செல்ஃபோன் ஒலித்தது. ''ஹலோ...'' என்றேன்.
''நாராயணா...'' - எதிர்முனையில் ஒலித்தது குரல்.
சட்டென்று ''ஸாரி... ராங்க் நம்பர்! நான் கேசவன்'' என்று லைனைத் துண்டித்தேன்.
''யாருங்க ஃபோன்ல'' என்று கேட்டார் அருகிலிருந்த நண்பர்.
''தெரியல! எடுத்த எடுப்பிலேயே 'நாராயணா'ன்னு ஆரம்பிச்சார். என் பெயர் அது இல்லயே! அதான், ராங் நம்பர்னு சொல்லிட்டு வைச்சுட்டேன்''
இதைக்கேட்டதும் நண்பரும் ''நாராயணா...'' என்று இழுக்க, ''அட நீங்களுமா?'' என்று நான் அலுத்துக்கொண்டேன்.
''அட! அது ஒண்ணும் இல்ல சார். சிலபேருக்கு அப்படியொரு வழக்கம் உண்டு. ஃபோன்ல மட்டுமில்ல... நேர்ல பார்க்கும்போதும் 'நாராயணா'ன்னு சொல்லிட்டுத்தான் பேச்சை ஆரம்பிப்பாங்க'' என்றார் நண்பர்.
நண்பர் சொல்வது சரிதான். எனக்குத் தெரிந்த ஒருவர், பார்க்கும்போதெல்லாம் 'சாமி சரணம்' என்று சொல்லிவிட்டே மேற்கொண்டு பேச ஆரம்பிப்பார். ஆரம்பத்தில் நானும், 'இவர் எதுக்கு நம்மகிட்ட சரண்டர் ஆகிறார்'னு யோசித்தது உண்டு. அப்புறம்தான், அவர் தீவிரமான ஐயப்ப பக்தர் என்று தெரிந்துகொண்டேன்.
இந்த 'சிக்னேச்சர் டியூன்' குறித்து எங்கள் விவாதம் தொடர்ந்தது. சிலர் 'ஹரி ஓம்' என்றும், வேறுசிலர் 'ராதே கிருஷ்ணா' என்றும் பேச்சின் துவக்கத்தில் குறிப்பிடுவதை சுட்டிக்காட்டினார் நண்பர். சாயி பக்தர்களான எனது நண்பர்கள் சிலர், 'சாயி ராம்' என்று சொல்லிவிட்டு முகமன் கூறுவதை நானும் நினைவுகூர்ந்தேன்.
''பேசும்போதுதான் என்றில்லை, ஏதாவது எழுத ஆரம்பிக்கும் போதும்... பிள்ளையார் சுழிக்குப் பதில் 'சாயி ராம்' என்றே துவங்குவார்கள்'' என்றார் நண்பர். அதே போன்று 'ராம்... ராம்' என்றும் சிலர் ஆரம்பிப்பது உண்டு.
நண்பர் கூறினார்: ''என்னோட உறவினர் ஒருத்தர் வயிறுமுட்ட சாப்பிட்டுவிட்டு ஏப்பம் விடுறதுக்கு முன்னாடியும் 'ராம் ராம்'னு சொல்லிவிட்டே ஏப்பம்விடுவார். அதுமட்டுமில்ல, தூங்கப் போகும்போது, தூங்கி எழுந்ததும்னு நேரம் வாய்க்கும்போதெல்லாம் தவறாம ராம நாமம் ஜபிக்கக்கூடியவர்கள் ஏராளம் பேர்...''
நண்பர் சொல்லிக்கொண்டிருக்க... நான், எனது செல்ஃபோனுக்கு வந்த எண்ணுக்கு டயல் செய்துகொண்டிருந்தேன். எனது தவற்றை 'ஃபோன்' செய்த நண்பரிடம் விளக்கி மன்னிப்பு கேட்க வேண்டுமே!
பேசி முடித்தபோது, ராம நாம மகிமையைச் சொல்லும் கம்ப ராமாயண பாடல் வரிகள் என் நினைவுக்கு வந்தன...
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜன்மமும் மரணமும் இன்றி தீருமே
இம்மையே ராமா என்ற இரண்டு எழுத்தினால்
இப்போதெல்லாம் நானும் எனக்குப் பிடித்த இறை நாமாவைச் சொல்லியே ஆரம்பிக்கிறேன்... முடிக்கிறேன்!