Tuesday, February 28, 2017

மகாபெரியவரின் பெருமை

மகாபெரியவரின் பெருமை

" ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது"

அன்றாட பூஜைகளை முடித்தபின் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் அளித்துவிட்டு, பிட்சைக்குச் செல்வது காஞ்சிமகானின் தினசரி வழக்கம். பிட்சையில் கிடைக்கும் உணவையே அவர் உண்பார்.

ஒருசமயம், வழக்கம்போல் பூஜைகளை முடித்த பின்னர், பிட்சைக்குச் செல்லாமல் மடத்திலேயே இருந்துவிட்டார் மகான். பிட்சைக்குச் செல்லாததால், அவர் உணவும் எடுத்துக் கொள்ளவில்லை. பலரும் வற்புறுத்தியும் உண்ண மறுத்துவிட்டார்.

இது மறுநாளும் தொடர்ந்தது. அன்றும் மகான் உணவருந்தவில்லை. மூன்றாம் நாளும் மகாசுவாமிகள் பிட்சைக்குச் செல்லவில்லை. எனவே, மடத்தில் உள்ளோருக்கு பயம் தொற்றிக் கொண்டது.

மடத்தில் உள்ளோர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவர்களை தண்டிப்பதற்கு பதில் மகான், தம்மையே இப்படி வருத்திக்கொள்வது வழக்கம் என்பதால் அவர்களின் அச்சம் அதிகரித்தது.

அதனால், எல்லோரும் சேர்ந்து சுவாமிகள் முன் சென்று நின்றார்கள். எங்களில் யார் என்ன பிழை செய்திருந்தாலும் தயவு செய்து மன்னித்து, உணவு ஏற்கவேண்டும்...! எனப் பணிந்து வேண்டினர்.

மகா பெரியவர் சிரித்துக் கொண்டே, நீங்கள் யாரும் எந்தத் தவறும் செய்யவில்லை. உங்கள் மேல் எனக்குக் கோபமும் இல்லை. என்னைத் திருத்திக் கொள்ளவே நான் இப்படி உண்ணாவிரதம் இருந்தேன்.
கொஞ்ச நாட்களுக்கு முன் பிட்சையில் கிடைத்த உணவில் வெகு சுவையாக கீரை சமைத்து ருசியாக இருந்ததால், அதனை மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற ஆசை எழுந்தது.

பூஜைகளை முடித்ததுமே, இன்றைய பிட்சையில் கீரை இருக்குமா? என்ற எண்ணம் தோன்ற ஆரம்பித்துவிட்டது.

மூன்று நாட்களாக அந்த எண்ணம் மனதில் நின்றதால்தான், வயிற்றைப் பட்டினி போட்டு அந்த ஆசையை விரட்டினேன்.

ஒரு சன்னியாசிக்கு இது மாதிரியான ஆசைகள் வரக்கூடாது என்றார். ஓர் எளிய கீரைக்குக் கூட ஆசைப்படக் கூடாது என்பதில் வைராக்கியமாக இருந்தால்தான் மகாபெரியவரின் பெருமை என்றும் மதிப்பு குன்றாத வைரமாக மின்னுகிறது.

Saturday, February 18, 2017

‘உடனடி’ கலாசாரம்... புற்றுநோய்க்குக் காரணமாகும்!

பெயரைக் கேட்டாலே நடுக்கத்தை ஏற்படுத்தும் நோய், புற்றுநோய். குழந்தைகள் தொடங்கி முதியோர்வரை, யாரை வேண்டுமானாலும் பற்றிக்கொள்ளத் துடிக்கும் அரக்கன் இது. புற்றுநோய் உருவாகக் காரணம் என்ன? மருத்துவமும் அறிவியலும் எத்தனையோ ஆயிரம் காரணங்களை அடுக்குகின்றன. இருந்தாலும் முக்கியமான ஒரு காரணம், நம் வாழ்க்கை முறை! முக்கியமாக உடனடி கலாசாரம்.

மரங்கள் வெட்டப்படுவதைப் பார்த்துக்கொண்டே கடந்துபோகிறோம். நச்சுக் கழிவுகள் குப்பைகளாகக் கொட்டப்படுவதைச் சாதாரணமாகப் பார்க்கிறோம். பிளாஸ்டிக் கவருக்குள் அடைக்கப்பட்டு, `ஆறு மாதங்களுக்குக் கெட்டுப் போகாது' என்கிற உத்தரவாதத்தோடு சந்தைக்கு வரும் உணவுகளை வாங்கிச் சாப்பிடுகிறோம். புகையை சுவாசிக்கிறோம்; நச்சுக் கலந்த தண்ணீரைக் குடிக்கிறோம்; ரசாயனங்களும் பூச்சிக்கொல்லிகளும் சேர்ந்திருக்கும் உணவைச் சாப்பிட்டு வாழ்கிறோம்... ஆக, புற்றுநோய் வரத்தானே செய்யும்? 

பிளாஸ்டிக் ஆதிக்கம்

இன்றைய பரபரப்பான உலகில், மற்றவரிடம் அக்கறைகொள்ளவோ, கரிசனத்தோடு நடந்துகொள்ளவோ முடியாத நிலையில்தான் நம்மில் பலர் இருக்கிறோம். அதோடு, இன்றைய உலகில் வேகமாகப் போட்டி போடுவதை முன்னிட்டு உடனடி கலாசாரத்துக்குப் பழகிவிட்டோம். இந்த உடனடி கலாசாரத்தை மாற்றிக்கொள்வதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்கிவிடலாம். `இன்ஸ்டன்ட்' அல்லது `ரெடி டு ஈட்' சமாசாரங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு தொடங்கி, முதல் நாள் செய்ததை ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த நாள் சாப்பிடுவது வரை எங்கெங்கும் அவசர யுகப் பயன்பாடே வியாபித்து இருக்கிறது. 

நாம் சமைக்கும் உணவு சில மணி நேரங்களிலேயே கெட ஆரம்பித்துவிடும் என்பது இயற்கையின் நியதி. புளிக்கத் தொடங்குவது, பூஞ்சைகள் வளர ஆரம்பிப்பது என உயிரியல் நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றாக நிகழ்வது இயல்பு. அந்த இயற்கையைச் சிதைத்துவிடுகின்றன உடனடி சாப்பாட்டுச் சமாசாரங்கள். பூஞ்சை வளராமல் இருக்க ஆன்டிஃபங்கஸ், நறுமணம் கெடாமல் இருக்க நைட்ரஜன் ஃப்ளஷ்ஷிங்... இன்னும் என்னென்னவோ தேவைகளுக்காக விதவிதமான ரசாயனங்கள் சேர்க்கப்பட்டுத்தான் `உடனடி உணவு' என சந்தைக்கு வருகின்றன. அதுவும் பாலிதீன் பை அல்லது பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைக்கப்பட்டு வரும் அந்த உணவுகளை ஃப்ரிட்ஜுக்குள்தான் வைக்கிறோம். இது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளும் விஷயம்தானே! 

மாசடைந்த நிலம்

`மூத்த நாள் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்' என்கிறது பண்டைய தமிழ் மருத்துவம். வாய்ப்பு இருக்கும்போது சமைத்து, வசதியாக ஃப்ரிட்ஜில் வைத்துச் சாப்பிடலாம் என்கிறது இன்றைய தமிழ்க் குடும்பம். பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீரை ஊற்றி ஃப்ரிட்ஜில் வைப்பது, காய் கனிகளை பிளாஸ்டிக் பையில் பிரித்து வைப்பது,  முதல் நாளே காய்களை நறுக்கி பிளாஸ்டிக் பையில் போட்டு ஃப்ரிட்ஜில் வைப்பது... இவையெல்லாம் நம் வாழ்க்கையை வேகமாக முடித்துக்கொள்ள நாமே வகுத்துக்கொள்ளும் வழிகள். 

அதிகச் சூட்டிலும், அதிகக் குளிரிலும்தான் பிளாஸ்டிக்கில் இருந்து `டயாக்ஸின்' வாயு வெளியாகும். இரவு முழுவதும் ஃப்ரிட்ஜுக்குள் இருக்கும் பிளாஸ்டிக் பையில் இருந்து கசியும் டயாக்ஸின், உள்ளே இருக்கும் பீன்ஸ் துண்டுகளுக்குப் போயிருக்கும். பிறகு, அந்த பீன்ஸ் பொரியல், புரோட்டீன் தருமோ என்னவோ... கண்டிப்பாகப் புற்றுநோயைத் தரக்கூடும். 

புற்றுநோய்க்கான காரணிகளில் மிக முக்கியமாகப் பேசப்படுவது பிளாஸ்டிக்கும் டயாக்ஸின், பென்சீன் வகையாறாக்களும்தான். சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி முகைமை வெளியிட்டு இருக்கும் புற்றுநோய்க்கான முக்கியக் காரணிகளின் பட்டியலில், தொகுதி 1-ல் பிளாஸ்டிக் துணுக்குகள் உள்ளன. (தொகுதி 1 காரணி என்றால், அது உறுதியாகப் புற்றுநோயைத் தோற்றுவிக்கும். தொகுதி 2, 3 எல்லாம் அவ்வளவு உறுதிப்படுத்தாத காரணிகள்).

`நீர்க் காய்கறியைக் கூட்டாக வைக்க வேண்டும்; பிஞ்சுக் காயைப் பச்சடியாகவும், முற்றிய காயைப் பொரியலாகச் செய்ய வேண்டும். அது மட்டுமல்ல; காய்கறியைக் குழம்பில் சேர்க்க புளிக்கரைசலில் வேகவிடவும் வேண்டும்' என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள். `புளியில் வேகவைத்தால் அதன் புரதச்சத்து, கனிமங்கள் வீணாவது இல்லை. நீர்க் காய்கறிகளில் மிதந்து நிற்கும் வைட்டமின்கள், வற்றவிடாமல், வடித்துக் கொட்டாமல் கூட்டாகச் செய்யும்போது அதன் பயன் சற்றும் கெடாது' என்கிறது தேசிய உணவியல் கழகம். 

ரெடிமேட் உணவுகள்

சரி... ரெடி டூ ஈட் வேண்டாம். உடனடி கலாசாரத்தைத் தவிர்த்துவிடுவோம். அப்படியானால், மாற்று உணவு என்ன? நிறைய இருக்கின்றன. முக்கியமானது அவல். கைப்பையில் கொஞ்சம் சிவப்பரிசி அவலும் சின்னத் துண்டு பனை வெல்லமும் எடுத்துச் சென்றால், மாலைப் பசிக்கு உடனடி அவல் இனிப்பு தயார். கால் மணி நேரம் ஊறவைத்த அவலும் வெல்லமும் உடலுக்கு உறுதியையும் கூடவே இரும்புச் சத்து, வைட்டமின் பி சத்தையும் தரும். 

உடனடியாகச் செய்யக்கூடியது கேழ்வரகு லட்டு. கேழ்வரகு, கால்சியம் நிறைந்த ஒரு தானியம். அதை வாணலியில் வறுத்து, பனைவெல்லம் அல்லது வெல்லத்தை நன்கு உதிர்த்து அதில் கிளறிப்போட்டு, சூடாக இரண்டு டீஸ்பூன் நெய்விட்டு சூட்டோடு உருண்டையாகப் பிடித்துவையுங்கள். இரும்பு, கால்சியம், புரதம் இன்னும் உடலுக்குத் தேவையான பல கனிமங்கள் நிறைந்த இந்த உருண்டை ருசியோடு பசியாற்றும். 

சர்க்கரைநோய் இருப்பவர்கள், பொரி வாங்கிக்கொள்ளலாம். அத்துடன் கொஞ்சம் மஞ்சள் தூள், காரம் சேர்த்து பொட்டலம் கட்டிக்கொள்ளலாம். இப்படி நிறைய உண்டு. 

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு... உடனடி கலாசாரத்துக்கும்!

வெற்றிக்கு வெரி சிம்பிள் 5 டிப்ஸ்!

Morning motivation

"ஒரே மாதிரியான செயல்களைச் செய்துவிட்டு, வித்தியாசமான முடிவுகளை எதிர்பார்ப்பதற்குப் பெயர் என்ன தெரியுமா? அதற்குப் பெயர், முட்டாள்தனம்" - இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது. ஒரே மாதிரியான செயல்களை நாம் செய்யும்போது தோல்வி ஏற்படுகிறதெனில், நாம் அதற்கான மாற்று வழிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நமது தோல்விக்கான விடையும் கிடைக்கும். தோல்வி வேண்டவே வேண்டாம். வெற்றி மட்டுமே வேண்டும் என்பது சாத்தியமில்லைதான். ஆனாலும்,  வெற்றி மட்டும்தான் வேண்டுமென்பவர்களுக்கான ஐந்து டிப்ஸ்..

"எங்கு தவறு செய்தீர்கள் என்பதைக் கண்டுபிடியுங்கள்" 

நீங்க எங்கு தவறு செஞ்சிருப்பீங்கனு கண்டுபிடிக்கச் சுலபமான வழி. நீங்க செய்த செயல்களை அப்படியே ஒரு படம் பார்ப்பதைப் போல முன்னிறுத்திக்கொள்ளுங்கள். கொஞ்சம் நிறுத்தி நிதானமாக ரீவைண்ட் பண்ணிப்பாருங்க. ஒரு படம் பார்க்கும்போது எப்படி பாடல்,  வசனம், காமெடியெல்லாம் நினைவில் வருமோ, அதே போல நீங்க எந்த இடத்தில் தப்பு பண்ணினீங்கனு கரெக்டா உங்களால கண்டுபிடிக்க முடியும். அந்த இடத்தைத்தான் நாம் நம்முடைய செயல்பாடுகளில் சரி செய்துகொள்ள வேண்டும். 

"வேற லெவல்ல யோசிங்க பாஸ்"

வேற லெவல்ல யோசிக்கணும்னு சொன்னதும் பயந்துட வேண்டாம் பாஸ். எல்லா சக்ஸஸ் ஃபார்முலாவும் ரொம்ப எளிமையானதாதான் எப்பவும் இருக்கும். அதனால, ரொம்ப எளிமையான விஷயங்கள் மேல கவனம் செலுத்தி, நாம் எந்த இடத்தில் எப்போது தவறு செய்திருக்கிறோம் என்பதை அறிந்து, அதைத் தவிர்த்து, வெற்றி பெறுவதற்கான வழிகளை அமைத்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த தோல்வியிலிருந்து மீண்டு வருவது என்பதைக் கண்டறிந்து, நமக்கான படிநிலைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத்  தொடர்ந்து கடைப்பிடிக்கவும் வேண்டும்.

"உங்க குருகிட்ட அடிக்கடி பேசுங்க"

நீங்கள் வாழ்க்கையில் தடுமாறும்போது, வழிகாட்ட உங்களுக்கென்று எப்போதும் உறுதுணையாய் இருக்கும் உங்கள் வழிகாட்டியிடம் உரையாடுங்கள். உங்கள் தோல்விக்கான பதில் கிடைக்கும். அவர்கள் உங்கள் வெற்றிக்குப் பரிந்துரைக்கும் செயல்களைக் கடைப்பிடியுங்கள்.

"நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் கருத்துக்களைக் கேளுங்கள்"

நம்மைக் காட்டிலும் நம்மை நன்கு அறிந்தவர்கள் நமது நண்பர்களும், பெற்றோர்களுமே. நாம் எதை எப்படிச் செய்தால், வாய்க்கும் என்பதை நன்கு அறிந்தவர்கள் அவர்கள். ஆக, அவர்களின் கருத்தையும் கேட்பது சிறந்தது. அது, மேலும் நமது வெற்றிக்கு வித்திடும்.

"உங்களைச் சுற்றி எப்போதும் நல்ல மனிதர்களை வைத்துக்கொள்ளுங்கள்"

சில சமயம் சிலருடைய தீய எண்ணம்கூட உங்களை தோல்வியில் கொண்டுப்போய்ச் சேர்த்துவிடும். அவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் உங்கள் குறிக்கோளை நோக்கிச் செல்லுங்கள். நாம் துவண்டுபோகும் நேரங்களில் நம்மைச் சுற்றியுள்ள மக்கள் கொடுக்கும் உற்சாகமே நம்மை வழி நடத்திச் செல்லும். எனவே, நமக்கு ஊக்கமளித்து நல்வழிப்படுத்தும் மனிதர்களை நமது சுற்றத்தில் வைத்திருப்பது நல்லது. நமது இலக்கை அடைய இவர்கள் தரும் உற்சாகம், நமக்கான வெற்றியில் பாதியைத் தேடித் தரும்.

தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான முயற்சிகளை நாம் கையாண்டால் வெற்றி நிச்சயம்!