Monday, August 15, 2011

முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி !

அதிகாலையில், அலாரம் வைத்து எழுந்து, அவசர அவசரமாகச் சமையல் முடித்து, குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கும்... கணவரை அலுவலகத்துக்கும் அனுப்பிவிட்டு, அரக்கப் பரக்க தனது அலுவலகத்துக்குக் கிளம்பிப் போய்ச் சேர்வதற்குள்ளாகவே... ஒருநாள் முழுமைக்குமான வேலைப் பளுவை அனுபவித்து விடுகிறாள் பெண்! அதன்பிறகும் அலுவலகத்தில் எட்டு மணிநேரம் சுற்றிச் சுழல்பவள்... மாலையில் வீடு திரும்பியதும் வீட்டைச் சுத்தம் செய்வது, இரவு சாப்பாடு தயாரிப்பது... என்று எல்லாம் முடித்து, 'அப்பாடா' என்று படுக்கையில் சாயும்போதுதான் முதுகுவலி முறுக்கி எடுக்கும்!

'ஆண், பெண் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவரையும் முதுகுவலி வாட்டி எடுத்தாலும்... பெரும்பாலும் அதிக வலியால் அவதிப்படுவது பெண்கள்தான்' என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள்.

'இதிலிருந்து தப்பிக்க என்ன வழி?' என்று தேடுபவர்களுக்காக பல்வேறு தகவல்களை இங்கே விளக்குகிறார் சென்னை எலும்பு மூட்டு நிபுணர் டாக்டர் எம்.பார்த்தசாரதி.

''மருத்துவ ரீதியாக முதுகுத்தண்டின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலியைத்தான் முதுகுவலி என்கிறோம். இந்த வலியைப் பற்றி தெரிந்து கொள்வதற்குமுன் முதுகெலும்பைப் பற்றிய அடிப்படை விஷயங்களைப் பார்ப்போம். பிற உயிரினங்களிடமிருந்து மனிதனை வேறுபடுத்திக் காட்டுவதும், அவன் நிமிர்ந்து நிற்க உதவுவதும் முதுகெலும்புதான். இது ஒரு தனி எலும்பு கிடையாது. 33-எலும்புகள், தசைகள், தசை நார்கள், நாண்கள், தண்டுவடம் இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து மிகவும் நேர்த்தியுடன் அமைந்த ஒரு சங்கிலித் தொடர்! உடலின் பல பகுதிகளில் இருக்கும் முதுகெலும்பைச் சார்ந்த நரம்புகள், உணர்ச்சிகளை தண்டுவடம் மூலமாக மூளைக்கு எடுத்து செல்கின்றன.

நேராக நிமிர்ந்து நிற்பது, வளைவது, நெளிவது போன்ற செய்கைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு, முதுகெலும்பைச் சார்ந்த தசை, நார், ஜவ்வுகளே காரணம். இந்த ஜவ்வு, நரம்பு, எலும்புகளில் ஏற்படுகிற சின்னச் சின்னப் பிரச்னைகளால்தான் முதுகுவலியும் உண்டா கிறது.

முன்பெல்லாம் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் பெரும்பாலும் முதுகுவலி நோயாளிகளாக இருப்பார்கள். அந்தக் காலம் மலையேறி, இப்போது 20 வயது நிரம்பாத பெண்களும்கூட முதுகுவலியால் அவதிப்படுகின்றனர். ஹை ஹீல்ஸ் எனப்படும் குதிகால் செருப்புகள் அணிவதால் பின்புற எடை முன்னோக்கித் தள்ளப்படுகிறது. இந்த எடையை பேலன்ஸ் செய்தபடியே ஒழுங்கற்று நடப்பதாலும் பெண்களுக்கு முதுகுவலி ஏற்படலாம். முதுகுவலிக்கும் உடல் அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. யாருக்கு வேண்டுமானாலும் முதுகுவலி வரலாம். உடலின் நடுப் பகுதியில் எடை அதிகரிப்பதால், முதுகுத் தண்டு வடத்தில் வலி உண்டாகும். கர்ப்பக் காலத்தில் பல பெண்களுக்கு முதுகுவலி வருவதற்கு இதுவே காரணம்.

முதுகெலும்புகளுக்கு நடுவில், ஜெல்லி போன்ற பிசுபிசுப்பு திசுக்களால் ஆன ஜவ்வுகள் அமைந்திருக்கும். எலும்புகள் உராய்வதைத் தடுக்க உதவும் இந்த ஜவ்வுகள், நாளடைவில் தேய்ந்து நரம்புகள் விலகுவதாலும் முதுகு வலி ஏற்படும். சத்தான உணவு வகைகளை எடுத்துக் கொள்ளாமல் போவதாலும்கூட எலும்புகள் விரைவில் தேய்மானம் அடைந்து, முதுகு வலியை உண்டாக்கும். சட்டென குனிந்து அதிகமான எடையைத் தம் கட்டித் தூக்க முயலும்போது முதுகெலும்பை நிலை நிறுத்தியுள்ள தசைகள் போதிய இணக்கத்தைத் தர தவறிவிடுகின்றன. இதனாலும் வலி ஏற்படலாம். தைலம், களிம்பு தடவுவது தற்காலிகத் தீர்வைத்தான் கொடுக்கும்.

முதுகுத் தண்டுவடத்தின் கீழ் பாகத்தில், ஏதேனும் பிரச்னை இருந்தால் தொடையிலிருந்து கால் வரை கொக்கி போட்டு இழுப்பது போன்ற வலி உணர்வு ஏற்படும். இந்த வலி கணுக்கால் வரையிலும் பரவும். முதுகை லேசாகத் திருப்பினாலோ, குனிந்து வேலை செய்தாலோ வலி அதிகமாகும். 'ஸயாடிகா' (Sciatica) என்னும் இந்த வலி... தும்மல், இருமல் வரும்போது இன்னும் அதிகரிக்கும்'' என்றெல்லாம் விளக்கங்கள் தந்த டாக்டர் பார்த்தசாரதி, அடுத்து சிகிச்சை ஏரியாவுக்குள் நுழைந்தார்.

''மாத்திரைகள், பிசியோதெரபி மூலமாக இந்த வலியைக் குறைக்க முடியும். லேசான வலி இருந்தால் 'எபிடியுரல் ஸ்டீராய்ட்' (Epidural steroid) எனும் ஊசி மருந்தை செலுத்தி கால் வலியைக் குறைக்க முடியும். உடம்பில் தேவை இல்லாமல் இருக்கும் ஊளைச் சதையை குறைத்தாலே சிலருக்கு முதுகுவலி தானாகவே சரியாகி விடும். வலி மிகவும் அதிகமாக இருந்தால்... முதலில் எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது நல்லது. அதிலும் தெளிவாகவில்லையெனில், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்யவேண்டும். இதில், முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு விலகி இருந்தாலோ, நரம்புகள் வெளியேறும் துவாரம் நெருக்கப்பட்டிருந்தாலோ எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். அதன்பிறகு, முதுகெலும்பில் இருந்து குறிப்பிட்ட அந்த நரம்பு வெளியேறும் துவாரத்தை அடைத்திருக் கும் திசுக்களை அகற்றி, துவாரத்தை சற்று பெரிதாக்குவதன் மூலம் கால் மற்றும் இடுப்புப் பகுதியில் ஏற்படும் வலியை முற்றிலும் குறைக்க முடியும்'' என்று முதுகுவலிக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டாக்டர் பார்த்தசாரதி!


வலியைக் குறைக்க வழி!

கம்ப்யூட்டர், டி.வி-யின் முன்பு முதுகை வளைத்த நிலையில் மணிக்கணக்கில் உட்காருவதை தவிர்க்கவும். ஒரே இடத்தில் தொடர்ந்து உட்காரும்போது, முதுகெலும்பை தாங்கும் தசைகள் பலவீனமாக வாய்ப்பு இருக்கிறது. இடையிடையே எழுந்து செல்வது நல்லது.

சேரில் உட்காரும்போது முதுகின் பின்புறம் சிறிய தலையணையை வைத்துக் கொள்ளலாம்.

முதுகெலும்பை ஒரே நேராக வைத்திருப்பது போல் படுக்கை அமைந்திருக்க வேண்டும்.

சக்திக்கு மீறிய சுமைகளைத் தூக்குவது, இறக்குவதைக் கட்டாயம் தவிர்க்கவும்.

மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டிலேயே எளிய பயிற்சிகளை செய்து முதுகுவலியைப் போக்க முயற்சிக்கலாம்.

30 வகை ரசம்

'சௌத் இண்டியன் சூப்பர் சூப்!'- இது, நம்ம ஊர் ரசத்துக்கு வெளிநாட்டவர்கள் வைத்திருக்கும் செல்லப் பெயர். நாக்கின் ருசி நரம்புகளைத் தூண்டி, சாப்பிடும் அனுபவத்தை ஆனந்தமாக்குவதால்தான், நம்முடைய சாப்பாட்டில் ரசத்துக்கு ஸ்பெஷல் இடஒதுக்கீடு கொடுத்திருக்கிறோம். அத்தகைய ரசத்தை, இங்கே 30 விதமாக சமைத்து திக்குமுக்காட வைக்கிறார் சமையல் கலை நிபுணர் வசந்தா விஜயராகவன்.

''இளநீர் ரசம், ஆப்பிள் ரசம், மாங்காய் ரசம் என வித்தியாசமான ரசங்களுடன், குடும்ப ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும் வகையில் மருத்துவ குணம்மிக்க இஞ்சி ரசம், ஓமவள்ளி ரசம், திப்பிலி ரசம் போன்றவற்றையும் தந்திருக்கிறேன்'' என்ற வசந்தா, சொல்லும் முக்கியமான டிப்ஸ் -

''பொங்கி வரும்போதே ரசத்தை இறக்கிவிடவேண்டும். அதிக நேரம் கொதிக்க வைக்கக் கூடாது.'' உங்களுக்காக 30 வகை ரசத்தையும், அழகுற அலங்கரித்து இங்கே பரிமாறுகிறார் செஃப் ரஜினி!

 கொட்டு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்,  கடுகு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய்,  உப்பு - தேவையான அளவு.


ரசப்பொடி செய்ய - தேவையானவை: தனியா - 300 கிராம், மிளகு - 100 கிராம், துவரம்பருப்பு - 100 கிராம், கடலைப்பருப்பு - 50 கிராம், சீரகம் - 25 கிராம், மஞ்சள்துண்டு - சிறியது, காய்ந்த மிளகாய் - 20-லிருந்து 30 அல்லது காரத்துக்கு ஏற்றப்படி (கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மெஷினிலோ அல்லது மிக்ஸியிலோ கரகரப்பாக அரைத்து வைத்துக் கொண்டு தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்).

செய்முறை: புளித் தண்ணீரை கொதிக்கவிடவும். புளி வாசனை போனவுடன் உப்பு, ரசப்பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு பொங்கு பொங்கியவுடன் கீழே இறக்கி... கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

 முருங்கைப் பிஞ்சு ரசம்

தேவையானவை: முருங்கைப் பிஞ்சு (நறுக்கியது) - ஒரு கப், துவரம்பருப்பு - கால் கப், தக்காளி - 2, மிளகு - சீரகத்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, தக்காளி, முருங்கைப் பிஞ்சு ஆகியவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். இதில் தேவையான தண்ணீர் சேர்த்து, அடுப்பில் வைத்து, உப்பு, மிளகு - சீரகத்தூள் சேர்க்கவும். அடுப்பை மிதமான தீயில் எரிய விடவும். ஒரு கொதி வந்ததும் கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.

 வெங்காய ரசம்

தேவையானவை: தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 6, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - 2, நறுக்கிய வெங்காயம் - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சித் துருவல், பூண்டு, தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சிறிது நேரம் வதக்கி விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் புளித் தண்ணீர், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும் (தேவைப்பட்டால் இன்னும் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும். கறிவேப்பிலை தூவவும் .

 கொத்தமல்லி ரசம்

தேவையானவை: தக்காளி - 3, தனியா - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கொத்தமல்லி - ஒரு சிறிய கட்டு, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, கொத்தமல்லியுடன் தனியா, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதைத் தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். பெருங்காயம் தேவை இல்லை.

 

கறிவேப்பிலை ரசம்

தேவையானவை: கறிவேப்பிலை - ஒரு கப், துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், புளி - ஒரு சிறிய உருண்டை,

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நெய் - சிறிதளவு, கடுகு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: கறிவேப்பிலை, துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளியில் இரண்டு கப் தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும். இதை அடுப்பில் வைத்து மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிடவும். இதனுடன் உப்பு மற்றும் அரைத்த விழுதை சேர்த்து, மேலும் ஓரிரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

 பொரித்த ரசம் - 1

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி - 2, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 3 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

அரைக்க: துவரம்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, மிளகு - ஒரு டீஸ்பூன் (சிறிது நெய்யில் வறுக்கவும்), சீரகம் - ஒரு டீஸ்பூன் (வறுக்க வேண்டாம்).

செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி துண்டுகள் சேர்த்து தக்காளி வேகும் வரை கொதிக்க விடவும். (அல்லது பருப்பு, தக்காளி துண்டுகளை ஒன்றாக வேக வைத்து மசிக்கவும்). இதில் தேவையான அளவு அரைத்த பொடி, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, பொங்க வைத்து,  கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

 பொரித்த ரசம் - 2

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்புத் தண்ணீர் - 2 கப், காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - ஒரு கப், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.  

செய்முறை: தனியா, உளுத்தம்பருப்பு, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை நெய்யில் வறுத்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த விழுதுடன் பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, உப்பு கலந்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து.... கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு இறக்கவும்.

 திப்பிலி ரசம்

தேவையானவை: கண்ட திப்பிலி - 10 கிராம், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கடுகு -  ஒரு டீஸ்பூன், புளி - எலுமிச்சம் பழ அளவு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு திப்பிலியை வறுக்கவும். கீழே இறக்கி சிறிதளவு தண்ணீர் விட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும் காய்ந்த மிளகாய், புளி, மிளகு, சீரகம் ஆகியவற்றை இதில் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். பிறகு, இதை ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கரைத்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும் .

 ஒப்பட்டு ரசம்

தேவையானவை: வேக வைத்த கடலைப்பருப்பு - அரை கப், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், பொடித்த வெல்லம் - 3 டேபிள்ஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், ரசப்பொடி - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: வேக வைத்த கடலைப்பருப்பு, வெல்லம், தேங்காய் துருவலை சேர்த்து கெட்டியாக அரைத்து, வாணலியிலில் சேர்த்து கிளறிக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க விடவும். பெருங்காயத்தூள், ரசப்பொடி, உப்பு சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு, பருப்புக் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு, ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

 ஆப்பிள் ரசம்

தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் - ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) - அரை கப், தக்காளி துண்டுகள் - கால் கப், கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க: துவரம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள் ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஆப்பிள் துண்டுகளை 3 கப் தண்ணீர் விட்டு வேகவிடவும் (குழைய வேகவிட வேண்டாம்). பிறகு, இதில் தக்காளி துண்டுகள், மசித்த பருப்பு, வறுத்து அரைத்த விழுது,

மஞ்சள்தூள் உப்பு சேர்த்து, இரண்டு கொதி விட்டு இறக்கவும். எண்ணெ யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கொத்தமல்லி, கறிவேப் பிலை கிள்ளிப் போடவும்.

 துவரம்பருப்பு ரசம்

தேவையானவை: வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், துவரம்பருப்பு - மிளகு - மிளகாய் அரைத்த பொடி - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: பருப்புத் தண்ணீர், தக்காளி சாறு, அரைத்த பொடி, உப்பு பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து பொங்கி வரும்வரை கொதிக்கவிட்டு, கீழே இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்த்து, கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

 கிள்ளு மிளகாய் ரசம்

தேவையானவை: காய்ந்த மிளகாய் - 2, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், புளித் தண்ணீர் - 2 கப், கறிவேப்பிலை, கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: புளித் தண்ணீரை 5 நிமிடம் கொதிக்கவிட்டு... உப்பு, பெருங்காயத்தூள் சேர்க்கவும். கடுகு மற்றும் இரண்டாக கிள்ளிய மிளகாயை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும். கடைசியில் கறிவேப்பிலையை கிள்ளி சேர்க்கவும்.

 மைசூர் ரசம்

தேவையானவை: வேக வைத்த துவரம்பருப்பு - அரை கப்,  தக்காளி - 6, வெல்லம் - சிறிய துண்டு, கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, தனியா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், நெய், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: நெய்யில் கடலைப்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிவப்பாக வறுத்துக் கொள்ளவும் (சீரகத்தை வறுக்க வேண்டாம்). மிக்ஸியில் தண்ணீர் விட்டு, வறுத்து வைத்திருப்பவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும். கூடவே சீரகத்தை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தக்காளியை தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். தக்காளி சாறு, வேகவைத்து மசித்த துவரம்பருப்பு மற்றும் பருப்பு வேகவைத்த தண்ணீர் இவற்றுடன் அரைத்த விழுதையும் சேர்த்து, உப்பு போட்டு, 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். வெல்லம், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும்.

 மிளகு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் - 2 கப், மிளகு - 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, கறிவேப்பிலை - சிறிதளவு, கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். பாத்திரத்தில் புளித் தண்ணீரை விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து புளிவாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து, கறிவேப்பிலையை கிள்ளிப் போடவும்.

 மாங்காய் ரசம்

தேவையானவை: மாங்காய் துருவல் - அரை கப், துவரம்பருப்பு, மிளகு - தலா 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, தக்காளி சாறு - கால் கப், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு -  தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். மாங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் விட்டு வேக வைத்துக் கொள்ளவும். ஆறியபிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தக்காளி சாறு, உப்பு, அரைத்து வைத்திருக்கும் பொடி, பெருங்காயத்தூள் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்க வைத்து கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.

 அரைத்து விட்ட வேப்பம்பூ ரசம்

தேவையானவை: காய்ந்த வேப்பம்பூ - 2 டேபிள்ஸ்பூன், தக்காளி - ஒன்று, புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, நெய் (அ) எண்ணெய், உப்பு - தேவையான அளவு. வறுத்து அரைக்க: கடலைப்பருப்பு, தனியா - தலா 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கும்போது, தக்காளியையும் அரைத்து எடுக்கவும். இதனுடன் தேவையான புளித் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு, உப்பு சேர்க்கவும். நெய் அல்லது எண்ணெயில் கடுகு, வேப்பம்பூ தாளித்துச் சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

 திடீர் ரசம்

தேவையானவை: புளி - எலுமிச்சம் பழ அளவு, துவரம்பருப்பு - 3 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், தனியா - 6 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புளி, துவரம்பருப்பு, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய் ஆகிவற்றை லேசாக எண்ணெயில் வறுத்து, மிக்ஸியில் பவுடராக செய்து கொள்ளவும். இதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்துச் சேர்த்து, உப்பு, பெருங்காயத்தூள் ஆகியவற் றையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும். ரசம் தேவைப்படும் போது ஒரு பாத்திரத்தில் இந்தப் பொடியை போட்டு, தேவையான தண்ணீர் விட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். சட்டென்று செய்யக் கூடியது இந்த ரசம்.

 டொமேட்டோ ப்யூரி ரசம்

தேவையானவை: டொமேட்டோ ப்யூரி (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - ஒரு கப்,

மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், ரசப்பொடி - 2 டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: டொமேட்டோ ப்யூரியில் தேவையான தண்ணீர் விட்டு, மஞ்சள்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். பிறகு ரசப்பொடி, உப்பு, பெருங்காயத்தூள் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும். கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவவும்.

 தனியா ரசம்

தேவையானவை: தனியா - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், தக்காளி - கால் கிலோ, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தனியா, காய்ந்த மிளகாய், துவரம்பருப்பு, சீரகம் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைக்கவும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து, வறுத்து அரைத்த விழுது, உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, அடுப்பில் வைத்து 5 நிமிடம் கொதிக்கவிடவும். பிறகு கீழே இறக்கி, கடுகு தாளிக்கவும்.

 பார்லி ரசம்

தேவையானவை: பார்லி - ஒரு கப், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - அரை கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பார்லியில் 3 கப் தண்ணீர் விட்டு நன்றாக வேக வைக்கவும் இந்த தண்ணீருடன் தக்காளி சாறு, மிளகு - சீரகப் பொடி, உப்பு போட்டு கொதிக்க வைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

 மோர் ரசம்

தேவையானவை: மோர் - 2 கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், வெந்தயம், கடுகு - தலா அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

செய்முறை: துவரம்பருப்பு, தனியா, வெந்தயம், மிளகு ஆகியவற்றை வறுத்து, சீரகத்தை சேர்த்து அரைக்கவும். மோரில் மஞ்சள்தூள், உப்பு, அரைத்த விழுது சேர்த்து லேசாக சூடு செய்து (கொதிக்க வைக்க வேண்டாம்) கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

 

புளி இல்லாத ரசம்

தேவையானவை: தக்காளி சாறு - 2 கப், வேக வைத்து கரைத்த துவரம்பருப்பு தண்ணீர் - அரை கப், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் (நீள வாக்கில் கீறியது) - 2, கறிவேப்பிலை - சிறிதளவு, உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை :  உளுத்தம்பருப்பையும், மிளகையும் சிறிது எண்ணெய் விட்டு வறுத்து, மிக்ஸியில் பொடிக்கவும். தக்காளி சாறு, பருப்புத் தண்ணீர், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து, அரைத்த பொடியையும் போட்டு 2 நிமிடம் கொதிக்கவிடவும். கீறிய பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், கறிவேப்பிலை சேர்த்து கீழே இறக்கி, எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

 புதினா ரசம்

தேவையானவை: புதினா இலைகள் - ஒரு கப், மிள காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், தக்காளி சாறு (அ) புளித் தண்ணீர் - 2 கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: புதினா இலைகளை தண்ணீர் விட்டு அரைத்து வடிகட்டவும் இந்த நீரில் உப்பு, மிளகாய்தூள், சீரகத்தூள் பெருங்காயத் தூள், தக்காளி சாறு அல்லது புளி தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிடவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்த்து இறக்கவும்.

 

இஞ்சி ரசம்

தேவையானவை: இஞ்சித் துருவல் - கால் கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - அரை டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப், கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: இஞ்சித் துருவலுடன் மிளகு, சீரகம், கறிவேப்பிலை, துவரம்பருப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். இதில் உப்பு, தக்காளி சாறு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

 இளநீர் ரசம்

தேவையானவை: இளநீர் - 2 கப், தக்காளி சாறு - அரை கப், துவரம்பருப்பு, மிளகு, சீரகம் - தலா 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், இளநீர் வழுக்கை - கால் கப், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: துவரம்பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து, கடைசியில் இளநீர் வழுக்கையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதனுடன் இளநீர், தக்காளி சாறு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துச் சேர்க்கவும்.

 ஸ்பெஷல் எலுமிச்சை ரசம்

தேவையானவை: தக்காளி - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கப், சீரகம் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், கடுகு, நெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாய், சீரகம், ஆகியவற்றுடன் தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைக்கவும் இதனுடன் தேவையான தண்ணீர், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கி, எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். கடைசியாக, நெய்யில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

 அரைத்துவிட்ட பூண்டு ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா - 4 டீஸ்பூன், மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு பல் - 10, புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கடுகு, எண்ணெய், உப்பு - தேவையானஅளவு.

செய்முறை: துவரம்பருப்பு, தனியா, மிளகு,  சீரகம், பூண்டு பல் ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் மஞ்சள்தூள் சேர்த்து புளி வாசனை போகும் வரை கொதிக்க விடவும். அதில் அரைத்த விழுதைச் சேர்த்து, உப்பு போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டு கீழே இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.

 ஓமவள்ளி ரசம்

தேவையானவை: ஓமவள்ளி இலை - 5, சுக்கு - ஒரு சிறிய துண்டு, மிளகு - அரை டீஸ்பூன், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், தக்காளி சாறு - 2 கப்,  நெய், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் ஓமவள்ளி இலை, சுக்கு, துவரம்பருப்பு, மிளகு ஆகியவற்றை லேசாக வதக்கி, விழுதாக அரைக்கவும். இதை தக்காளி சாறுடன் கலந்து தேவையான தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்கவும். கீழே இறக்கி நெய்யில் கடுகு, சீரகம் தாளித்துச் சேர்க்கவும்.

 

ஸ்பெஷல் பூண்டு ரசம்

தேவையானவை: புளித் தண்ணீர் - 2 கப், துவரம்பருப்பு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பூண்டு - 4 பல், தக்காளி - ஒன்று, கடுகு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: சிறிதளவு எண்ணெயில் துவரம்பருப்பு, சீரகம், பூண்டு ஆகியவற்றை வதக்கி கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரில் தக்காளி துண்டுகளை வேகவிடவும். பிறகு அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். 2 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்துச் சேர்க்கவும்.

 உருண்டை ரசம்

தேவையானவை: துவரம்பருப்பு - அரை கப், கடலைப்பருப்பு - கால் கப், புளித் தண்ணீர் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்,  கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,  கடுகு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  

வறுத்து அரைக்க: உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊற வைத்து, அரைத்து ஆவியில் வேக விடவும். வறுத்து அரைக்கக் கொடுத்துள்ளவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

புளித் தண்ணீருடன் மஞ்சள்தூள் சேர்த்து, புளி வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். வறுத்து அரைத்த விழுதை இதில் சேர்த்து, உப்பு போடவும். ஆவியில் வேக வைத்து எடுத்த பருப்பு கலவையிலிருந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி ரசத்தில் போட்டு, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி, கறிவேப்பிலை கிள்ளிப் போடவும்.

நாணயம்...நம்பிக்கை !

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்' என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்' என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.

பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ''அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?' என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று   வெளியே உதறினேன்.  காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.

''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான். ''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.' என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்.