்றை நாம் நேற்று வரை கேள்விப் பட்டிருக்கிறோமா?

முன்பெல்லாம் நம்முடைய தாய்மார்களின் கவலை, மகன் எங்கெங்கோ போகிறானே; கொள்ளி வைக்க வருவானா மாட்டானா என்பதுதான்! இப்போது அவர்களின் கவலை, முதியோர் இல்லங்களில் தள்ளி விடாமல் கடைசி வரை வைத்துக் கஞ்சி ஊற்றுவானா என்பதுதான்!

பட்டினத்தார் துறவு பூணப் போவதாகச் சொன்னவுடன் அவருடைய தாயார், ‘கொள்ளி வைக்க ஒரு மகன் வேண்டுமென்று உன்னை வரம் வாங்கிப் பெற்றேனே; நீ போகிறாயே!’ என்று கலங்கி அழுதார்களாம்! தாயாரின் அந்தக் கவலையைப் போக்கும் வண்ணம், ‘குடியிருந்த வீடு கொள்ளி வைக்க வருவேன்’ என்று பட்டினத்தார் உறுதியளித்து விட்டுப் போனாராம்! அது போல் தாய் சாவுக்கு எப்படியோ வந்து சேர்ந்து விடுகிறார். தாய் கேட்டுக் கொண்டபடி, தான் அவளுக்கு உறுதியளித்தபடி கொள்ளி வைக்க வேண்டிய நேரம்! ஆனால் பட்டினத்தார் கலங்கி, அழுது பின்வாங்குகிறார்!

‘என்னை முந்நூறு நாள் தொந்தி சரியச் சுமந்து, பெற்றுப் பாலூட்டி வளர்த்து ஆளாக்கிய தாய்க்கு நான் செய்யும் நன்றிக் கடன், அவள் உடலில் தீ மூட்டி எரிப்பதா?’ என்று கதறுகிறார்.

செத்துப் போன உடலில் ஓர் உணர்ச்சியும் இருக்காது. ஆயினும் ‘தாய் தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்’ என்று பட்டினத்தார் தவிப்பது, தீ தாயைச் சுட்டு விடுமே என்னும் அச்சத்தால்தான்! அது பிணம்தானே என்று பற்றற்ற ஞானியாலும் கருத முடியவில்லை!

அப்படி எல்லாம் போற்ற வேண்டிய தாயை, வாழும் காலத்திலேயே எப்படி முதியோர் இல்லத்தில் கொண்டு போய்ச் சேர்க்க முடிகிறது?

இப்போதெல்லாம் கடைசி வரை கஞ்சி ஊற்றி, ‘அம்மா’ என்று அன்பு பாராட்டுகிற மகனைப் பெற்ற வயிறுதான் பேறு பெற்ற வயிறு!

குடும்ப அமைப்பு எதற்காக ஏற்பட்டது? ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு கூரையின் கீழ், ஒரு பாயில் படுத்துக் கொள்வதற்காகவா?

உலகத்தில் எந்த உயிரினமும் தன் குட்டி பால்குடி மறப்பது வரையிலும், குஞ்சுக்கு சிறகு முளைக்கும் வரையிலும்தான் பொறுப்பெடுத்துக் கொள்கிறது. ஆனால், மனித குஞ்சுக்கு சிறகு முளைக்க இருபது ஆண்டுகள் அல்லவா தேவைப்படுகிறது!

முதற் பருவத்தில் தடுமாறி நடைபயிலும் குழந்தைக்குப் பற்றிக் கொள்ள, தந்தையின் கை தேவைப்படுகிறது. முற்றிய பருவத்தில் தந்தைக்கு பற்றிக் கொள்ள மகனின் தோள் தேவைப்படுகிறது.

முன் பருவத்தில் எப்படி பெற்றோர் துணையின்றிப் பிள்ளையால் இயங்க முடியாதோ, அது போலவே முதிர்ந்த பருவத்தில் பிள்ளையின் துணையின்றிப் பெற்றோரால் இயங்க முடியாது!

பிள்ளை தாயிடம் மொழி கற்று, தந்தை வழியாகக் கல்வி, தொழில் முதலியன பெற்று, அந்தப் பிள்ளை தனது காலில் ஊன்றி நிற்பதற்கு இருபது ஆண்டுகள் தேவைப்படுகின்றன! ஒரு மனிதனின் உருவாக்கத்திற்கு இவ்வளவு நீண்டகாலம் தேவைப்படுவதால், குடும்பம் என்னும் அமைப்புக் கட்டாயமானது!

பெண்ணுக்குக் கற்பும், ஆணுக்கு ஒழுக்கமும் கட்டாயமாயின! மண முறிவுகள் அயலொழுக்கங்களாகி விடுகின்றன! பற்றிய கையை நழுவ விடாமல் வாழ்வது கட்டாயத் தேவையானது!

உலகப் புகழ் பெற்ற, மேலாடை இல்லாத இளம்பெண்ணின் அஜந்தா ஓவியம், சுவரில் மாட்டப்பட்ட மூன்று நாளைக்குத்தான் கண்ணைக் கவரும்! பின்பு சுவரோடு சுவராகி விடும். இவ்வளவுதான் அழகின் வலிமை!

ஒருவருக்காக ஒருவர் எதையும் இழக்கத் தயாராக இருக்கும் உண்மையான அன்பின் மீதுதான் குடும்பங்கள் கட்டப்படுகின்றன.

இந்தக் குடும்பத்தின் முதல் கட்டம் முன் இருபது ஆண்டுகள், பிள்ளைகளைப் பேணி வளர்ப்பது; இரண்டாம் கட்டம் பின் இருபது ஆண்டுகள் பெற்றோரைப் பேணிக் காப்பது பெற்றோர்கள் இளமையில் பிள்ளைகளைத் தாங்கி வளர்க்கவும், பிள்ளைகள் முதுமையில் பெற்றோரைத் தாங்கிப் பேணவும்தான் குடும்ப அமைப்பு உருவாக்கப்பட்டது!

குடும்பம், அடிப்படை அலகு (fundamental unit); தேசம் அழிந்தால் குடி முழுகிப் போகாது. குடும்பம் அழிந்தால் எல்லாமே முழுகிப் போகும்!

பொறுப்பற்ற பிள்ளைகளால் முதியோர் இல்லங்கள் நாட்டின் பெருவழக்கானால், குடும்பத்தின் தேவையில் பாதி அழிந்து விடும்; பொறுப்பற்ற பெற்றோரால் பிள்ளைகளை விடுதிகளில் விட்டு வளர்க்கும் நிலை ஏற்படுமானால், குடும்பத்தின் மீதித் தேவையும் அழிந்து விடும்.

அன்பு, கண்டிப்பு, ஊக்கப்படுத்துதல், பிள்ளையின் மேல்நிலை வளர்ச்சிக்காகப் பெற்றோர் மேற்கொள்ளும் பெரும் தியாகம் இவை போன்றவையே, மிகச் சிறந்த குடிமகன்களை நாட்டுக்கு உருவாக்கித் தருகின்றன.

அதற்குக் கைம்மாறாக தளர்ச்சியில் பெற்றோரைத் தாங்கல், நோய் நொடியிலிருந்து அவர்களைக் காத்தல், அன்பில் நனைவித்து அவர்களைப் பேணல், அவர்களுடைய பெரும் சிறப்புகளைப் போற்றி மகிழ்வித்தல், வாழ்வின் மீது பிடிப்புக் கொள்ள வைத்தல் இவற்றை பிள்ளைகள்தாம் வழங்க முடியுமே தவிர, முதியோர் இல்லங்கள் வழங்க முடியாது!

அங்கு வேளா வேளைக்குச் சோறுதான் போடுவார்கள்; சோற்றால் மட்டுமா மனிதன் வாழ்கிறான்?

‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்றும், ‘தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை’ என்றும் கற்பிக்கப்பட்ட நாட்டில் Mother's day, Parent's day என்று கொண்டாடுவது, மீதமுள்ள 364 நாட்களும் அவர்களைக் கைகழுவி விடுவதற்கு அல்லாமல் வேறென்ன?

புதிய தலைமுறையில் –
கணவனுக்கு மனைவியிடம்
பிடிப்பில்லை;
மனைவிக்குக் கணவனிடம்
பிடிப்பில்லை;
இருவருக்கும் பெற்றோரிடம்
பிடிப்பில்லை;
பின்பு எதில்தான் இவர்களுக்குப்
பிடிப்பிருக்கிறது?
பணம்! பணம் ஒன்றில்தான்!

அழிந்துதான் திருந்துவார்களோ, என்னவோ?