கடவுளே! கையில கொஞ்சம்கூட காசே இல்ல. என் மேல கருணை வெச்சு, செலவுக்குக் கொஞ்சம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணினீங்கன்னா ரொம்ப உதவியா இருக்கும். என்னோட நன்றியின் அடையாளமா, நீங்க கொடுக்கிற பணத்துல பாதித் தொகையை உங்க கோயில் உண்டியல்ல போடறேன்!'னு கடவுள்கிட்ட மனமுருகி வேண்டிக்கிட்டானாம் ஒரு பக்தன்.
கோயிலை விட்டு வெளியே வந்தவன் கண்ணுல ஒரு பணக்கட்டு தென்பட்டுது. 'ஆஹா'ன்னு ஓடிப்போய் எடுத்துக்கிட்டான். எண்ணிப் பார்த்தான். பத்தாயிரம் ரூபாய் இருந்துது.
உடனே அவன் சட்டுனு, 'என்ன கடவுளே! எனக்கு இப்போ உடனடியா இருபதாயிரம் ரூபாய் தேவைன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. ஆனா, இருபதாயிரத்தைக் கொடுத்தா, நான் சொன்னபடி பாதித் தொகையை உங்க கோயில் உண்டியல்ல போடமாட்டேன்னு நினைச்சு, நீங்களே பாதியை எடுத்துக்கிட்டு மிச்சம் பத்தாயிரத்தை மட்டும் எனக்குக் கொடுத்திருக்கீங்களே, இது நியாயமா? உங்க பக்தன் மேல நீங்க வெச்சிருக்கிற நம்பிக்கை அவ்வளவுதானா?' அப்படின்னு உள்ளே மூலவரைப் பார்த்து ஒரு குரல் அழுதுட்டு, மொத்தப் பணத்தையும் எடுத்துக்கிட்டு நடையைக் கட்டினானாம். இது எப்படி இருக்கு?
உண்மையில் பார்த்தோம்னா, ஒவ்வொரு உயிரினத்தைப் படைக்கும்போதும், அது இந்த உலகில் ஜீவித்திருக்கத் தேவையான விஷயங்களையும் சேர்த்தேதான் கடவுள் அதைப் படைச்சிருக்கார்ங்கிறது புரியும். ஒருத்தன் ஒரு துறவியிடம் போனான். 'சுவாமி, கடவுளைப் பத்தி நீங்கதான் ஆஹா, ஓஹோன்னு பேசறீங்க. என்னைப் பொறுத்தவரைக்கும் கடவுள் இரக்கமில்லாதவர். என்னைப் பரம ஏழையா படைச்சு, வறுமையில் வாடும்படி செய்தவர் அவர்தான். நான் வளமாக வாழ, நீங்கதான் சுவாமி எனக்கு ஒரு நல்ல வழி காட்டணும்'னு கேட்டுக்கிட்டான்.
உடனே அந்தத் துறவி, 'உன்னிடம் உள்ளதை நல்ல விலைக்கு விற்றுப் பணமாக்கிக்கலாமேப்பா?'ன்னு கேட்டார். 'அப்படி உருப்படியா எதுவும் என்கிட்டே இல்லையே சுவாமி? அதானே பிரச்னை!'ன்னான் அவன்.
'உன்கிட்ட இருக்கிறதையே கேக்கறேன். உன் ரெண்டு கண்களையும் எனக்கு எடுத்துக் கொடு. உனக்கு நான் இருபதாயிரம் ரூபாய் தரேன்'னார் துறவி.
'ஐயையோ! கண்ணில்லாம எப்படி சாமி நான் நடமாடுவேன். வேற ஏதாச்சும் கேளுங்க'ன்னான் அவன். 'சரி, உன் வலது கையைக் கொடு. பத்தாயிரம் ரூபாய் தரேன்'னார் துறவி. அவன் அதுக்கும் தயங்கினான். தொடர்ந்து துறவி, அவனிடமுள்ள ஒவ்வோர் உறுப்பாகக் கேட்டு, நல்ல விலை கொடுப்பதாகச் சொன்னார். அவன் எதுக்கும் சம்மதிக்கவில்லை.
'பாருப்பா! உன்கிட்ட எதுவுமே இல்லைன்னு சொன்னே! நானோ உன்கிட்ட இருக்கிறவற்றை ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்கு வாங்கிக்கிறேன்னு கேட்டேன். ஆனா, நீதான் சம்மதிக்கலை. ஆக, உன்கிட்ட விலை மதிப்பில்லாத சொத்து நிறையவே இருக்கு. அப்படியிருக்கிறப்போ நீ ஏழைன்னு எப்படிச் சொல்லிக்க முடியும்? செல்வச் சுரங்கமான இந்த ஆரோக்கியமான உடலையும், உடல் உறுப்புகளையும் கடவுள் உனக்குக் கொடுத்திருக்கார். அவற்றை நல்ல முறையில் பயன்படுத்தி, உழைத்துப் பணம் ஈட்டி, வளமாக வாழ்வது உன் கையில்தான் இருக்கு!' என்றார் துறவி.
ஆமாம்! பசியெடுக்கும் வயிற்றை மட்டும் கடவுள்
நமக்குப் படைத்து இந்த உலகுக்கு அனுப்பிவிடவில்லை. கூடவே, உழைப்பதற்கு இரண்டு கரங்களையும், பத்து விரல்களையும் சேர்த்தேதான் அனுப்பியிருக்கிறார்!